மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 30 மா 2017

அராத்து எழுதும் உயிர் மெய் - 2 (நாள் - 23)

அராத்து எழுதும் உயிர் மெய் - 2 (நாள் - 23)

விதேஷ் திரும்பி வந்து ஷமித்ராவிடம், ‘இப்போதைக்கு கண்டிஷன் ஏதும் சொல்லமுடியாதாம். வா, நாம போய் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டு வரலாம். அப்புறம் என்ன செய்யலாம்னு யோசிக்கலாம்’ என்றான்.

ஷமித்ரா தேம்பிக்கொண்டு இருந்தாள். ‘எனக்கு வேணாண்ணா, நீங்க போயிட்டு வாங்க’ என்றாள்.

‘இல்ல, ஒரு சேஞ்சுக்குத்தான் கூப்பிடறேன், என் கூட வா’ என்ற விதேஷ், அவளை வலுக்கட்டாயமாக எழுப்பி அழைத்துச் சென்றான்.

காரில் ஏற்றி ஒரு ரெஸ்டாரண்டுக்கு வண்டியை விட்டான்.

சந்தனின் அப்பா, அம்மாவுக்கு போன் செய்ய வேண்டும்.போலீஸ் சில டாக்குமெண்ட்டுகள் கேட்டிருக்கிறார். அதையெல்லாம் சந்தனின் வீட்டில் போய் தேடி எடுத்துக் கொடுக்க வேண்டும்.

சந்தன் ஆக்ஸிடண்ட் பாலிஸி போட்டிருக்கிறானா என்று தெரியவில்லை. போலீஸ் டிரங்கன் டிரைவ் என்று எஃப்ஐஆரில் போட்டு இருக்கிறார்களா என்று தெரியவில்லை. அனைத்தையும் சரி பார்க்க வேண்டும். இப்போதைக்கு மருத்துவமனையில் உட்கார்ந்து இருந்தால் ஏதும் நடக்காது. அங்கே உட்கார்ந்து இருக்கத் தேவையும் இல்லை. ஒரு ரெஸ்டாரண்ட்டுக்கு போய் அமர்ந்தால் பொறுமையாக ஒன்றன்பின் ஒன்றாக ஷமித்ராவிடம் கேட்டு செயல்படுத்தலாம் என்றுதான் விதேஷ் அவளை எழுப்பி கூட்டிக்கொண்டு வந்தான்.

அருகில் இருந்த ஒரு மூன்று நட்சத்திர விடுதிக்குள் காரை விட்டான்.

மூவருக்கும் ஆர்டர் சொல்லிவிட்டு, ஷமித்ராவின் அருகில் சென்று அமர்ந்துகொண்டான். அவளின் தலையை லேசாக தட்டிக்கொடுத்து தன் தோள்மீது சாய்த்துக் கொண்டவன், ‘ஷமித்ரா, ஐ அண்டர்ஸ்டுட் யூர் ஃபீலிங்க்ஸ். பட் , சில விஷயங்கள் செய்யவேண்டியிருக்கு. அதுக்கு நீ கான்ஃபிடண்டா இருந்தாத்தான் செய்ய முடியும்’ என்றான்.

ஷமித்ரா கலங்கிய கண்களுடன் நிமிர்ந்து பார்த்தாள்.

‘சந்தன் வீட்டு சாவி உன்கிட்ட இருக்கா?’ என்றான் விதேஷ்.

‘இருக்குண்ணா...’

‘சாப்டுட்டு சந்தன் வீட்டுக்குப் போகணும்’ என்றான் விதேஷ்.

உணவு வந்தது.

ஷமித்ரா சாப்பிடாமல் தலையை பிடித்துக்கொண்டு மேஜையில் தலையை வைத்திருந்தாள்.

அவளை சாப்பிடச் சொல்லிய விதேஷ், அவள் ஒத்துழைக்காததால், ‘ஜூஸாவது குடி ஷமி’ என்றான். விதேஷின் வற்புறுத்தலால் ஷமித்ரா ஜூஸ் குடித்தாள்.

ஷமித்ராவிடம், சந்தன் பெற்றோர்களின் போன் நம்பரை வாங்கினான் விதேஷ்.

‘ஷமி, நீயே அவங்ககிட்ட பேசறியா?’ என்றான்.

ஷமித்ரா கண்களில் நீர்த்திவலைகளுடன் மறுத்தாள்.

தன் மொபைலில் இருந்து சந்தனின் தந்தைக்கு அழைத்தான் .

‘ஹலோ, நான் விதேஷ் பேசறேங்க. சந்தனோட ஃபிரண்டு’ என்றான்.

எதிர்முனையில் ஏதோ உறைத்திருக்க வேண்டும், ‘என்ன தம்பீ, ஏதும் பிரச்னையா’ என்றார் சந்தனின் தந்தை. அவர் குரல் பிசிறியது.

‘இல்லீங்க, சந்தனுக்கு உடம்பு முடியல, ஹாஸ்பிடலில் சேர்த்திருக்கோம். இப்ப டாக்டர்ஸ் பாத்துட்டு இருக்காங்க. பயப்பட ஒண்ணும் இல்ல. நீங்க கிளம்பி வந்தா அவனுக்கு தெம்பா இருக்கும்’ என்றான்.

அவர், திரும்பத் திரும்ப கேட்டதுக்கு எல்லாம் பயம் வராத மாதிரி பொறுப்பாக பதில் சொல்லி, அவரையும், அவர் மனைவியையும் கிளம்பி வரச் சொன்னான்.

சந்தனின் தம்பியையும் உடன் அழைத்துவருவதாகச் சொன்னார் சந்தனின் அப்பா. உடனே, கார் வைத்துக்கொண்டு கிளம்பி வரச் சொன்னான் விதேஷ். ஆனால் குரலில் பதற்றம் காட்டாமல், அதேசமயம், அழுத்தமாகச் சொன்னான். ‘கொஞ்ச நேரத்துல கிளம்பிடுங்க, கிளம்பியதும் எனக்கு போன் பண்ணுங்க’ என்றான்.

சென்னையிலேயே சந்தனின் மாமா இருப்பதாகவும், அவரிடம் சொல்லி உடனே வந்து பார்க்கச் சொல்லுவதாக சந்தனின் தந்தை சொன்னதை மறுத்தான் விதேஷ். ‘நீங்க முதல்ல வாங்க, அப்புறமா மாமாகிட்ட சொல்லிக்கலாம்’ என்று சமாதானப்படுத்தினான். ‘நாங்க ஃபிரண்ட்ஸ் எல்லாம் கூட இருக்கோம், பயம் வேண்டாம்’ என்றான்.

போன் பேசி முடித்ததும், ‘விதேஷ், இப்பதான் எனக்கு ஞாபகம் வந்திச்சி, அந்த ஹாஸ்பிடலில் எனக்கு தெரிஞ்ச ஃபிரண்டு டாக்டரா இருக்கா, பேரு சிரோன்யா’ என்றாள் சாந்தவி.

நாள் 22

வியாழன், 30 மா 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon