மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 23 மா 2017

அராத்து எழுதும் உயிர் மெய் - 2 (நாள் - 16)

அராத்து எழுதும் உயிர் மெய் - 2 (நாள் - 16)

ஓவியம்: சசி மாரீஸ்

சாந்தவி எரிச்சலை காட்டிக்கொள்ளாமல் வலுக்கட்டாயமாகச் சிரித்தவள், ‘சரி பார்ட்டி ஆரம்பிக்கலாமா?’ என்று அபிநயம் பிடித்தாள்.

சந்தன், ஒரு நிமிஷம் என்று சொல்லியபடி தன் அறைக்கு ஓடினான். அறையில் இருந்து அந்த விலை உயர்ந்த கோனியாக்கை எடுத்துக்கொண்டு மீண்டும் பார்ட்டி நடக்கும் இடத்துக்கு வந்தான்.

இப்போது இன்னொரு கார் வந்து நின்றது. அதில் இருந்து வைஷாலியும் சுமந்தனும் இறங்கி, ஹாய் சொல்லியபடி அருகில் வந்தனர்.

‘மை ஃபிரண்ட் சுமந்தன் அண்ட் ஹிஸ் வைஃப்’ என்று விதேஷ் அறிமுகப்படுத்த, ‘ஹாய் விதேஷ்’ என்று வைஷாலி விதேஷை கட்டிக்கொண்டாள். சுமந்தன் சிரித்தபடி கை கொடுத்தான்.

‘யூ ஆர் சோ சோ க்யூட்’ என்று சிண்ட்ரியாவிடம் சொன்னாள் வைஷாலி. விளக்குகளை பக்காவாக செட் செய்துவிட்டு வந்த சவீந்தரையும் வைஷாலி அணைத்துக்கொண்டாள். வைஷாலி ஓவர் மேக்கப்பில் இருந்தாள். அபாயகரமான உடைகள் அணிந்து இருந்தாள்.

சந்தன் கோனியாக்கை விதேஷிடம் கொடுத்தான்.

‘ஓஹ்…கிரேட்…தேங்க்யூ’ என்று சொல்லியபடி வாங்கி பார்ட்டி டேபிளில் வைத்தான். ‘வெரி ஓல்டு கோனியாக்’ என முணுமுணுத்துக் கொண்டான்.

உணவு வழங்க வந்திருந்த ஆட்கள் ஐஸ் பெட்டியை டிரிங்க்ஸ் டேபிளின் அருகே வைத்தார்கள். கூடவே கிளாஸ்களையும் வைத்தார்கள்.

அனைவரும் கிளாஸ்களை கையில் எடுத்துக்கொண்டு வேண்டிய மதுவகைகளை ஊற்றிக்கொள்ள பார்ட்டி ஆரம்பமானது. சவீந்தர் மற்ற எல்லோருக்கும் உதவினான்.

நீர்த்தி பாடல்களை ஒலிக்கவிட ஆரம்பித்ததும், கொஞ்சநேரம் போகட்டும் என்று விதேஷ் பாடல்களை நிறுத்திவிட்டான்.

சியர்ஸ் என்று மென்மையாக கத்தியபடி உறிஞ்ச ஆரம்பித்தனர்.

உணவு ஆட்கள், ஸ்டார்ட்டர் மெனுவை கிரில் செய்து கொடுக்க ஆரம்பித்தனர். சிக்கன், மீன் இவையிரண்டும் நான் வெஜ், பன்னீர் +கேப்ஸிகம் + தக்காளி +பேபி கார்ன் இவற்றை ஒரு குச்சியில் கோர்த்து நான்வெஜ் ஸ்டார்ட்டர் தயாரித்துக் கொடுக்க ஆரம்பித்தனர்.

ஷைலஜா சுமந்தனை விட்டுவிட்டு விதேஷின் கைகளை கோர்த்துக்கொண்டு இருந்தாள். சுமந்தன் குடிப்பதில் மும்முரமாக இருந்தான். ஷைலஜா விதேஷுடன் ஒட்டிக்கொண்டு இருந்தாலும், விதேஷ் சிண்ட்ரியாவுடன் நெருக்கமாக இருப்பதிலேயே ஆர்வம் காட்டினான். சாந்தவிக்கு விதேஷிடம் நெருங்கவே வாய்ப்பில்லாமல் போனது. வேறு வழியில்லாமல் சந்தன் + ஷமித்ராவிடம் தஞ்சம் அடைந்து பேசிக்கொண்டு இருந்தாள். ‘யாருடீ இவ? கொஞ்சம்கூட மேனர்ஸ் இல்லாம’ என, தன் அதிருப்தியை ஷமித்ராவிடம் வெளிப்படுத்தினாள்.

‘எனக்கும் தெரியலடீ’ என்று சொல்லிய ஷமித்ரா, மென்போதையில் சந்தனுடன் தனித்துப் பேச ஆசைப்பட்டாள். அதற்கு இடம் கொடுக்காமல் சாந்தவி இருந்தது ஷமித்ராவுக்குப் பிடிக்கவில்லை.

சவீந்தர், ஷைலஜாவுக்கும் ஒரு டிரிங்க் மிக்ஸ் செய்து கொடுத்தான். தேங்க்யூ என்றபடி, ஷைலஜா அவனைக் கட்டிக்கொண்டதும் அவளை விதேஷிடமிருந்து பிரித்து தனியே அழைத்துவந்தான்.

நீர்த்தி இப்போது பாடல்களை ஒலிக்கவிட்டான். வண்ண விளக்குகள் பாடல்களின் பீட்டுக்கு ஏற்றார்போல நடனமாடுவதுபோலத் தோன்றியது.

முதலில் சவீந்தர்தான் ஷைலஜாவுடன் நடனம் ஆட ஆரம்பித்தான். சவீந்தருக்கு வேலை வைக்காவண்ணம் ஷைலஜாவே சவீந்தரை சகட்டுமேனிக்கு முத்தமிட ஆரம்பித்தாள். இது எது பற்றியும் கவலைப்படாமல் சுமந்தன், கையில் கிளாஸுடன் ஸ்டார்ட்டர் செய்பவன் பக்கத்தில் நின்று கொண்டு, சூடாக ஸ்டார்ட்டர் சாப்பிடுவதில் குறியாக இருந்தான்.

சந்தன் தன்னுடைய மூன்றாவது ரவுண்டு முடிந்ததும், டிரிங்க்ஸ் ஊற்றிக்கொள்ள வந்த சிண்ட்ரியாவிடம் சென்று ஒரு செல்ஃபீ எடுத்துக்கொள்ள வேண்டும் என்றான்.

‘ஓஹ், ஷ்யூர்’ என்ற சிண்ட்ரியா, கவனமாக கிளாஸை தூர வைத்தாள். போனை எடுத்த சந்தன் சிண்ட்ரியா அருகே நின்று ஆங்கிள் பார்த்தான். சரியாக வராததால் சிண்ட்ரியாவிடம் இன்னும் நெருங்கினான். பேலன்ஸ் செய்வதுபோல இயல்பாக சிண்ட்ரியாவின் தோள்மீது கை போட்டு, நெருக்கமாக ஒரு போட்டோ எடுத்துக்கொண்டான். பிறகு, வெவ்வேறு போஸ்களில் சில போட்டோக்கள் எடுத்துக் கொண்டான். தேங்க்யூ என்ற சந்தன் சிண்ட்ரியாவை அணைத்தான். பிறகு தன்னுடைய டிரிங்க்ஸை எடுத்துக்கொண்டு விதேஷிடம் சென்றாள் சிண்ட்ரியா.

ஷைலஜா போதை ஏறி ஒரு நாற்காலியில் அலங்கோலமாக அமர்ந்து இருந்தாள்.

ஷமித்ராவிடம் திரும்பினான் சந்தன். தன்னுடைய மதுவை ஷமித்ரா முடித்து கீழே வைத்தாள். சந்தனின் செய்கைகள் ஷமித்ராவுக்கு எரிச்சல் உண்டாக்கியது. சந்தன் தன் அலுவலகத்தில் பெருமை அடித்துக்கொள்ள எடுத்துக்கொண்ட புகைப்படங்களை மொபைலில் பார்த்துக்கொண்டு இருந்தான்.

இப்போது சவீந்தர், ‘ஷமி, கம் அண்டு டேன்ஸ் வித் மீ’ என்றதும், ஷமித்ரா மறுப்பேதும் சொல்லாமல் அவனுடன் ஆடப்போனாள்.

சந்தன் விக்கித்துப் பார்த்துக்கொண்டு இருந்தான்.

சிண்ட்ரியா சிறிதளவு சாப்பிட்டுவிட்டு, அனைவருக்கும் பொதுவாக பை சொல்லிவிட்டு சென்றுவிட்டாள். மது ரவுண்டு கட்டி அடித்தது. உணவும் தேவையானபோது பரிமாறப்பட்டது. பாடல்கள் மாறி மாறி ஒலித்தவண்ணம் இருந்தன.

விதேஷுக்கு போதை செமையாக ஏறிவிட்டது. சுற்றும்முற்றும் பார்த்தான் . சாந்தவி தனியாக அமர்ந்து இருந்தாள். சைகையால் வா... என்று அழைத்தான். சாந்தவி அருகில் வந்ததும் அவளின் இடையில் கை போட்டபடி தன் அறைக்கு அழைத்துச் சென்றான்.

சவீந்தர் இன்னொரு பாட்டுக்கு ஷமித்ராவுடன் ஆடிக்கொண்டு இருந்தான். ஷமித்ராவில் இடையில் கையை விட்டு இழுத்து அணைத்து ஒரு ஸ்டெப் போட, சந்தன் தன் கையில் இருந்த கிளாஸை தரையில் போட்டு உடைத்தான்.

நாள் 1

நாள் 2

நாள் 3

நாள் 4

நாள் 5

நாள் 6

நாள் 7

நாள் 8

நாள் 9

நாள் 10

நாள் 11

நாள் 12

நாள் 13

நாள் 14

நாள் 15

வியாழன், 23 மா 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon