மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 27 ஜன 2020

ரயில்வே: அரை டிக்கெட்டுகளை ஒழித்ததால் ரூ.20 கோடி வருவாய்

ரயில்வே: அரை டிக்கெட்டுகளை ஒழித்ததால் ரூ.20 கோடி வருவாய்

ரயிலில் பயணம் செய்யும், ஐந்து வயதிலிருந்து பன்னிரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் கட்டணத்தில் பாதி வசூலிக்கப்படுவது கடந்த பல ஆண்டுகளாக வழக்கில் இருந்த ஒன்றாகும். ஆனால், இத்திட்டம் கடந்த ஏப்ரல் 21ல் இருந்து மாற்றப்பட்டது. அதாவது முழு சீட்டு அல்லது பெர்த் வேண்டுமானால் முழு கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், வெறுமனே பயணம் செய்வதற்கு பாதி கட்டணம் போதுமானது என்று ரயில்வே தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது. மக்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இது அநீதியான ஒன்று, ரயில்வே என்பது வெறும் லாபம் ஈட்டும் நிறுவனம் மட்டுமல்ல என்று பலரும் கூறினர்.

தற்போது இதுதொடர்பாக செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்ததில் இருந்து, இப்போது வரை சுமார் ரூபாய் 20 கோடி வரை வருவாய் கிடைத்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 2014 - 15ம் ஆண்டில் 2.11 கோடி குழந்தைகள் பாதி கட்டணத்தில் பயணம் செய்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இந்த குழந்தைகள் முழு சீட்டையும் எடுத்துக் கொள்வதால், மற்ற பயணிகளுக்கு இடம் கிடைப்பதில்லை என்று ரயில்வே தரப்பு கூறுகிறது. லட்சக்கணக்கானோர் பயணிக்கும் ரயில்வே துறையில் எல்லோருக்கும் இடம் கிடைப்பது சாத்தியமே இல்லை. எனவே, இதுபோன்ற திட்டங்கள் தேவையாகிறது என்று ரயில்வேயின் செயல்பாட்டுக்கு நியாயம் கற்பிக்கப்பட்டது. இத்திட்டம் அமலுக்கு வந்தபிறகு, 5 வயதிலிருந்து 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மடியில் உட்காரவைத்து அழைத்து செல்லப்பட்டனர். இன்னும் சிலரோ, ‘சின்னக்குழந்தைகள் தானே’ என்று இடம் கொடுத்து உட்காரவைத்தனர். அரசாங்கம் வருமானம் மட்டுமே நோக்கமாக இருந்த நிலையில், பயணிகள் தங்கள் பொறுப்புணர்ந்து நடந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 14 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon