மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 2 ஜுன் 2016

கண்ணகியும் காளியும்தான் எம் பெண்களின் கவுன்சிலிங் - தொடர்ச்சி!

கண்ணகியும் காளியும்தான் எம் பெண்களின் கவுன்சிலிங் - தொடர்ச்சி!

தமிழ்நாட்டில் டாஸ்மாக் பிரச்னையால் அப்பாவை இழந்து குடும்ப பாரத்தைச் சுமக்க நிர்பந்திக்கப்பட்ட பெண்களும் சிறுவர் சிறுமியர்களும் ஏராளம். போர் காரணமாக அங்கும் இதே சூழல்தான் இருக்கிறது. அவர்கள் வாழ்வாதாரத்துக்காக என்ன செய்கிறார்கள்? அவர்களின் நிலை என்ன?

இலங்கையைப் பொருத்தவரை என்ன ஆனாலும் எப்படியாவது பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். நீங்கள் சொல்வதுபோல் அம்மா வேலைக்குப் போவதால் தனக்கு கீழ் உள்ள குழந்தையைக் கவனிக்க வேண்டி இருப்பதால் பொறுப்பு கூடுது. அதனால் சமூகப் பிரச்னைகளும் வருது. அவர்களது காணியில் ஒரு வீதம் இலங்கையிடம் இருக்கு. தொழில் வாய்ப்புக்கு அடிப்படையான பாதுகாப்பே அங்கு இல்லை. இலங்கையில் உள்ள 18 ஆர்மி செக்‌ஷனில் 16 நிலை வடகிழக்கில் தமிழர் வாழும் பகுதியில்தான் இருக்கிறது. இப்படி இருக்கையில், அவர்கள் அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் துஷ்பிரயோகம் பயங்கரமாக நடக்கிறது. குறிப்பாக பெண்கள், வன்னியில் வேலை காரணமாக வெளியே செல்லக்கூடிய பிள்ளைகள் எல்லோரும் பாவிக்கப்பட்டவர்கள், துஷ்பிரயோகப் படுத்தப்பட்டவர்கள் என்ற கதை பரப்பப்படுவதால் எல்லா வகையிலும் அவர்கள் கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள். அது பிழை. அது பொய்.

இதற்கு அடுத்தும் படம் பண்ணும் எண்ணம் இருக்கிறதா?

நான் ஒரு சினிமா எடுக்கோணும் என்று எடுக்கயில்லை. சினிமாத் துறையில் ஈடுபடணும் என்ற ஆசையில் படம் பண்ணவில்லை. ஏதாவது செய்யணும். இப்போது வலிய படம் பண்ண வந்த நாங்கள் வலியை அனுபவித்தோம். அந்த வலி, மூலமாக இன்னொரு படம் தரலாம். ஆனால், இதிலிருந்து மீண்டு வரவே ஒரு 5 வருஷம் எடுக்கும். இந்த இரண்டரை வருஷத்தில் நிறைய கஷ்டங்களை அனுபவித்து விட்டோம். இருந்தாலும், இதில் ஒரு நாட்டம் இருக்கு. யாழ்ப்பாணத்தில் பிறந்த நான், யாழ்ப்பாணத்தில் வளர்ந்த நான், தமிழர் பகுதியில் பயங்கர பற்றுள்ள நான், என்னுடைய பகுதியில் ராணுவம் இருப்பதை, என்னை அடக்குவதை எந்த காலத்திலும் நான் அனுமதிக்க மாட்டேன். அதற்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்.

அங்குள்ள இயக்குநர்களுடன் தொடர்பில் இருக்கிறீர்களா? அவர்களின் சினிமாக்கள் குறித்து?

ஆம். அங்கு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள்தான் இயக்குநர்களாக இருக்கிறார்கள். இயக்கத்தில் இருந்த சிலர் இப்போது தான் தமிழர்கள் படம் எடுப்பதற்கான வெளி மெல்ல உருவாகி வருகிறது. இந்தப் படத்துக்கு உதவி செய்தவர்களில் முக்கியமானவர் தர்மஸ்ரீ பண்டாரநாயக, பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர். அவர் இல்லையென்றால் இந்தப் படத்தை முடித்திருக்க முடியாது. டைரக்டர் கில்டுக்குப் போய் எத்தனையோ முறை அலைந்தபோதும் எனக்கு இன்னும் இயக்குநர் உறுப்பினர் அட்டை கூட கிடைக்கவில்லை. Let Her Cry படம் எடுத்த Asoka Handagama பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்.

அவர், தமிழ் ஆட்களைப் பற்றி அவர்களுடைய வியூவில் படம் எடுத்திருக்கிறார். அது எனக்கு கஷ்டமா இருக்கு. நீங்க எப்பவுமே தமிழ் ஆளை விக்டிமாத்தான் கட்டுவீங்களா? We Are victimized. But I Don't Want Be A Victim. தமிழ் ஆட்களைப் பாவமாத்தான் பார்ப்பீர்களா? என்ற கேள்விதான் எனக்குள் எழுகிறது. அவங்களுக்கு சம உரிமை கொடுங்கன்னு கேட்கறதைகூட அவங்க பாவம்னு சொல்லித்தான் கேட்பீங்களா? பிரசன்ன விதானகேயின் படங்களையும் அப்படித்தான் பார்க்கிறீர்களா? என்று கேட்கவுடன், இடைமறித்தவுடன் பிரசன்னா thousand times better. வித் யு வித் அவுட் யு அடாப்ஷன் ஃபிலிம் என்ற முறையில் நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அந்த கடைசி தற்கொலை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

அண்மையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய ‘கூர்வாளின் நிழல்’ தமிழினி நாவல் குறித்து?

நான் படிக்கயில. கேள்விப்பட்டிருக்கேன். எனக்கு அது கொஞ்சம் கஷ்டமான விஷயம். என்னால் அதை ஏத்துக்க முடியல. அதை அவர்தான் எழுதினாரா என்பது எனக்கு தெரியாது. ஆனால், ஒண்டு சொல்லுவேன். தமிழினிக்காக நான் போக முடிய இல்லை. ஆனால், என் சார்பாக, சட்டத்தரணிகள் (வழக்கறிஞர்கள்) போயிருக்கு. அவள் பட்ட கஷ்டங்கள் நிறைய. வெளியிலிருந்து பார்த்த எங்களுக்கே நாங்கள் அவர்களை கை விட்டு விட்டோமோ என்ற குற்ற உணர்ச்சி இருக்கிறது. கடைசியில் தமிழினி பார்த்த கேன்சர் ஸ்பெஷலிஸ்ட் ஒரு சிங்கள டாக்டர். அப்போ அவங்க கஷ்டப்பட்டிருக்க யார் உதவுனது என்ற கேள்வி இருக்கு இல்லையா? எனக்கு தனிப்பட்ட முறையில் சென்சார் போர்டுக்கு கிளியரன்ஸுக்கு உதவிய 2 பேரும் சிங்களவர்கள். ஜஃப்னா பிலிம் பெஸ்டிவலில் போடும் நிலைமையை உருவாக்கிய பெண் அனோமா ராஜகரோனா ஹெல்ப், டப்பிங் பிரச்னையால் சிறைச்சாலைக்கு போகும் சூழல் வந்தபோது உதவியர் தர்மஸ்ரீ பண்டாரநாயக. இவர்கள் இருவருமே சிங்களவர்கள்.

இவர்களிடம் எனக்கு நன்றி இருக்கு. ஆனால், அது நன்றி உணர்வின் அர்த்தம், நான் அவர்கள் அடிமை என்பதல்ல. நம்பிக்கை துரோகம் என்பது மிகவும் கொடூரமானது. தமிழினிக்கு அது இருந்ததா என்ற கேள்வி எழுகிறது. அதை அவர்தான் எழுதினாரா? என்பதும் தெரியவில்லை.

அண்மையில் கேன்ஸ் விழாவில் விருது பெற்ற தீபன் குறித்து?

இலங்கையில் போட்ட நேரம் தீபன் படம் பார்க்கலை. கள்ளமா படம் பார்க்க எனக்கு பிடிக்கவில்லை. சிலர் பிடிக்கவில்லையென்றால் அது அரசியல் ஆக்கப்படும். படத்தை பார்த்த பிறகுதான் சொல்ல முடியும்.

தமிழ்நாட்டில் இலங்கையிலிருந்து வந்த படம் எதுவும் வெகுஜன மக்கள் பார்வைக்குத் திரையிடப்படவில்லை. படத்தில் யுத்தம் குறித்த காட்சிகள் ஏதும் இல்லை என்றும், தமிழர்களின் ஆதங்கம் மற்றும் வலியையே பதிவு செய்திருப்பதாக சொல்கிறீர்கள். இந்த படம் இங்குள்ள தமிழர்களிடம் என்ன பாதிப்பை உண்டாக்கும் என நினைக்கிறீர்கள்? இந்த நிலைமைக்கு காரணமானவர்களை கேள்வி கேட்காமல், வலியை மட்டும் பதிவு செய்வது எந்த வகையில் சரியாக இருக்கும்?

Thats what I say nuances. திரைப்பட விழாவுக்காக இந்தப் படத்தை எடுக்கவில்லை. இதை ஆட்கள் பார்க்க வேண்டும் என்றுதான் எடுக்கிறேன். எங்கள் சுய கவுரவமும் மரியாதையும் பறிக்கப்படுகிறது. இது பொலிடிக்கல்னா, இதைப் பேசும் இந்தப் படமும் பொலிடிக்கல். முன்னாள் போராளி, போராட்டத்தை விட்டு ஒரு குழந்தையை வளர்க்கிறது என்பது ஒரு பெண்ணின் போராட்டம். அது பொலிடிக்கல் இல்லையா? ஒரு ஆண் தன் மொழிக்காக மண்ணுக்காகப் போராடுவது அரசியல் இல்லையா? நாங்க எதுக்காக சண்டை பிடிக்கிறோம். மொழிக்காக, மண்ணுக்காகவும் தானே! நான் போராடல, வெளியில போய்விட்ட அந்த குற்றஉணர்ச்சி எனக்கு எப்பவும் இருக்கு.

உண்மையில் அங்கு ஏதாவது மாற்றம் நடந்திருக்கிறதா?

அவர்களால் வாழ முடிகிறது. ஆனால் சாப்பிடறதும் சர்வைவலும் மட்டும் வாழ்க்கையில்லை. சுய கவுரவத்துடன் வாழக்கூடிய வாழ்க்கைதான் நாங்கள் எதிர்பார்ப்பது. அது இப்ப இல்லை. அதேநேரம் ஜனவரி மாதம் புதிய அரசாங்கம் வந்த பிறகு மூச்சு விடக்கூடிய அளவுக்கு ஸ்பேஷ் கிடைச்சிருக்கு.

சென்சார் போர்டு பிரச்னைகள் குறித்து தயாரிப்பு பணிகளை மேற்கொண்ட டி.எஸ்.எஸ். மணி பேசுகையில்…

“எவ்வளவோ போராடி டெல்லியில் சென்சார் வாங்கிய பிறகும் திரும்பவும் இங்குள்ளவர்கள் படத்தைப் பார்த்து விட்டு, ஒரு காட்சியை வெட்டியுள்ளார்கள். இந்தியா முழுக்க விதிமுறை ஒன்றுதானே? டெல்லியில் பார்த்து அனுமதித்ததை இவர்கள் ஏன் வெட்டுகிறார்கள்?

படத்தில் ஒரு கதாபாத்திரத்துக்கு ஆதிரை என்ற பெயர் இருந்தது. பெண்களுடைய கேரக்டர்களுக்கு 10 மஹா வித்யாக்களின் பெயரை இயக்குநர் ஷெரீன் வைத்திருந்தார். மணிமேகலை காப்பியத்தில கணவன் செத்துப்போய் விட்டான் என்று அரசன் சொல்ல, நான் உடலைப் பார்ப்பேன் என்று கூறிய காத்திரமான பாத்திரம் ஆதிரை என்பதால்தான் அவர், அந்தப் பெயரை வைத்தார். ஆனால், அது நளினியின் மகள் பெயர் என்று அவருக்கு தெரியாது. இதுபோன்று தேவையில்லாமல் பல பிரச்னைகளை நாங்கள் எதிர்கொண்டோம். அவர் மணிமேகலையைப் பார்த்துதான் இந்தப் பெயரை வைத்தேன் என்று கூறியதை அவர்களால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. மணிமேகலையில் உள்ள ஆதிரை குறித்து தெரியாதவர்கள்தான் சினிமாவை தணிக்கை செய்கின்றனர்”

என்றார்.

“இதேபோல் சினிமா தெரிந்த ஆட்கள் சென்சார் போர்ட்டில் இல்லாமல், ஒவ்வொரு கட்சியின் ஆட்சியின் போதும் காங்கிரஸ் ஆட்சியில் கொஞ்சம், பிஜேபி ஆட்சியில் கொஞ்சம் என்று வந்து உட்கார்ந்து கொண்டு இயக்குநர்களை பாடாய்படுத்துகிறார்கள்” என்றும் தன்னுடைய ஆதங்கத்தை பதிவு செய்தார்.

வியாழன், 2 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon