மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 27 ஜன 2020

ஐபிஎல் 9 : வருமானம் எவ்வளவு?

ஐபிஎல் 9 : வருமானம் எவ்வளவு?

இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல்லோடு சேர்த்து மொத்தம் 9 சீஸன்கள் நடைபெற்றுள்ளன. இந்த ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி தொடங்கிய போட்டிகள் மே 29 வரை நடைபெற்றுள்ளன. சுமார் இரண்டு மாதங்கள் நடைபெற்ற இந்த போட்டிகள் மூலம் ரூ.2500 கோடி வருமானமாக கிடைத்துள்ளது. இந்த பணமானது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட விளம்பரங்கள், ஸ்டேடியத்தில் விற்கப்பட்ட டிக்கெட்டுகள், ஸ்பான்சர்ஷிப்புகள் போன்றவை மூலமாக கிடைத்துள்ளது. இந்த விளையாட்டுக்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய சோனி பிக்சர்ஸ் நிறுவனம் ரூ.1,100 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது. அதேபோல 8 ஐபிஎல் டீம்களும் தலா ரூ.200-லிருந்து ரூ.230 கோடி வரை வருமானமாகப் பெற்றுள்ளன. பிசிசிஐ அமைப்புக்கு ரூ.220 கோடியிலிருந்து ரூ.250 கோடி வரை கிடைத்துள்ளது.

மொபைல் செயலியில் கிரிக்கெட் வழங்கிய ஹாட்ஸ்டார் நிறுவனம் ரூ.40 கோடி சம்பாதித்துள்ளது. ஸ்டேடியத்தில் விற்கப்பட்ட டிக்கெட்டுகள் மூலமாக மட்டும் ரூ.150-லிருந்து ரூ.160 கோடி வரை வருமானமாக கிடைத்துள்ளது. இது ஒருபுறமென்றால், டிக்கெட்டுகள் மூலமாக ஒவ்வொரு டீமும் கணிசமான வருவாய் ஈட்டியுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரூ.25 கோடியும், மும்பை இந்தியன்ஸ் ரூ.26 கோடியும், டெல்லி டேர்டெவில்ஸ் ரூ.24 கோடியும், ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் ரூ.20 கோடியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.18 கோடியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ரூ.16 கோடியும், குஜராத் லயன்ஸ் ரூ.15 கோடியும், கிங்க்ஸ் 11 பஞ்சாப் ரூ.14 கோடியும் வருவாயாக ஈட்டியுள்ளன. பிசிசிஐ டிக்கெட் மூலம் ரூ.10 கோடி வருமானமாகப் பெற்றுள்ளது.

ஐபிஎல் வருவாயானது ஒவ்வொரு ஆண்டும் பத்திலிருந்து பன்னிரண்டு சதவிகிதம் வரை வளர்ச்சியடைந்து வருவதாகத் தெரிவிக்கிறார்கள். இந்த முறை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளை 1.02 பில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. மொத்தம் ஐந்து தொலைக்காட்சிகள் இந்த போட்டிகளை ஒளிபரப்பின. இதில் சோனி மேக்ஸ், சோனி ஈஎஸ்பிஎன், சோனி சிக்ஸ் ஆகிய தொலைக்காட்சிகள் சோனியிலிருந்து வெளியாகும் அதிகாரப்பூர்வ சேனல்கள் ஆகும்.

ஆரம்ப காலத்தில் ஆண்டுதோறும் நாற்பதிலிருந்து ஐம்பது சதவிகித வளர்ச்சியை எட்டிய ஐபிஎல் தற்போது பத்திலிருந்து பன்னிரண்டு சதவிகிதம் வளர்ச்சியையே சந்தித்து வருகிறது. இதனால் ஐபிஎல் மீதான மோகம் குறைந்துள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

அதே போல மொபைல் மூலம் பார்ப்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஹாட்ஸ்டார் மூலம் 41 மில்லியன் பேர் கிரிக்கெட் பார்த்தனர். இந்த ஆண்டு இது இரு மடங்காக அதிகரித்து சுமார் 100 மில்லியனாக அதிகரித்துள்ளது. அடுத்த ஆண்டு 4ஜி சேவை பலரையும் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மொபைல் பார்வையாளர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல இணையத்தின் மூலம் ஸ்கோர் பார்ப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ‘கிரிக்பஸ்’ நிறுவனம், இணையதளத்தில் உடனுக்குடன் கிரிக்கெட் ஸ்கோர் வழங்கும் நிறுவனம் ஆகும். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த இணையதளத்தின் பார்வையாளர்கள் 40 சதவிகிதம் கூடியுள்ளனர். இந்த தளத்தில் ஒருநாளைக்கு 30 பில்லியன் பார்வைகள் நடந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

- ஸ்வரா வைத்தீ

செவ்வாய், 14 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon