மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 29 ஜன 2020

யோகா தினம்-புலன் விசாரணை வேண்டும்: சீத்தாராம் யெச்சூரி

யோகா தினம்-புலன் விசாரணை வேண்டும்: சீத்தாராம் யெச்சூரி

மலேசியாவில் பாஜக-வின் அயல்நாட்டு நண்பர்கள் சார்பில் நடைபெறவுள்ள சர்வதேச யோகா தினத்துக்கு மத்திய அரசின் உதவியுண்டு என்று விளம்பரங்கள் வெளியாகியிருப்பது எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. இதுதொடர்பாக, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“மலேசியாவில் வெளியாகியுள்ள சுவர் விளம்பரமொன்றின் நகலை இத்துடன் இணைத்திருக்கிறேன். இது, மலேசியாவில் உள்ள பாஜக-வின் அயல்நாட்டு நண்பர்கள் சார்பில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில், 2016 ஜுன் 19 அன்று அங்கே நடைபெறவுள்ள சர்வதேச யோகா தினத்துக்கு இந்தியத் தூதரகம், வெளியுறவுத்துறை அமைச்சகம், மத்திய ஆயுஷ் அமைச்சகம் மற்றும் இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சில் ஆகியவற்றின் ஆதரவும் உண்டு என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வெளிநாடுகளில் உள்ள அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளுக்கு இந்திய அரசோ அல்லது அதன் ஆணையங்களோ அல்லது அதன் எந்த அங்கமுமோ ஆதரவு அளித்திடக்கூடாதென்றே நான் இதுவரை அறிந்துவைத்திருக்கிறேன். ஆனால் வெளிநாடுகளில் உள்ள தங்கள் கட்சியைச் சேர்ந்த ஆதரவு அமைப்புகளுக்கு மத்திய அரசும், ஆளும் கட்சியும் எப்படி உதவலாம் என்று கேட்டு முறையீடுகள் வந்திருக்கின்றன. அங்கே நடைபெறும் நிகழ்ச்சிக்கு உங்கள் தலைமையின்கீழ் இயங்கும் அமைச்சகமும் ஆதரவு அளித்திடும் என்று கூறப்பட்டிருக்கிறது. இது மிகவும் ஆழமான விசயமாகும். இது, முறையாக புலன் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகும்” இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய், 14 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon