மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 2 ஜுன் 2016

கண்ணகியும் காளியும்தான் எம் பெண்களின் கவுன்சிலிங்:

கண்ணகியும் காளியும்தான் எம் பெண்களின் கவுன்சிலிங்:

இலங்கை இயக்குநர் ஷெரீன் சேவியர் நேர்காணல்

‘முற்றுப்புள்ளியா?’ என்ற திரைப்படம் மூலமாக இன்று உலகம் முழுவதும் தனது மனித உரிமை செயற்பாடுகள் காரணமாக அறியப்படுபவரும், பிரெஞ்சு அரசின் உயரிய விருதான செவாலியர் பட்டம் பெற்ற இலங்கைத் தமிழருமான ஷெரீன் சேவியர் முதன்முறையாக இயக்கியுள்ள ‘முற்றுப்புள்ளியா?’ என்ற திரைப்படத்தின் வாயிலாக இலங்கையில் போருக்குப் பிந்திய வாழ்வை பதிவு செய்துள்ளார்.

திரை விழாக்களுக்காக அல்லாமல் தமிழ்நாட்டிலுள்ள மக்களுக்காகவே இப்படத்தை எடுத்துள்ளதாகக் கூறும் அவர், படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் வாங்குவதற்காக பல சோதனைகளை எதிர்கொண்டுள்ளார். முதலில் சென்னையில் உள்ள தணிக்கைக்குழுவிடம் இந்தப் படத்தை திரையிட்டபோது, அவர்கள் திரைப்படத்துக்குத் தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்துவிடவே, ரிவைசிங் கமிட்டியிடம் சென்று தணிக்கை பெற முயன்றுள்ளார். அவர்களும் அயல்நாட்டு நல்லுறவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற வழக்கமான காரணத்தைக் கூறி படத்தை தடை செய்ய, நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் டெல்லி தீர்ப்பாயத்திடம் முறையிட்ட பின் கடந்த மே மாதம் 6ம் தேதிதான் படத்துக்குத் தணிக்கை சான்றிதழ் பெற்றுள்ளார்.

திருச்சியிலுள்ள ஹோலி கிராஸ் கல்லூரியில் (பாரதிதாசன் பல்கலைக்கழகம்) வேதியியலில் பட்டம் பெற்ற இவர், பின்னர் கனடிய பல்கலைக்கழகமான (Concordia University) கொன்கொரிடா பல்கலைக்கழகத்தில் தனது (M.Sc) பட்ட மேற்படிப்பை பூர்த்தி செய்திருக்கிறார். அத்துடன் மனித உரிமைகள் மற்றும் மனிதநேய சட்டங்கள் தொடர்பாக மற்றொரு (LLM) முதுகலைப்பட்டத்தையும் (Columbia University, New York) கொலம்பிய பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்திருக்கிறார்.

கனடிய செஞ்சிலுவை சங்கத்தின் இந்தியாவுக்கான பிரதான இயக்குநர் உட்பட கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மனித உரிமை தொடர்பாக பல முக்கிய பொறுப்புகளை வகித்துவரும் இவர், ஆசிய பெண்கள் வலையமைப்பின் ஆலோசகராகவும், பாலின சமத்துவம், மனித உரிமை மற்றும் சமூகவியல் போன்ற துறைகளின் ஆய்வாளராகவும் செயல்பட்டு வருகிறார். 2007-ம் ஆண்டு முதல் இலங்கையில் தனது தந்தையால் உருவாக்கப்பட்ட ‘மனித உரிமைகள் இல்ல’த்தின் செயற்பாடுகளைக் கவனித்து வருகிறார்.

விரைவில் தமிழகத்தில் வெளியாக இருக்கும் அவரது ‘முற்றுப்புள்ளியா?’ திரைப்படத்தை முன்வைத்து அவருடனும் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான டி.எஸ்.எஸ். மணி குறித்தும் உரையாடியதில் இருந்து

முதலில் படத்தின் இயக்குநர் ஷெரீன் சேவியர்...

மனித உரிமை செயற்பாட்டாளரான நீங்கள், திரைப்படம் என்ற ஊடகத்தை தேர்ந்தெடுக்கக் காரணம்?

இயலாமைதான் காரணம். நான் ஒரு மனித உரிமை செயற்பாட்டாளராக இருந்தபோது எல்லா இடத்துக்கும் போயிருக்கிறேன். உலக நாடுகளில் உள்ள பல தலைவர்களைச் சந்தித்திருக்கிறேன். ஜெனிவா, தென் ஆப்பிரிக்கா, வாஷிங்டன், ஒட்டாவா என்று எல்லாவிதமான நாடுகளுக்கும் போயிருக்கிறன். அங்கு தலைமைத்துவத்தோடு இந்தப் பிரச்னை குறித்துக் கதச்சிருக்கேன். அதேநேரம் இலங்கையில் உள்ள சட்டத்தைப் பாவிச்சு எங்களுக்கு ஏதாவது தீவிரமாக ஒரு ஆறுதல் கிடைக்குமா? என்று பேசியிருக்கிறேன். இது ஒன்றுமே வேலை செய்யவில்லை. மக்கள் படுகிற கஷ்டத்தை நாளுக்கு நாள் எதிர்நோக்கும்போது, போருக்குப் பிறகு தமிழ் மக்கள் படும் பிரச்னைகள் எதுவும் முழுதாக வெளியாகவில்லை என்ற ஆதங்கம் இருந்தது. அதற்காக அங்குள்ள எல்லா பிரச்னையையும் நான் படத்துக்குள் கொண்டு வந்திருக்கிறேன் என்று சொல்ல முடியாது. என்னைப் பாதித்த சில விஷயங்களை மட்டும் படமாகச் செய்திருக்கிறேன். போருக்குப் பிறகு எல்லா தமிழ் மக்களும் படுகிற பிரச்னைகளை பிரதிபலிக்கக் கூடிய 4 கதாபாத்திரங்களை வைத்து இந்த படத்தை உருவாக்கியிருக்கிறன்.

மனித உரிமை செயற்பாட்டாளராக நீங்கள் செய்த பணி குறித்து?

இந்தப் படத்தை எடுக்கையிலேயே நான் பேரை மாத்தித்தான் எடுத்தேன். என்னுடைய சொந்தப் பெயரை நான் பாவிக்கத் தொடங்கியது, போன வருஷம். ரெண்டரை வருஷமா இந்தப் படத்தோட கதை எழுதின காலத்திலிருந்து, இந்தியால வந்து இந்த படத்தைப் பத்தி இங்குள்ள ஆட்களிடம் கதைக்கும்போதுகூட என்னுடைய உண்மையான பெயரை நான் சொல்லயில்ல.

ஷெரீன் சேவியர் என்பது உங்கள் உண்மையான பெயர்தானே? (இருவருமே சிரிக்கின்றனர்) மற்றதும் என்னோட உண்மையான பெயர். ஆனால், நடுவில் உள்ள பெயரையும் என்னோட பாட்டண்ட பெயரையும் மாத்திப் போட்டேன். டக்கென்று தெரியாது, இது அந்த ஷெரீன்தானா? என்று. மற்றது, படமெடுக்கும், காலத்தில் என்னுடன், 180 பேர் வேலை செய்தனர். என்னால் அங்கிருந்து வெளிய போக முடியும். எனக்கு சில சலுகைகள் இருக்கின்றன. ஆனால், நான் எடுக்கும் முடிவு, அவர்களை தாக்கும் என்பதாலேயே பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டி இருந்தது. நீங்கள் கேட்டது முன்னால், என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்றல்லவா... மனித உரிமை மீறல்களுக்கு எதிராக எங்களால் இயன்ற அளவுக்கு குரல் கொடுத்துக் கொண்டிருந்தோம்.

தமிழகம் மற்றும் இலங்கையில் படப்பிடிப்பின்போது எதிர்கொண்ட பிரச்னைகள்?

கஷ்டப்பட்டோம் நாங்கள். ஆனால், அதே நேரம் ஏதோ ஒரு வகையில யாராவது உதவிக்கு வந்திருக்காங்க. பட்டுக்கோட்டையில் ஒரு சீனை ஷூட் பண்ணிக் கொண்டிருக்கையில் போலீஸ் வந்து நிப்பாட்டினங்க. ஏன்னா, நடித்தவங்கள் LTTE யூனிஃபார்ம் போட்டிருந்ததுக்காக. அப்போது எங்களுக்காக வேண்டி நிறைய பேர் வந்து உதவி செஞ்சாங்க. இதனால் நிறைய பண விரயம் ஏற்பட்டது. ஆனால், எல்லா தருணத்திலும் எங்களுக்கு விடிவு கொண்டு வர்ற மாதிரி யாராவது உதவிக் கொண்டே இருக்காங்க. முற்றுப்புள்ளியாக வைக்கும்போது முதன்முறை புரொடக்‌ஷன் மேனேஜராக இருந்த ஆட்கள், ‘இப்படி நெகடிவ்வா வைக்கிறீர்களே?’ என்றனர். ஆனால், நான் நினைத்தது எங்களது போராட்டங்களுக்கு, வலிகளுக்கு ஆதங்கத்துக்கு முற்றுப்புள்ளியா? என்ற கோணத்தில்தான். ஆனால், பட்ட கஷ்டங்களைப் பார்க்கும்போது இப்போது அவர்கள் சொன்னது எனக்கு உறுத்திக்கொண்டு இருக்கிறது.

தயாரிப்பு குறித்து?

கெனடியன் ரெட் கிராஸுக்காக வேலை செய்த 4 ஆண்டுகள் டெல்லியில் இருந்தேன். அங்கு சில பேர்களை தெரியும். திருச்சியில் ஹோலி கிராஸ் கல்லூரியில் தமிழ் படிச்ச புரொஃபஸர் மீனா ஜெயக்குமாருக்கும் நிரம்ப நன்றி சொல்லியாக வேண்டும். அவரோட மகன் படத்தில் பணம் ஏதும் வாங்காமல் தன் காசை செலவு செய்து அசிஸ்டெண்டாக வேலை பார்த்தார். பிறகு, இதோ இங்கிருக்கிறாரே மணி... இப்படி பல நண்பர்களின் உதவியால்தான் இந்தப் படத்தை எடுக்க முடிந்தது.

ஜஃப்னா திரைப்பட விழாவில் திரையிட்டபோது வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வர் பாராட்டியது குறித்து?

துணிச்சலாக படம் பண்ணியிருக்கிறேன் என்றார். மிகவும் யதார்த்தமாகவும் இருக்கிறது என்று சொன்னார். மக்களது அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு நுணுக்கமும் இதில் இருக்கிறது என்று பாராட்டினார். ஜஃப்னாவில் திரையிடும்போது, இந்த உண்மைக்கதைக்குச் சொந்தமான அந்த நான்கு பேரும் படம் பார்த்து விட்டு ‘எங்களது வாழ்க்கையை பின்னால் இருந்து பார்ப்பதுபோல் இருக்கிறது. மறக்க நினைத்தவற்றை இது நினைவுபடுத்துகிறது’ என்று கூறியது, அங்கீகாரத்தையும் தாண்டி ஒரு முழு திருப்தியையும் மன நிறைவையும் தந்தது. இந்தக் கதை உண்மையாக நடந்தபோது வயிற்றில் இருந்த குழந்தை இப்போது படத்தைப் பார்த்து விட்டு, இது உங்கட கத போல இருக்குமா என்று தன்னோட அம்மாவிடம் கதச்சதை மறக்கவே இயலாது.

லெனின் சார் போன்ற ஒரு ஆளுமையுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து?

டி.எஸ்.எஸ். மணி தான் என்னை முதலில் அவரிடம் கொண்டு போனார். (இவர்தான் என்னை கூட்டிப் போகச் சொன்னார் என்று சிரித்துக் கொண்டே இடைமறிக்கிறார் டி.எஸ்.எஸ்.மணி) அவரிடம் போகும்போது ஷாட் டிவிஷன் என்றால்கூட எனக்கு என்னவென்று தெரியாது. அந்த நிலைமையில் அவரோடு போய் கதைக்க எனக்கு பயம் வந்தது. ஏதோ ஒரு தைரியத்தில் போயிட்டேன். சரி, கதை கொடுத்தேன் பார்த்தார். பிறகு படம் முடிந்து கொண்டு போனேன். படமும் எடுத்துட்டேன், திட்டப்போறார் என்றாலும் கொண்டுபோய் கொடுப்போம். எண்டாந்துதான் பார்ப்போம் என்றுதான் போனேன். முழு மனதோடு செய்த ஒன்றுமே ஒரு நாளும் வீணாகப் போகாது என்ற ஒரு நம்பிக்கை எனக்கிருந்தது. முதல்ல அவரிட்டே ஸ்கிரிப்டே கொடுக்கல. பின்னத்தான் கொடுத்தேன். ரஷ் பாத்துட்டு ஸ்கிரிப்ட்ல இருந்தது ஸ்கிரீன்ல முழுசா வரலை என்றார். 100 சதம் வரலை என்பதை என்னாலும் உணர முடிந்தது. அதற்கு கிளைமாக்ஸை வெள்ளனெ எடுத்தது, பணம் குறைவாக இருந்தது என்று பல காரணங்கள் உண்டு. 18 மணி நேர ரஷ்ஷை 20 மணி நேரத்தில் பார்த்து முடித்திட்டார். That is Lenin.

தமிழகத்தில் எப்போது ரிலீஸ் செய்யப் போகிறீர்கள்?

அதற்காகத்தான் ஓடிக்கொண்டிருக்கிறோம். லண்டனில் ஜூன் 9ம் தேதி திரையிடப்போகிறாம். ஆஸ்திரேலியாவில் ஆகஸ்ட் 15 ஸ்கிரீன் செய்வது குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். அதே நேரத்தில் இங்கு ரிலீஸ் செய்வதற்காக விநியோகஸ்தர்களைப் பார்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறோம்.

2007-ல் யாழ்ப்பாணம் வந்திருக்கிறீர்கள்... இலங்கை போர் குறித்த அனுபவம்?

1987-ல் இலங்கையிலிருந்து வெளியே சென்று 1995-ல் மீண்டும் இலங்கைக்கு வந்தேன். பின் 2001-ம் ஆண்டு இலங்கையிலிருந்து வெளியேறி, 2007-ல் மீண்டும் இலங்கைக்கு வர்றேன். 2007-ல் திரும்பி வரும்போது 2001-ல் நான் போன இலங்கைக்கும் திரும்பி வந்த இலங்கைக்கும் நிறைய வித்தியாசம். போகும்முன் இருந்த மேட்னசும் போரும் உச்சத்தை அடைந்திருந்தது. அந்த நேரத்தில் உயிர்களைக் காப்பாத்த முடியல்ல. ஏதாவது செய்யுங்கோ? ஏதாவது செய்யுங்கோ? என்று ஜனங்கள் கேட்கிறதும். உயிர்களால கொழும்பில இறுக்கம். மட்டக்களப்பில இறுக்கம். எங்களால ஏதும் செய்ய முடியலை. நாங்களும் கதைக்கறோம். ஒவ்வொரு நாளும் தூதர்களோட மீட்டிங்கும் வெளிநாடுகளோட மீட்டிங்கும் இருந்தும் அதுல ஒருத்தரைக்கூட காப்பாத்த முடியலை. அந்த உறுத்தல் பயங்கரமானது. ஒவ்வொரு உயிராக போய்க் கொண்டிருக்கையில் நாங்கள் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டு, எங்கள் அன்றாட வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டு இருந்தோம். ஒண்டும் தெரியாம இருந்திருந்தால், ஒண்டும் தெரியாது. அதை என்னால் விளங்கிப்படுத்த முடியாது. அதுதான் என்ன இந்த மாதிரியான விஷயத்தைச் செய்யுங்கோ என்று தூண்டியது. சிலர் கருத்து முரண்பாடு காரணமாக ஏன் இப்படி தொடர்ந்து செய்து கொண்டிருக்கீங்க? என்ன மோட்டிவ் என்றெல்லம் கேட்கிறாங்க? அது மாதிரி விமர்சனங்கள் வரும். அது குறித்தெல்லாம் கவலைப்பட முடியாது.

படத்தில் கண்ணகி வழிபாடு பற்றி பதிவு செய்திருக்கிறீர்களே? இவ்வளவு கொடூரத்தை பார்த்த பிறகும் தமிழ் மக்களுக்கு கடவுள் மீதான கண்ணகி வழிபாடு மீதான நம்பிக்கை நீடிக்கிறதா?

கண்ணகி வழிபாடு இலங்கை தமிழ் மக்களின் முக்கியமான வழிபாடுகளில் ஒன்று. குறிப்பாக முல்லைத்தீவு கிளி நொச்சி பகுதியில். ஒரு ஆறுதலுக்காக அங்கு செல்கிறார்கள். சாமியாடுவது போன்ற சடங்குகளின் மூலமாக தங்களை உருமாற்றிக் கொள்கிறார்கள். இன்றைக்கு நாம் கவுன்சிலிங், கவுன்சிலிங்கென்று சொல்லறமே. எம் பெண்களுக்கு கண்ணகியும் காளியும்தான் கவுன்சிலிங் தருபவர்களாயிருக்கிறார்கள். அது ஒரு safe space also. காணாமல் போகடிக்கப்பட்டவர்களின் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பத்தில், பெண்களுக்கான ஆறுதலை அது தருகிறது.

(தொடரும்)

வியாழன், 2 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon