மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 4 ஏப் 2017

அராத்து எழுதும் உயிர் மெய் - 2 (நாள் 28)

அராத்து எழுதும் உயிர் மெய் - 2 (நாள் 28)

ஓவியம் : ரஞ்சித் பரஞ்ஜோதி

‘டிரிங்ஸ் ஏதும் வேண்டுமா?’ என்று கதிர் கேட்டதற்கு, ஷமித்ரா சிரித்தாள். நீண்ட நாள்களுக்குப்பிறகு சிரித்த சிரிப்பு அது.

‘என்னைப் பார்த்தா இப்ப டிரிங்ஸ் சாப்பிடற மாதிரியா இருக்கு கதிர்?’ என்றாள்.

‘அய்யோ, இல்ல, அண்ணன் சொல்லிட்டு இருப்பாரு. நீங்கள்ளாம் எப்பிடி அங்க ஜாலியா பார்ட்டி பண்ணுவீங்கன்னு. அதுவுமில்லாம, கொஞ்சநாளா ஒரே அலைச்சல், தூக்கமும் இருக்காது. மைண்டும் டிஸ்டர்ப்டா இருக்கும். அதான் கேட்டேன்’ என்றான் கதிர்.

‘இல்ல கதிர், இப்போ ஒரு மாதிரி சேச்சுரேஷனுக்கு போயிட்டேன். அதெல்லாம் தேவையில்ல’ என்றாள் ஷமித்ரா.

இருவரும் ஷாப்பிங்குக்காக சென்றுகொண்டிருக்கையில் வழியில் கதிர் அவ்வப்போது சிலருக்கு கைகளை உயர்த்தி ஹாய் அல்லது வணக்கம் சொல்லிக்கொண்டே வந்ததைப் பார்த்தாள்.

சென்னையில் இல்லாத இந்தப் பழக்கம் வித்தியாசமாக இருந்தது.

‘இவ்ளோ பேரை உனக்குத் தெரியுமா?’ என்றாள் ஷமித்ரா.

‘அப்பா பொறந்து வளந்ததுல இருந்து இதே ஏரியாதான். அதனால இந்த ஏரியாவுல எல்லாரையும் தெரியும்’ என்றான் கதிர். ‘நான் பொறந்தது, வளர்ந்தது, படிச்சது எல்லாம் இந்த ஏரியாதானே’ என்றான்.

தனக்குத் தேவையான சில பொருள்களை அளவாக வாங்கிக் கொண்டாள் ஷமித்ரா. ‘ஷாப்பிங் முடிந்ததும், மருத்துவமனைக்குச் செல்வதற்குமுன் கோயிலுக்குச் செல்லலாமா?’ என்று கேட்டான் கதிர்.

கொஞ்ச நேரம் வெளியில் வந்ததே ஒரு மாறுதலாக இருந்தது ஷமித்ராவுக்கு. இப்போது உடனே ஹாஸ்பிட்டல் சென்றால் அடுத்து உடனே வீடு, அந்த தனியறை என்று பயந்தாள். அதனால் கோயிலுக்குச் செல்லலாம் என்று கூறிவிட்டாள்.

கோயிலில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அமர்ந்திருந்தார்கள். பெரிதாக ஏதும் பேசிக்கொள்ளவில்லை. அங்கே வருபவர்களை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தாள். எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பதாகப்பட்டது. சின்னச்சின்ன விஷயத்துக்கெல்லாம் பெரிதாகச் சிரித்தபடி இருந்தனர். தானும் இப்படி கவலையில்லாமல் சிரிக்கும் காலம் மீண்டும் எப்போது வருமென்று ஏக்கமாக இருந்தது ஷமித்ராவுக்கு.

கதிர் இல்லாமல் இருந்திருந்தால் தன் நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கக் கூடும் என்றும் நினைத்தாள். கதிர்மீது அன்பும் பரிவும் வந்தது. கதிரை திரும்பி பார்த்தாள். கதிர் இவளையே பார்த்துக்கொண்டிருந்தான். இவள் பார்த்ததும் சிரித்தான்.

‘போலாமா...’ என்றாள் ஷமித்ரா.

கிளம்பி மருத்துவமனைக்குச் சென்று டாக்டரைப் பார்த்துவிட்டு, கொஞ்சம் பணம் கட்ட வேண்டியிருந்தது. கதிர் அதற்குச் சென்றதும் டாக்டர் ஷமித்ராவிடம் பேசினார்.

‘நீங்க இவருக்கு?’

‘ஃப்ரெண்ட் டாக்டர்’

‘ஃப்ரெண்டுன்னா…’

என்ன சொல்வது என ஷமித்ராவுக்கு குழப்பமாக இருந்தது. ‘கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருந்தோம் டாக்டர்’ என்றாள்.

‘ப்ச்’ என்ற டாக்டர் சிறிது யோசித்தார். ‘நீங்க எந்த ஊரு?’

‘இப்ப சென்னை’ என்றாள்.

‘இங்க டெய்லி வந்துட்டுப் போவதால் ஒரு புண்ணியமும் இல்லை. ஒரு சின்ன இம்ப்ரூவ்மெண்டும் இல்லை. நாங்களே இன்னும் பத்துப் பதினைந்து நாள் பாத்துட்டு, வெண்டிலேட்டர் கண்டினியூ பண்ணனுமான்னு பேரண்ட்ஸ்கிட்ட கேக்கலாம்னு இருக்கோம். ஐ மீன் ஹோப் சுத்தமா இல்ல.’

ஷமித்ராவுக்கு மீண்டும் தலை சுற்றுவதுபோல் இருந்தது. ஏற்கனவே பழகியிருந்ததால் கண்ட்ரோல் செய்துகொண்டாள்.

‘அதனால் நீங்க ஏதாச்சும் வேலை இருந்தா போய்ப் பாருங்க. இங்க தங்கிட்டு, தினமும் வந்து பாக்கறதால எந்தப் பயனும் இல்ல, அதுக்காகச் சொன்னேன்’ என்றார்.

‘ஓ.கே. டாக்டர், பட் கொஞ்சம் பாசிடீவா முயற்சி பண்ணுங்க’ என்றாள்.

‘ஷ்யூர், ஷ்யூர். எங்க சைடுல ஃபுல் எஃபார்ட் போட்டுட்டுதான் இருக்கோம்’ என்றார்.

‘டாக்டர், ஏடிஎம் கார்டு ஏனோ மக்கர் பண்ணுது, நாளைக்கு கட்டட்டுமா’ என்றான் திரும்பி வந்த கதிர்.

‘இதுல கட்டுங்க...’ என்று, தன் கார்டை எடுத்துக் கொடுத்தாள் ஷமித்ரா.

நாள் 1

நாள் 2

நாள் 3

நாள் 4

நாள் 5

நாள் 6

நாள் 7

நாள் 8

நாள் 9

நாள் 10

நாள் 11

நாள் 12

நாள் 13

நாள் 14

நாள் 15

நாள் 16

நாள் 17

நாள் 18

நாள் 19

நாள் 20

நாள் 21

நாள் 22

நாள் 23

நாள் 24

நாள் 25

நாள் 26

நாள் 27

செவ்வாய், 4 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon