மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 20 ஜன 2020

‘தீன்’ வித்யாபாலனிடம் ‘தீன்’ கேள்விகள்!

‘தீன்’ வித்யாபாலனிடம் ‘தீன்’ கேள்விகள்!

‘தீன்’ இந்தி திரைப்படத்தில் சிறப்பாக நடித்திருப்பதன் மூலம் மீண்டும் பாராட்டு மழையில் நனைந்துகொண்டிருக்கிறார் நடிகை வித்யாபாலன். அவர் நன்றாக நடிப்பார், நடனமாடுவார் என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்தவை. ஆனால் அவரைப் பற்றி தெரியாத விஷயங்கள் என்ன என்பதைப் பற்றி ‘தீன்’ என்ற தலைப்பில் ஃபிலிம்பேர் பத்திரிகை அவரிடம் மூன்று கேள்விகளைக் கேட்டு ஒவ்வொன்றுக்கும் மூன்று பதில்களைப் பெற்றிருக்கிறது.

கேள்வி: உங்களைப் பற்றி யாருக்கும் தெரியாத மூன்று விஷயங்கள்?

வித்யாபாலன்: எனக்கு செருப்பு என்றால் பிடிக்காது; செருப்பு இல்லாமல் உலகையே சுற்றிவருவேன். தலைமுடியைச் சீவுவது எனக்கு பிடிக்காது.

லேபிள் மைக் அணிந்துகொள்வது பிடிக்காது

முதல் கேள்வியிலிருக்கும் சுவாரஸ்யமான விஷயம், வித்யாபாலனுக்கு செருப்பு அணிய பிடிக்காது என்பதுதான். பொதுவாக ஷூட்டிங் ஸ்பாட்டில்கூட அவர் செருப்பு அணியாமல்தான் இருப்பார். ஷூட்டிங் தொடங்கும்போதுதான் செருப்பு அணிந்துகொள்வார். அதனாலேயே வித்யாபாலன் நடிக்கும் காட்சிகளின்போது, தரையைச் சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்பதில் பாலிவுட்டின் யூனிட் ஆட்கள் கவனமாக இருப்பார்கள்.

கேள்வி: உங்களது மூன்று ஆசைகள்?

வித்யாபாலன்: நீச்சல் கற்றுக்கொள்ளவேண்டும். வூடி ஆலெனுடன் நடிக்கவேண்டும். எல்பா இட்ரிஸை என் முட்டியில் இடிக்க வேண்டும் (எல்பா இட்ரிஸ் ஆங்கில நடிகர்).

இரண்டாவது கேள்வியில் சுவாரஸ்யமான பதில், நீச்சல் கற்றுக்கொள்வது தான். வூடி ஆலெனுடன் நடிக்கவேண்டும் என்ற ஆசை சாதாரண நடிகைகளுக்கே இருக்கும்போது, வித்யாபாலனுக்கு இருக்காதா? ‘தி டர்ட்டி பிக்சர்’ படத்தில் நடிக்கும்போது, ‘ட்விங்கிள் ட்விங்கிள்’ பாடல் காட்சியில் வித்யாபாலன் நீச்சலடிப்பது போன்ற காட்சி திட்டமிடப்பட்டது. ஆனால் வித்யாபாலனுக்கு நீச்சல் தெரியாது என்பதால், குறைந்த அளவு நீரில் உட்கார்ந்தபடி சில மூவ்மெண்டுகளை செய்திருப்பார் வித்யாபாலன்.

கேள்வி: உங்களைக் கோபப்படுத்தும் மூன்று விஷயங்கள்…

வித்யாபாலன்: சத்தம், ஒழுக்கமின்மை, ஃபோட்டோ எடுக்கும்போது என் தோள் மீது கை போடுபவர்கள்.

கடைசிக் கேள்வியில், சுவாரஸ்யமானது கடைசி பதில். இந்தப் பேட்டியில் கொஞ்சம் நாகரீகமாக சொல்லியிருக்கிறார். கூகிளில் தேடினால்கூட வித்யாபாலனுடன் ரசிகர்கள் எடுத்துக்கொண்ட செல்ஃபி கிடைப்பது கஷ்டம். அந்த அளவுக்கு செல்ஃபியை வெறுப்பவர் வித்யாபாலன். ‘செல்ஃபி எடுத்துக்கொள்ள மிகவும் நெருங்கி வந்து நிற்கிறார்கள். அது எனக்கு பிடிக்கவே பிடிக்காது. ஃபோட்டோ எடுப்பதில் கூட வரைமுறை உண்டு. சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது ஃபோட்டோ எடுத்துக் கொள்ளட்டுமா என்று கேட்பவர்களை, சாப்பிட்டு முடிக்கும்வரை காத்திருக்கச் சொல்லிவிடுவேன்’ என ஒருமுறை காட்டமாக பேசியிருந்தார் வித்யாபாலன்.

செவ்வாய், 14 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon