மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 5 ஏப் 2017

வல்லமை தாராயோ - 4: தமயந்தி

வல்லமை தாராயோ - 4: தமயந்தி

அந்தப் பெண் என்னை தயக்கத்தோடுதான் அணுகினாள். ‘உங்ககிட்ட நான் பேசணும்’ என்று அவள் ஆரம்பித்தபோதே எனக்கு ஓரளவு புரிந்துவிட்டது. அவள் திருமணமானவள் என்று அவளின் தாலிக்கயிறு காட்டிற்று. என் பக்கம் வந்து உட்கார்ந்தாள். ஜவ்வாது வாசம் அடித்தது.

சட்டென ஒரு நீள நோட்டை எடுத்து மடியில் வைத்துத் திறந்து, ‘இதெல்லாம் நான் எழுதிய கவிதைகள்’ என்றாள். நான், எழுதும் பெண்களின் கைகளை வலுவாக பிடித்துக் கொள்வேன். எழுதும் பெண்கள் எத்தகைய அடக்குமுறைக்கு ஆளாவார்கள் என்பதை நான் அறிவேன். உடல்ரீதியிலான வன்முறை, மனரீதியிலான வன்முறை, வார்த்தைகளால் வன்முறையென பல வகைகள் உண்டு. அதை மீறி எழுதும் விரல்கள்மீது எனக்கு பெரும் காதல் உண்டு.

‘க்கா... என் மனசுல ஆயிரம் கனவு இருக்கு... ஆனா ஒண்ணுகூட நிறைவேறல... படிச்சோன்ன கல்யாணம் கட்டி வச்சிட்டாங்க... அந்தாளு முழு நேரமும் குடி... என்ன செய்ய? எங்கூட பேசக்கூட அவருக்கு நேரமில்ல... அதான் கவித எழுத ஆரம்பிச்சேன்... தனியா இருக்க மாரி இல்ல... ஆனா அந்தாளு மாறவே இல்லக்கா...’

நாட்டில் பல பெண்களுடைய ஆதங்கம் இதுவாகத்தான் இருக்கும் - என் கணவர் குடிக்கிறார்... நான் என்ன செய்ய என்பதாக இருக்கும். முன்பு, ஒரு தொலைக்காட்சியில் பணியாற்றியபோது ஒரு பெண்ணை டாஸ்மாக் சம்பந்தமாக பேட்டி எடுக்கச் சென்றோம். அவரின் வீடு முழுக்க காலி பாட்டில்கள். அவருக்கு கண்ணே தெரியவில்லை. அவரின் பெயரைக் கேட்டவுடன், ‘என் பேரே எனக்கு மறந்திடுச்சு... என்ன அவரு தேவடியா... தேவடியான்னு கூப்பிட்டே, யாராச்சும் செல்வின்னு கூப்பிட்டாகூட திரும்பிப் பார்க்கமாட்டேன்...’

அவர் வார்த்தைகளில் வடிந்த துயரம் எந்த நதியும் அறியாதது. அவர் எங்களிடம் பேசிக்கொண்டே சோறு பொங்கினார். பிறகு அதை வடித்தார். கண் சரியாகத் தெரியவில்லை என்று சொன்னார். எங்களுள் பெருத்த நிசப்தம் நிலவியது.

அந்த நிசப்தம் இந்த தமிழ்நாட்டையே நிறைத்துக் கிடந்தது. அரசே போதையை குப்பிகளில் விற்றது. சாவின் ருசியை இச்சையாக விற்றது. அரசு கஜானா காலியாகாமல் காத்த குடி, தமிழகப் பெண்களின் மகிழ்ச்சியை காக்கவில்லை.

நான் அந்தக் கவிதை நோட்டை பிரித்துப் பார்த்தேன். பாதி தனிமையைக் கசியவிடும் கவிதைகள். ஒரு சிறகைப்போல காற்றில் பறந்து, இந்த பிரபஞ்சத்தை நிறைத்தன. அவள் இப்போது என் கைகளை பிடித்துக் கொண்டாள்.

‘க்கா... நிறைய கஷ்டம்... தெனமும் அந்தாளுக்கு கூடப் படுக்கணும். பீரியட்ஸ்னாகூட விடமாட்டேங்கிறான். குமட்டுது... அப்பால தள்ளிவிட்டு தூங்கிடுறான். அப்பதான் என்னோட உடல்ல ஏதேதோ செய்யும்... என்ன வாழ்க்க இது?’

அவள் அழாமல் சொன்னாள். அதுதான் பெரும் பாரமாக இருந்தது. இப்படிப் பேசும்போது யாராவது அழுதுவிட்டால் அவர் கைகளை பிடித்துக் கொள்ளலாம் அல்லது அழாதே என்றாவது சொல்லிவிடலாம். ஆனால் அழாத மனதின் வலி அதனினும் கொடுமையானது.

‘க்கா...’

‘சொல்லும்மா’

‘இல்ல... வேணாம்க்கா...’

‘சொல்லும்மா...’

‘இல்ல... உங்க கட்டுரை ஒண்ணுல, உங்க கை விரல்லாம் ஒடிச்சிருக்காங்கன்னு படிச்சேன், இப்ப தாவலையா... எழுதல்லாம் முடிதா?’

‘அதெல்லாம் முன்னம்மா... எழுதமுடியாம இருந்தேன்... கை நடுங்கும்... இப்ப பரவால்ல... கை வளஞ்சதுதான் மாறல...’

‘எத்ன ஆச இல்லியா மனசுல... எல்லாம் பாழா போயிடுது’, அவள் கொஞ்சம் சலிப்பாகச் சொன்னாள்.

‘ஒரே ஒரு வேண்டுகோள்’ என்றேன் அவளிடம். என்ன? என்பதுபோல் பார்த்தாள்.

‘கொஞ்சம்கூட மனச தளரவிடக் கூடாது, தொடர்ந்து எழுதணும். சரியா...’

‘நிச்சயம்க்கா...’

அவள், அதற்குப்பிறகு அடிக்கடி என்னை சந்திக்க வருவாள். ஒவ்வொருமுறையும் அவள் முகத்தில் சந்தோஷமும் சந்தோஷமின்மையும் கலந்திருக்கும். ஈரல் வெந்து மருத்துவமனையில் கணவன் இருந்தபோது வராந்தாவில் உட்கார்ந்து எழுதியதாக ஒருமுறை கவிதைகளைக் காட்டினாள். அவை, அத்தனை சுதந்திர சிந்தனைகொண்ட கவிதைகளாக இருந்தது மிக முக்கியமானது. எந்தத் தருணத்திலிருந்து, கூண்டுக்குள் சிக்கிய பறவை பரிதவிப்பது போன்ற உணர்விலிருந்து அவள், இந்த சுதந்திர மனப்பாங்கை அடைந்தாள் என்பது கூர்ந்து கவனிக்க வேண்டியதாயிருந்தது.

உடல். குறிப்பாக பெண்ணின் உடல். அதுதரும் மனவெளியின் சந்தோஷ அதிர்வுகளை இந்த நூற்றாண்டுச் சமூகம் நிராகரித்திருக்கிறது. அதனால் சமமான ஆண்-பெண் வளர்ச்சியில்லாமல் சமூகத்தில் தேக்கம் இருக்கிறது. அதைப்பற்றிப் பேச ஒரு இயல்பான கூச்சம் உள்ளது.

அன்புள்ள தமயந்திக்கு,

உங்களை இப்படியே அழைக்க எனக்குப் பிடித்திருக்கிறது. நானொரு பாலியல் தொழிலாளி. நீங்கள் எல்லோரும் நினைப்பதுபோல பாலியல் தொழிலாளர்கள் என்பவர்கள் தெருவில் தலைநிறைய பூ வைத்துக்கொண்டு மட்டமான சென்ட் போட்டு நிற்பவர்கள் அல்ல.

நான் ஒரு ஹவுஸ் வொய்ப். அப்படித்தான் என் கணவர் நம்புகிறார். வருமானம் குறைவு. குடி அதிகம். அடி உதை அதிகம். அதனால் இந்தத் தொழிலை மேற்கொள்கிறேன். தோழிகளின் வீட்டில் தொழில் நடக்கும். யாருக்கும் தெரியாது. குடும்பத்துடன் வெளியே போகும்போது வாடிக்கையாளர்கள் என்னைப் பார்த்துவிடுவார்களோ என்று மனம் பதைபதைக்கும். என்ன செய்ய... பிள்ளைகளை படிக்கவைக்க வேண்டும். வேறு தொழில் பாருங்கள் என்று தயவுசெய்து சொல்லிவிடாதீர்கள்.

என் கண்ணீர் என்னோடு போகட்டும். என் மகள் ஒரு குடிகாரனை கல்யாணம் செய்யக்கூடாது. டாஸ்மாக் கையெழுத்துப் போட்ட எம்.ஜி.ஆரும் கருணாநிதியும் எங்கள் வாழ்வை வாழ விடவில்லை இல்லையா! அம்மாவுக்கு வீட்டைவிட்டால் மக்களின் கஷ்டம் தெரியுமா?

நான் வீட்டில் இருக்கும் நேரத்தில் மொபைலில் மின்னம்பலம் வாசிப்பேன். சமூக வலைதளங்களில் வாடிக்கையாளர்களைப் பிடிப்பது... கூடவே, இப்படி நல்ல விஷயங்களும் கிடைக்கத்தான் செய்கின்றன.

நான் ‘தீர்வு தாங்க...’ என்றெல்லாம் எழுதவில்லை. இப்படியும் வாழ்கிறோம் என்று மக்களுக்குச் சொல்லுங்கள்.

குறிப்பாக, கற்பைக் கொண்டாடும் தமிழ்ச் சமூகத்துக்கு.

நன்றி.

மின்னஞ்சலை வாசித்து உங்களை அணைத்துக்கொள்ள வேண்டும்போல் இருக்கிறது. வேறென்ன சொல்ல?

கட்டுரையாளர் குறிப்பு : எழுத்தாளர் தமயந்தி

ஒடுக்கப்பட்ட பெண்களின் சார்பில் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர். இவரது ‘அக்கக்கா குருவிகள்’, ‘சாம்பல் கிண்ணம்’ சிறுகதைத் தொகுப்புகள் வாசகர்களிடையே பரவலான கவனத்தைப் பெற்றவை. இவரது முக்கிய கட்டுரைத் தொகுப்பு ‘இந்த நதி நனைவதற்கல்ல’. திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார். இயக்குநர் மீரா கதிரவனின் ‘விழித்திரு’ திரைப்படத்தில் வசனமும், பாடலும் எழுதியுள்ளார்.

வல்லமை தாராயோ - 1 - தமயந்தி

வல்லமை தாராயோ - 2 - தமயந்தி

வல்லமை தாராயோ - 3 - தமயந்தி

புதன், 5 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon