மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 29 மா 2017

வல்லமை தாராயோ 3 - தமயந்தி

வல்லமை தாராயோ 3 - தமயந்தி

‘Beyond All Telling’ painting by Iftikhar Jaffar

வளை நான் மதுரை பக்கம் பார்த்தேன். ஒரு கள ஆய்வுக்காக சென்றிருந்தபோது ஒரு வீட்டில் தண்ணீர் வாங்கிக்குடித்தபோது சந்தித்தது. சிரித்தபடி செம்பை வாங்கிக் கொண்டவளிடம் கழிவறையை உபயோகித்துக் கொள்ள முடியுமா என் று கேட்டேன். அவள் லேசான பதட்டத்துடன்... க்கா... இங்கல்லாம் வெளிய தான் போவோம்க்கா... என்றாள்.

அந்த கிராமத்து பஞ்சாயத்து தலைவர் சில மணி நேரத்திற்கு முன்பாகத் தான் சில லட்ச செலவில் அப்பகுதியின் அடிப்படைத் தேவைகள் தீர்த்து வைக்கப்பட்டிருக்கின்றன என்பதை சொன்னார். நான் அந்தப் பெண்ணை அது சம்பந்தமான சில கேள்விகள் கேட்டேன். அவர் மிக இயல்பாக.. க்கா... என்ன கவின்னே சொல்லுங்கக்கா... என்றாள். உள்ளே அழைத்து சென்று மின்விசிறி சுழல விட்டு காப்பி கொடுத்தாள்.

"க்கா... ஒண்ணுக்கு போகணும்னா கூட மறைவா தான் போகணும்... காலைல விடிஞ்சி எந்திரிச்சிட்டா போக முடியாது. சாப்பிட்டா பாத்ரூம் போகணும் போலருக்கும். ஆனா பாத்ரூம் வெளிச்சத்துல போக முடியாததுனால எதுவுமே சாப்ட மாட்டோம்க்கா... "

அவளின் கண்கள் குறுகின. அவசரம்னா சொல்லுங்கக்கா... மூணாவது தெருல மணியக்காரர் வீட்டுல பாத்ரூம் இருக்கு

நான் வேண்டாம் என்று சொன்னேன். அவளின் வீட்டுக்குள்ளே பெரிதான ஆடம்பரப் பொருட்கள் ஏதுமில்லை. பழைய கலைஞர் தொலைக்காட்சி ஒன்றும் ஒரு கயிற்றுக் கட்டிலும் இருந்தன. எத்தனைக் கொடுமையான அடிப்படைத் தேவையைக்கூட பூர்த்தி செய்ய இயலாத வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இவர்கள்?

என் சென்னை சிநேகிதி ஒருத்திக்கு ஏற்பட்ட நிலை மிக மோசமானது. அலுவலக மீட்டிங்கில் தொடர்ந்து பங்கு பெற்றிருக்கிறாள். கழிவறையே போகாமல். ஆண்களுக்கு மத்தியில், தான் மட்டும் கழிவறை போவதற்கு ஏற்பட்டத் தயக்கம் கடைசியில் இன்பெக்ஷனில் முடிந்தது. ஏன் இத்தனை தயக்கம்?

என்ன செய்றது... பாத் ரூம் போனா நம்மளயே உத்து பாத்துட்டுருப்பாங்க... போகவே கூச்சமா இருக்கும் என்றாள் அவள்.அவள் அலுவலகத்தில் அவள் மட்டும் பெண். தனியாய் சாப்பிடுவாளாம். தனியாய் ஒரு உலகில் இயங்குவாளாம்.

சேர்ந்து சாப்டா என்ன?

அவள் முகம் கோணியது.

சாப்டுட்டு எனக்காக தான் அவ மீன் பொரியல் கொண்டு வந்தான்னு சொல்லிக்கலாம் இல்லியா ?

சொல்லட்டும். அதுக்கென்ன

அதுக்கென்னவா... என்னலாம் பேசுவாங்க தெரியுமா?

பேசட்டும் ... எவ்ளோ நாள் பேச முடியும்

ஐயோ க்கா... உங்களுக்கெல்லாம் புரியாது

சாதாரண சிறுநீர் கழிக்கும் விஷயம் வரைக்கும் இந்த புரிதலற்ற தன்மையால் தான் பெருவாரியாக அவள் வாழ்வைப் பாதிப்பதை புரிந்து கொள்ளாமலே உடலை வருத்திக் கொள்கிறாள் என்று தோன்றியிருக்கிறது . பெண்கள் கழிவறை எங்குள்ளது என்றே தெரியாத ஒரு அதிகாரி பற்றி சமீபத்தில் ஒரு நண்பர் சொன்னார். அவர் சொன்னதன் அர்த்தம் அடிக்கோடிட்ட சிறு அலட்சியம் நாம் எத்தனை கரிசனையாய் மற்றவர்களின் அடிப்படைத் தேவைகளைப் புரிந்து கொண்டிருக்கிறோம் என்பதை பறைசாற்றியது.

ஆண்களால எங்கனாலும் பேண்ட்டை அவிழ்த்துக்க முடியுதுங்குற தைரியத்துல.தான எங்களுக்கு ஒண்ணுக்கு வருதா இல்லியானு கூட கேக்காம இவ்ளோ தூரம் வர்ரீங்க.... எழவு வீட்டுக்குப் போய் வந்து துர்காக்கா மகாதேவன் அத்தானைப் பார்த்து கேட்ட கேள்வியை இன்னும் ஜமுனா மறக்காமல் சொல்வாள். வீட்டுக்குள்ள நுழையுறதுக்குள்ள்ளயே அடக்கி வச்ச மூத்திரம் கால்ல வழியுது. துர்காக்காவோட குரல் தான் அப்பல்லாம் என் காதுல ஒலிக்கிது... ஜமுனா சிறுவயதிலிருந்தே என் வீட்டுப் பக்கமிருக்கும் பெண்.

பெண்களின் வாழ்க்கையில் சொல்லாமல் விட்ட விஷயங்கள் ஏராளம். ஆனால் கூச்சத்தால் செய்யாது விட்ட விஷயங்கள் ஓராயிரம்.

அன்புள்ள அக்கா

மின்னம்பலத்தில் உங்கள் கட்டுரை வாசிக்கிறேன். என் பெயர் ஜெயந்தி. கரூரில் ஒரு சிறுகடையில் வேலைப் பார்க்கிறேன். காலை எட்டு மணிக்கு வந்தேன் என்றால் மாலை எட்டு மணி வரைக்கும் ரீசார்ஜ் செய்ய வேண்டும். கடைத்தெருவில் சுத்தமாக கழிவறைகளே கிடையாது. குளிர்காலம் சிறுநீர் கழிக்காமலும் இருக்க முடியாது. இப்படியான நேரம் பக்கத்து கடைக்குப் போவது போல் போவேன். காரணம் அங்கு ஒரு மொட்டை மாடி உண்டு. அங்கு போய் ஓரமாக சிறுநீர் கழிப்பதற்காக தான்.

அப்படி ஒரு நாள் கழிக்கும் போது எதிர் மாடித் திண்டிலிருந்துவீடியோ எடுத்து விட்டான் ஒருவன். அன்றிலிருந்து நேரிடையாக அல்ல..மறைமுகமாக அவன் என்னிடம் அந்த வீடியோவைப் போட்டுக்காட்டினான். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.

அடிக்கடி எங்கள் கடை பக்கமாய் நின்று கொண்டு வீடியோவைப் போட்டுக் காட்டுவது போல செய்கிறான். அந்த நேரங்களில் எனக்கு கை காலெல்லாம் பதறுகிறது. மனதில் அத்தனை புழுக்கத்துடன் அங்கு வேலை பார்க்கிறேன். வீட்டு நிலமைக்காக நான் வேலைக்குப் போயே ஆக வேண்டியுள்ளது. நான் என்ன செய்ய?

இப்படியான பல பெண்கள் நம்மிடம் தான் உள்ளார்கள். ஜெயந்தி, சமீபத்தில் நடிகர் கல்கி கோச்சலின் நடித்த Naked என்னும் படம் பார்த்தேன். நீங்கள் கூட யூ ட்யூப்பில் பார்க்கலாம். ஒரு நடிகையின் உடலுறவு காட்சி வெளியாகி விடுகிறது. முழு நிர்வாணமாக இருக்கிறாள் அவள் அந்தக் காட்சியில். அவளை ஒரு பத்திரிகையாளர்- அவரும் பெண் தான்- பேட்டி எடுக்கிறார். அவர் முதலில் மிக கொச்சையான கேள்விகள் கேட்க ஒரு கட்டத்தில் சமூக வலைத்தளங்களில் அப்படி கொச்சைப்படுத்துகிறவர்களை கண்டுக்கொள்ளாமல் விட்டு விடுவது நல்லதென்று சொல்லப்படுவது குறித்து விமர்சனம் வருகிறது. எதிரில் ஒருவன் அப்படி பேசினால், செயல்பட்டால் கண்டுக் கொள்ளாமல் இருக்கிறோமா என்று கேள்வி இருவருக்குமிடையே எழுகிறது.

சிறுநீர் கழிப்பதை எடுப்பதன் மூலம் உங்கள் அந்தரங்கத்தை பதிவு செய்த உவகை அவனுக்கு. தைரியமாக உங்கள் கடைக்காரரிடம் சொல்லுங்கள். அப்படியும் பிரச்னை என்றால் மின்னம்பலம் அலுவலக எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள். நமது பயமேஇன்னொருவரின் தைரியம். அப்படியொரு பதிவை வைத்திருப்பது உங்களுக்கு அசிங்கம் இல்லை சகோதரி. அது அவனது அருவெறுப்பான மனதின் வெளிப்பாடு.

*

உங்களுக்குப் பகிர இயலாத, தயக்கம் நிறைந்த பிரச்னைகள் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் என்னிடம் பகிரலாம் நீங்கள் மின்னஞ்சலில்.

[email protected]

உரையாடுவோம்...

கரையேறுவோம்...

கட்டுரையாளர் குறிப்பு : எழுத்தாளர் தமயந்தி

ஒடுக்கப்பட்ட பெண்களின் சார்பில் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர். இவரது 'அக்கக்கா குருவிகள்', ' சாம்பல் கிண்ணம்' சிறுகதைத் தொகுப்புகள் வாசகர்களிடையே பரவலான கவனத்தைப் பெற்றவை. இவரது முக்கிய கட்டுரைத் தொகுப்பு 'இந்த நதி நனைவதற்கல்ல'. திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார். இயக்குநர் மீரா கதிரவனின் 'விழித்திரு' திரைப்படத்தில் வசனமும், பாடலும் எழுதியுள்ளார்.

வல்லமை தாராயோ - 1

வல்லமை தாராயோ - 2

புதன், 29 மா 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon