மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 29 ஜன 2020

ஜெயலலிதா டெல்லி செல்லும் காரணம்!

ஜெயலலிதா டெல்லி செல்லும் காரணம்!

முதலமைச்சர் ஜெயலலிதா இன்று டெல்லி செல்கிறார். புதிய ஆட்சி அமைந்தபிறகு அவர் செல்லும் முதல் அரசுமுறை பயணமாகும். டெல்லி செல்லும் ஜெயலலிதா அங்கு பிரதமர் மோடியைச் சந்தித்து பேசவுள்ளார். இச்சந்திப்பின்போது தமிழகத்துக்குத் தேவையான கூடுதல் நிதி உதவி, தமிழக மீனவர்கள் பிரச்னை உள்ளிட்ட பல விஷயங்கள் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்பார்ப்புகள் குறித்தும், இந்தச் சந்திப்புகளால் தமிழகத்துக்குக் கிடைக்கக்கூடிய பலன்கள் குறித்தும் தமிழகத்தின் மூத்தப் பத்திரிகையாளர்களில் ஒருவரான டி.எஸ்.எஸ். மணி அவர்களிடம் கேட்டோம். அப்போது, “ஒரு புதிய மாநில அரசு அமைந்தவுடன் டெல்லி சென்று மத்தியில் உள்ள ஆட்சியாளர்களைச் சந்திப்பது இந்தியத் துணைக்கண்டத்தில் வழக்கமானதுதான். நிதிஷ்குமார், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பாஜக-வுக்கு நேர் எதிராக இருப்பவர்கள்கூட அதைச் செய்கிறார்கள். அதுவும் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டப் பிறகு ஜெயலலிதா செல்வது கூடுதல் பலமாகும். அதிமுக மக்களைவையில் 37, மாநிலங்களவையில் 13 எம்.பி-களுடன் வலுவாக உள்ளது. எனவே, பாஜக-வுக்கு அதிமுக-வினுடய உதவி உடனடி தேவையாக உள்ளது. மோடி உலகம் முழுவதும் உள்ள கார்ப்பரேட்டுக்களிடம் சென்று ஜி.எஸ்.டி-யை கொண்டுவந்து விடுவதாக வாக்குறுதி அளித்துள்ளார். ஆனால், அதில் மாநில நலன்கள் குறித்து ஆரம்பத்திலிருந்தே கறாராக இருந்தது அதிமுக-தான். எனவே, மாநில நலன்களுக்கு தேவையானவற்றை விட்டுக்கொடுக்க வேண்டிய நிர்பந்தம் பாஜக-வுக்கு உள்ளது. மசோதாக்களுக்கு அதிமுக-வின் வாக்குகள் முக்கியம் என்பதால்தான் தேர்தலில் மோடியோ, நிர்மலா சீதாராமனோ, வெங்கய்ய நாயுடுவோ அதிமுக-வை விமர்சிக்கவில்லை. ஆனால், பாஜக-வை வலுப்படுத்துவதற்காக பியுஷ் கோயல், ஜவடேகர் எல்லோரும் இறங்கி வேலை பார்த்தனர். அதிமுக-வைக் கடுமையாக விமர்சித்தனர். ஜெயலலிதாவைப் பொருத்தவரை மோடி முன்வைக்கும் இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்வார். அவர் அதிகாரிகளுடன் தானே அமர்ந்து, விவாதித்து, புள்ளி விவரங்களைத் தொகுத்து, 'இம்ப்ரஸிவாக' பாயிண்ட்களை அடுக்கி, எதையும் அறிக்கையாகத் தயாரிக்கக்கூடியவர். மொத்தமாக எல்லாவற்றையும் கேட்டு, நான்கு விஷயத்தை மட்டும் 'கவளம் கவளமாக' பெறுவதுதான் ஜெயலலிதா பாணி. இம்முறை மீனவர்கள் பிரச்னை, நிதிஉதவி ஆகியவற்றை பேசுவார் என எதிர்பார்க்கலாம். பயணத்தால் நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது" என்றார்.

இந்நிலையில் ஜெயலலலிதாவின் பயணத்தை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், “ஜெயலலிதாவின் டெல்லி பயணம் தமிழக மக்களுக்கு எந்தப்பயனும் அளிக்கப்போவதில்லை. பிரதமர் உடனான சந்திப்பின்போது தன்னுடைய சொத்துக் குவிப்பு வழக்குகள், ரூ.570 கோடி விவகாரம் குறித்துதான் ஜெயலலிதா பேசவுள்ளார்” என்று விமர்சித்துள்ளார்.

முதல்வரின் நிகழ்ச்சி நிரல்: காலை 11 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்புகிறார். 11.30 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானத்தில் டெல்லி செல்கிறார். 2 மணிக்கு டெல்லி சென்றடைவார். 2.30 மணிக்கு டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்குச் செல்கிறார். மாலை 4.00 மணிக்கு தமிழ்நாடு இல்லத்தில் இருந்து பிரதமர் இல்லத்துக்குச் செல்கிறார். பின்னர் சரியாக 4.30 மணிக்கு பிரதமரைச் சந்திக்கிறார். 50 நிமிடங்கள் பிரதமரைச் சந்தித்து பேசுகிறார். 32 பக்க கோரிக்கை மனுவினை பிரதமரிடம் வழங்குகிறார். பின்னர் 7 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னை செல்கிறார். 9.30 மணிக்கு போயஸ் இல்லத்தைச் சென்றடைகிறார்.

செவ்வாய், 14 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon