மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 2 ஏப் 2017

உயிர் மெய் 2 - அராத்து - நாள் - 26

உயிர் மெய் 2 - அராத்து - நாள் - 26

ஒரு சிரமமான, சோகமான தருணத்தைக் கடப்பது கஷ்டம்தான். அதிலும் உறவுகளுக்குள் சிக்கல், பிரிவு, இறப்பு போன்ற தருணங்களைக் கடப்பது மிகவும் கஷ்டம். அதுபோன்ற தருணங்களில் நம்மைச் சுற்றியிருக்கும் உறவுகளே அதிலிருந்து மீண்டு வர உதவுவார்கள். சின்னச்சின்ன குற்றம் குறை பார்த்து அனைத்து உறவுகளையும் ஒதுக்கிவைத்திருந்தால், இதைப்போல சோதனையான காலத்தில் யாருமில்லாமல் மாட்டிக்கொண்டு பைத்தியம் பிடிக்கும் நிலைக்குச் செல்ல வேண்டியிருக்கும்.

ஷமித்ராவுக்கு சந்தன் கோமாவில் இருக்க, ஆம்புலன்ஸில் செல்வது நரகத்தினூடே முடிவில்லாத பயணம் செல்வது போலிருந்தது. மரத்துப்போய் அமர்ந்திருந்தாள். மொபைலை சார்ஜ்கூட போடவில்லை. மாற்றுத்துணி எடுத்துக் கொள்ளவில்லை. இந்த நரக வேதனையிலிருந்து தப்பிக்க, பொய்யான கற்பனைகளை செய்து பார்த்துக்கொண்டிருந்தாள்.

சந்தன் இன்னும் ஒரு வாரத்தில் குணமாகிவிடுவான். அவனோடு புல்லட்டில் இதே நெடுஞ்சாலையில் பயணிக்கலாம். வழியில் இருக்கும் மோட்டலில் இறங்கி காஃபி குடிக்கலாம். ஏதேனும் மலைப்பிரதேசத்துக்கு வளைந்து வளைந்து பனிக்காற்று முகத்தில் அறைய ஏறலாம் என்றெல்லாம் கற்பனை செய்து கொண்டிருந்தாள். இந்தக் கற்பனை மனம் ஒடிந்து விழாமல் காப்பாற்றியது.

ரோட்டோரத்தில் இதுவரை தவறவிட்ட காட்சிகளெல்லாம் கண்ணில்பட்டது. சிரமப்படுபவர்கள், ஒரு பெரிய புல்லுக்கட்டை டிவிஎஸ்-50 வாகனத்தில் வைத்து எடுத்துச்செல்லும் வயதான விவசாயி, டோல்கேட்டில் காரருகே ஓடி வந்து வெள்ளரி விற்கும் ஆயா, வட மாநிலத்திலிருந்து வந்து சொற்ப சம்பளத்துக்காக வேலைசெய்யும் டோல்கேட் ஆட்கள், உத்தரப்பிரதேச பதிவெண் கொண்ட பெரிய லாரி, அதனுள் அழுக்காக இருக்கும் ஆட்கள் என இவர்களையெல்லாம் பார்த்து ஒரு சின்ன அழியப்போகும் வாழ்க்கைக்காக எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று தோன்றியது. நாம் கஷ்டத்தில் இருக்கும்போதுதான், நம்மைவிட கஷ்டத்தில் இருப்பவர்கள் கண்ணில்படுவார்கள். அவர்களைக் கண்டு நம் கஷ்டமெல்லாம் ஒன்றுமேயில்லை என்று தேற்றிக்கொள்ளும் திறமைகொண்டது நம் மனம்.

கடந்த சில நாள்களில் மருத்துவமனையிலேயே எக்கச்சக்க கேஸ்களை ஷமித்ரா பார்த்திருந்தாள். இளம் குடும்பத்தலைவன் சாவுக்கு மிரண்டு அழுத மொத்தக் குடும்பம் போன்ற பல சோகமான நிகழ்வுகள். பெரும்பாலான சாவுகளில் இன்செக்யூரிட்டிதான் சோகத்தை அதிகமாக்குகிறது. ‘இனி, யார் பார்த்துக் கொள்வார்?’ என்ற பயமே அழுகையை அதிகமாக்குவதில் முதலிடம் பிடிக்கிறது. இதற்குப் பிறகுதான் அன்பு, காதல் எல்லாம் அடுத்தடுத்த இடங்களைப் பிடிக்கின்றன. யோசித்துப் பார்த்தால் குழந்தை இறப்பு மட்டுமே கலப்பில்லா சுத்தமான சோகத்தையும் அழுகையையும் கொடுக்கிறது எனலாம். ஆம்புலன்ஸ் எப்போது சென்றடையும் என்று யோசிக்க ஆரம்பித்தாள். சென்றடைந்த பின் என்னவாகும்? தான் எவ்வளவு நாள்கள் அங்கே இருக்க வேண்டும்? எப்போது சந்தன் விழிப்பான் என அடுக்கடுக்காக சிந்தனைகள் வரிசை கட்டின.

சந்தன் எழுந்திருப்பானா? இல்லையா?

மனம் இப்போதுதான் தைரியமாக, சந்தன் இறந்துவிட்டால் என்ன ஆகும் என்று யோசிக்க ஆரம்பித்தது. மனதுக்கு எப்போதும் ஒரு விடுதலை தேவையாக இருக்கிறது. ஒரு தீர்வு தெரிய வேண்டும் என ஆசைப்படுகிறது. சந்தன் இத்தனை நாள்களில் எழுந்துவிடுவான் என்று தெரிந்தால் காத்திருக்கலாம். விடையே தெரியாத கோமா எனில் மனம் துணுக்குறுகிறது. எவ்வளவு நாள்கள் மருத்துவமனையில் காலம் கழிப்பது? பரபரப்பான சொகுசான வாழ்க்கை வாழ்ந்து பழகிவிட்டால் இதைப் போன்ற தருணங்கள் சோதனையாகிவிடுகின்றன. விடை தெரியாமல் காத்திருப்பதற்கு பதில், எப்போது விழிப்பான் அல்லது எப்போது சாவான் என்று யோசிக்க ஆரம்பித்துவிடுகிறது.

மனதை தெம்பாக்கிக் கொண்டு சந்தன் இறந்துவிட்டால்? இப்படி சிந்தனையை ஓட்ட ஆரம்பித்திருந்தாள் ஷமித்ரா. தானாக அவள் கண்ட சோகமான காட்சிகள் அவளை இதை தைரியமாக நினைத்துப் பார்க்க உதவியிருந்தன. இந்த யோசனை வந்தாலே, அடுத்த கட்ட வாழ்வுக்கு நகர்கிறார்கள் அல்லது எதிர்கொள்ளத் தயாராகிறார்கள் என்று பொருள்.

சரி, சந்தன் பிழைப்பானா? சாவானா? அவன் வாழ்வு யார் கையில் இருக்கிறது? கடவுள் கையிலா? மருத்துவர் கையிலா? இல்லை, எழுத்தாளர் கையிலா? வாசகர்களிடமா?

மருத்துவரைத் தவிர அனைவரிடமும்தான் பொறுப்பு இருக்கிறது என்று தோன்றுகிறது.

சந்தன் வாசகர்களை கவரத் தவறிவிட்டான். எழுத்தாளருக்கே எரிச்சலை உருவாக்கிவிட்டான். தனக்கான தனித்தன்மையை உருவாக்கிக்கொள்ள இயலவில்லை. கதை சூடுபிடித்து அடுத்த கட்டத்துக்கு நகரவும் பெரிய தடையாக இருக்கிறான். இதெல்லாவற்றையும் வைத்துப் பார்த்தால் சந்தன் விரைவில் இறந்துவிடுவான்.

இன்னும் ஒரு வாரத்தில் ஷமித்ரா சந்தனை விட்டு கிளம்பிவிடுவாள். அடுத்த ஒரு வாரத்தில் ஒரு ஆளுடன் காஃபி ஷாப்பில் காஃபி குடிக்கப் போகிறாள். நாள் 30 அல்லது 31இல் ‘சந்தன் இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினார்கள்’ என்ற ஒரு வரி வரக்கூடும். ஆனால், அந்த வரியை இதை எழுதிக்கொண்டிருக்கும் வரையில் எழுதவில்லை. சந்தனின் உயிர் யாரிடம் இருக்கிறது என்றே தெரியாததுதான் சுவாரஸ்யமாக இருக்கிறது. பார்க்கலாம்…

நாள் 1

நாள் 2

நாள் 3

நாள் 4

நாள் 5

நாள் 6

நாள் 7

நாள் 8

நாள் 9

நாள் 10

நாள் 11

நாள் 12

நாள் 13

நாள் 14

நாள் 15

நாள் 16

நாள் 17

நாள் 18

நாள் 19

நாள் 20

நாள் 21

நாள் 22

நாள் 23

நாள் 24

நாள் 25

ஞாயிறு, 2 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon