மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 3 ஏப் 2017

அராத்து எழுதும் உயிர் மெய் - 2 (நாள் 27)

அராத்து எழுதும் உயிர் மெய் - 2  (நாள் 27)

திருச்சியில் சந்தனின் வீட்டருகே இருக்கும் ஒரு மருத்துவமனையில் சந்தன் அனுமதிக்கப்பட்டான். அட்டெண்டர் எப்போதும் இருக்கத்தேவையில்லை. காலை, மாலை என இருவேளை மட்டும் வந்து பார்த்துச் சென்றால் போதும் என்று சொல்லி விட்டார்கள்.

கதிர் தானாகவே சென்று ஷமித்ராவுக்கு சில மாற்று உடைகளும், சோப்பு, ஷாம்பூ போன்ற சில ஐட்டங்களும் வாங்கி வந்தான். வீட்டில் ஏசி இருக்கும் ஒரே அறையை ஷமித்ராவுக்கு ஒதுக்கிக் கொடுத்தான்.

சந்தனின் காதலிதான் ஷமித்ரா என்பது சந்தனின் குடும்பத்துக்குத் தெரிந்தே இருந்தது. அதைப்பற்றி பெரிதாக யாரும் பேசிக்கொள்ளவில்லை. ஆனால், உரிமையாக நடத்தினார்கள்.

துக்கம் கேட்க வரும் உறவினர்களுக்கும் ஷமித்ராவை எந்தக் கூச்சமும் இல்லாமல் அறிமுகப்படுத்தினார்கள்.

எல்லோருடனும் அவ்வப்போது சில வார்த்தைகள், உணவருந்தும்போது சில சொற்கள்... அவ்வளவுதான் அன்றைய பொழுது. அறையிலேயே அடைந்து கிடந்தாள். அறையில் டி.வி. இருந்தும் அதை பார்க்கத் தோன்றுவதேயில்லை.

காலை மாலை இருவேளைகளும் மருத்துவமனைக்குச் சென்று வருவது ஒரு சடங்காகிப் போனது. ஷமித்ராவுக்கு, ‘எதற்கோ கட்டுப்பட்டு நாம் இங்கே இருக்கிறோம்’ என்று தோன்றியது. இப்படி ஒரு அறையில் முடங்கிக்கிடப்பது சுத்தமாகப் பிடிக்கவில்லை. தான் யாருக்கு என்ன நிரூபித்துக்கொண்டு இருக்கிறோம் என்ற யோசனையில் ஆழ்ந்தாள்.

ஒருக்கால் சந்தனுடன் திருமணம் ஆகியிருந்து, அதன் பின் அவன் கோமாவில் போயிருந்தால், நாம் தானே இருந்து பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. இதைப்போல ஒன்றுமே செய்யாமல் ‘பார்த்துக் கொள்ளுதல்’ எல்லாம் தனக்கு சரிப்பட்டு வராது என்று தோன்றியது ஷமித்ராவுக்கு. இப்போதைக்கு எதைப்பற்றியும் கவலைப்படாமல் இங்கேயிருந்து பிய்த்துக்கொண்டு ஓடிவிடலாம் என்றுதான் தோன்றியது.

சந்தன் உயிர் பிழைத்தாலும் சரி, சந்தனை திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று தீர்க்கமாக நினைத்தாள் ஷமித்ரா. தான் திருமண வாழ்க்கைக்கு சரிபட்டு வர மாட்டோம் என்று யோசனை பலமாக ஓடியது. சந்தன் இறந்தாலும் யாரையும் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று நினைத்தாள்.

அரைத் தூக்கத்தில் இருந்தபோது கதிர் அழைத்தான்.

“என்ன கதிர்?”

“அண்ணி, நான் ஷாப்பிங் போறேன். நீங்களும் வர்றீங்களா கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்? ஷாப்பிங் முடிச்சிட்டு, அப்படியே ஹாஸ்பிடல் போயிட்டு வரலாம்”.

கதிருக்குச் சந்தனின் நிலைமை கடும் மன உளைச்சலையும், சோகத்தையும் கொடுத்து இருந்தாலும், வெளிப் பார்வைக்கு கொஞ்சம் சுறுசுறுப்பாகவும், கலகலப்பாகவும் இருந்தான். அப்பா அம்மா இருவரும் எப்போதும் அமைதியாகக் கண்ணில் நீர் வடித்தபடி இருப்பார்கள். அம்மா அடிக்கடி சாமியின் முன்னால் பிரார்த்தனையில் மூழ்கிவிடுவாள். ஷமித்ரா அறைக்குள்ளேயே புதைந்து கொள்கிறாள். இந்த சிச்சுவேஷனில் கதிர் கொஞ்சம் நடித்தால்தான் மற்ற அனைவரையும் சற்றேனும் இயல்பாக்க முடியும் என்று நம்பினான். என்னதான் பிரச்னை வந்தாலும் உணவு உண்ண வேண்டியுள்ளதே. வீட்டில் சமையல் செய்வதில்லை. கதிர்தான் அனைவருக்கும் உணவு வாங்கி வந்து தருகிறான்.

“அண்ணின்னு எல்லாம் கூப்பிட வேண்டாம், ஷமித்ரான்னே கூப்பிடு” என்று ஷமித்ரா சொல்லியும், கதிருக்கு அண்ணி என்று தான் வாயில் வருகிறது.

‘ஷாப்பிங் செய்ய போகலாமா? வேண்டாமா?’ எனக் குழம்பினாள் ஷமித்ரா. குழப்பத்திலோ, சோகத்திலோ இருக்கும்போது மனம் வேறு எதையும் செய்ய அனுமதிக்காது. அந்தச் சோகமே பழகி அடிக்ட் ஆகிவிடும். அதிலேயே கிடந்து தவிக்கச் சொல்லும். இதை மீறி, இதிலிருந்து வெளிவந்தாக வேண்டும் என்று நினைத்த ஷமித்ரா, “10 மினிட்ஸ் கதிர்” என்றாள்.

பத்து நிமிடங்களில் சிம்பிளாக ரெடி ஆகி வந்தாள்.

புல்லட் வைத்து இருந்தான் கதிர். இருவரும் புல்லட்டில் சென்றனர்.

நீண்ட நாளைக்குப் பிறகு முகத்தில் காற்று அறைந்தது புத்துணர்ச்சியாக இருந்தது ஷமித்ராவுக்கு.

“ஷமித்ரா, டிரிங்க்ஸ் ஏதாவது வாங்கணும்னா சொல்லுங்க, வாங்கிக்கலாம்” என்றான் கதிர்.

நாள் 1

நாள் 2

நாள் 3

நாள் 4

நாள் 5

நாள் 6

நாள் 7

நாள் 8

நாள் 9

நாள் 10

நாள் 11

நாள் 12

நாள் 13

நாள் 14

நாள் 15

நாள் 16

நாள் 17

நாள் 18

நாள் 19

நாள் 20

நாள் 21

நாள் 22

நாள் 23

நாள் 24

நாள் 25

நாள் 26

திங்கள், 3 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon