மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 20 ஜன 2020

வங்கிகளின் வாராக்கடன் : ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு

வங்கிகளின் வாராக்கடன் : ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு

வங்கிகளை சீர்படுத்தும் முயற்சி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக வங்கியில் இருக்கும் வாராக்கடன்கள் குறித்து வெளிப்படையாக அறிவிக்கவேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. அதற்கென சில அறிவுறுத்தல்களையும் செய்திருந்தது. இந்நிலையில் வங்கிகளின் வாராக்கடன் பற்றிய அறிவிப்பு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் 40 வங்கிகளின் மோசமான கடன்கள் (Bad Loans) ரூ.4,38,000 கோடிகளாக இருந்தது, கடந்த மார்ச் இறுதியில் ரூ.5,80,000. இதனால் வங்கிகளின் பங்குகள் கடுமையான சரிவைச் சந்தித்தன. இந்நிலையில் வங்கிகளின் மோசமான கடன் பட்டியலில் உள்ள தொகை தொடர்ந்து அதிகரிக்கும் என்று கூறப்பட்டது. எனவே, இதற்கு உடனடியாக ஏதேனும் செய்யவேண்டும் என்று தீவிரமாக ஆலோசனை நடத்திய ரிசர்வ் வங்கி, நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதற்கு ‘Scheme for Sustainable Structuring of Stressed Assets’ (S4A) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன்படி வங்கிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடனில் பாதியை, பங்காக (equity) மாற்றிக்கொள்ளலாம்.

இதன் மூலம் வங்கிகளின் மோசமான கடனில் உள்ள தொகை ஒரு கட்டுக்குள் வரும் என்பதோடு தடுமாற்றத்தில் இருக்கும் உள்கட்டமைப்பு, இரும்பு மற்றும் ஸ்டீல் துறை நிறுவனங்கள் பணத்தை உடனடியாக கட்ட வேண்டிய நெருக்கடி இன்றி கொஞ்சம் மூச்சு விட்டுக்கொள்ளலாம். ஆனால், இந்த திட்டத்தில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த நிறுவனங்களுக்கு உடனடியாக கடன் வழங்கக்கூடாது, இவர்களின் கடன் தொகையை பேச்சுவார்த்தை நடத்தி குறைப்பதோ, வட்டி விகிதத்தை குறைப்பது போன்ற செயல்களிலோ ஈடுபடக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

செவ்வாய், 14 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon