மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 22 மா 2017

சிறப்புக் கட்டுரை: வல்லமை தாராயோ - 2 - தமயந்தி

சிறப்புக் கட்டுரை: வல்லமை தாராயோ - 2 - தமயந்தி

சமீபத்திய தமிழ்நாடு என்பது மிகுந்த குழப்பங்களோடு இருக்கும் ஒரு மாநிலமாகத் தோன்றுகிறது. முகநூலைத் திறந்தால் இளையராஜா எஸ்.பி.பி.க்கு அனுப்பிய நோட்டீஸ் மிகப் பெரிய ஒரு பிரச்னையாக பேசப்படுகிறது. தொழில்ரீதியிலான சட்டச் சிக்கல்கள் என்னவென்றே தெரியாத நிலையில், ஒவ்வொருவரும் அவரவருக்கான நியாயத் தீர்ப்புகளை அளித்தவண்ணம் இருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் சுசி லீக்ஸ் என்று, போன வாரம் வரை பல்வேறு திரைப் பிரமுகர்களின் வீடியோக்கள் வெளியாயின. ‘யானையின் அம்மணம் பூனைக்கு கொண்டாட்டம்’ என்பதுபோல, மிக ஆர்வமாக கற்பு, கலாசாரம் பற்றி அதிகம் கவலைப்படும் நம் தமிழ்ச் சமூகம் அத்தனை வீடியோக்களையும் ஒத்துக்கொண்டது. ஏற்றுக்கொண்டது. பார்த்துச் சலித்தது.

இரு தனி நபர்களின் உடலுறவு அல்லது ஈர்ப்பு அவர்களுக்கான விஷயம். இன்னும் அதை இந்தச் சமூகம் ஏற்றுக்கொள்கிறதோ, இல்லையோ - நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. பணியிடத்தில் இரு நபர்களிடம் சிலசமயம் ஈர்ப்பு தோன்றுகிறது. அப்போது அவர்களின் உடலோ, மனமோ அல்லது இரண்டுமே ஒத்துப்போனால் அது அவர்களின் தேர்வு. அவர்களின் தனி வாழ்க்கை. ஆனால் இங்கு அதை ஒருவர் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதென்பது எத்தனை கேவலமானது? அதை ஒத்துக்கொள்ளும் மனம் பலருக்கும் இருப்பதில்லை என்பது இந்தப் பிரச்னையின் மற்றுமொரு பக்கம்.

இவர்களைப் பற்றியெல்லாம் பேசி, தமிழ்நாட்டின் மிக முக்கியமான அரசியல் நிலவரம் மறைக்கப்படுகிறது. இது இடைத்தேர்தல் யுக்தியாகக்கூட இருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம். திசை திருப்பி, பொதுமக்களின் ஈர்ப்பை கவனமிழக்கச் செய்யும் வித்தைகள் நம் அரசியல்வாதிகளுக்குத் தெரியாதா என்ன?

ஜல்லிக்கட்டில் திரண்ட தமிழ்ச் சமூகம், நந்தினி பாலியல் வன்முறைக்கு ஆளானபோது கண்டுகொள்ளவில்லை. அதன் காரணம் என்ன? ஜல்லிக்கட்டு போராட்டமே ஒரு மாநிலம் தழுவிய போராட்டமாக மாறியதற்கு பின் திரை மறைவில் மத்திய அரசும், மாநில அரசும் ஒரு உடன்பாட்டை அடைய முயற்சிசெய்த காலகட்டமாகவும் பார்க்கலாம். மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து சிறைக்குச் சென்றவர்கள் தியாகிகளாகவும் அவர்களின் சமாதி சத்தியம் அப்பழுக்கற்றதாகவும் ஊடகங்கள் வரைந்து காட்டுகின்றன.

அப்படி என்ன தலையாய கடமை நம் தமிழ் ஊடகங்களுக்கு... பெரும்பான்மையானவை ஆளும் கட்சிக்கு ஜால்ரா போடுகின்றன. மீதிநேரம் இன்று சுசி வெளியிடும் வீடியோ யாருடையது? சிம்பு இருக்கிறாரா இதன் பின்னணியில்? என்று பிரேக்கிங் நியூஸில் கவனம் செலுத்துகிறது.

சுசி லீக்ஸ் பார்த்த குடும்ப ஆண்களுக்கு சுசி தலைமையில் பொற்கிழி வழங்குவதாக அரசு அறிவித்தால் அதை வாங்க நீளும் வரிசை மெரினாவின் நீளத்தைப் பின்தள்ளும்.

ஆளுக்கொரு கட்சி ஆரம்பித்து யார், யாருடன் அணி சேர்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளவே இன்னும் முடியவில்லை. சட்டசபை குழப்பங்களைச் சமாளிக்க, இடைத்தேர்தல் ரகசியங்களை வெளியே கசியவிடாமல் செய்ய சுசி லீக்ஸ் முன்னெடுக்கப்படுகிறதா?

அப்படியும் இருக்கலாமோ என்றுகூடத் தோன்றுகிறது. சட்டென கவனம் ஈர்க்கப்படும் விஷயமாக மாறும் இத்தகைய பாலியல் ரகசியங்கள் குறித்த விமர்சனங்கள், விவாதங்கள் என திடீரென சமூகம் ஒரு கலாசார காவலாளியாக மாறுகிறது. இரண்டுபேர் அவர்கள் விருப்பத்தின்பொருட்டு கட்டிப்பிடித்துக் கொண்டால் என்ன? புகைப்படம் எடுத்துக்கொண்டால்தான் என்ன?

இதே நேரத்தில், தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது தெரியுமா? மணல் திருட்டால் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் அரசுக்கு ஏற்படுகிறது. இதை எழுதிய பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர் மீது குறிவைத்து தாக்குதல் நடைபெற்று அவருக்கு போலீஸ் காவல் வழங்கப்பட்டிருக்கிறது.

மணல் திருட்டை தமிழ்நாட்டில் உரிமம் பெற்றதுபோல செய்வது யாரென்று எல்லோருக்குமே தெரிந்த உண்மைதான். ராஜமாணிக்கம் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கொன்று மணல் திருட்டின்மூலம் அரசுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவது அம்பலப்படுத்தியது. அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா எட்டு அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுத்ததாகச் சொல்லப்பட்டது என்னவானது?

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொலைகளின் எண்ணிக்கை அதிர்ச்சியூட்டுகிறது. சாலையில் எந்தநேரமும் ஒரு கொலை நிகழலாம். பொதுப்புத்தியில் அது சம்பவமாக மாறி பின், நினைவுகளிலிருந்தும்கூட மறைந்துவிடுகிறது. திராவிடக் கொள்கைகளை கடைப்பிடித்த தோழர் ஃபாரூக்கின் கொலை இன்னும் மனதை கசிய வைத்தபடி இருக்கிறது. நான் முதன்முதலில் எழுத ஆரம்பித்தபோது, நான் பிறந்த கிறிஸ்தவ மதத்தினர் தெரிவித்த எதிர்ப்புகள் நினைவுக்கு வந்துபோகின்றன. மதக் கட்டுப்பாடுகள் வெறியாக மாறும் நிலையில் நம் மதிப்பீடுகள் மாறி ஃபாரூக்குகள் கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். பின், நாம் அவர்களை நினைவில் நிறுத்தி விட்டு நகர்கிறோம். ஆனால் ஃபாரூக்கின் மரணம் சொல்ல முனையும் மதவாதத்துக்கு எதிராக என்ன செயல்படப்போகிறோம்?

அப்படியொரு மின்னஞ்சலை சேலம் மாவட்டத்திலிருந்து கல்லூரி மாணவர் ஒருவர் அனுப்பியிருக்கிறார்.

நான் ஒரு நிலமற்ற விவசாயக் கூலியின் மகன். எங்களிடம் நிலமில்லை என்ற ஒரே காரணத்தால் நாங்கள் பட்ட அவமானம் ஏராளம். இத்தனைக்கும் நாங்கள்தான் நிலத்தில் வியர்வை சிந்த உழைக்கும் மனிதர்கள்.

சாதி இன்னொரு காரணம். அதைச்சொல்லி வெளிப்படையாக அவமானப்படுத்துவது மனதைக் காயப்படுத்தி இருக்கிறது. அப்பா என்னை எப்படியாவது படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால் பள்ளியில்கூட அதிகமாக சாதி சொல்லியே ஆசிரியர்களும் பேசியதால் சாதிக்கட்சியில் சேர்ந்துகொண்டு சாதிக்கயிறு கட்டியே நான் திரிந்தேன்.

இப்போது ஒரு கல்லூரியில் படிக்கிறேன் அரசியலில் சேர விரும்புகிறேன். ஆனால் அப்பா, அம்மா விரும்பமாட்டார்கள். இந்த நாட்டில்தான் நம் பணத்தை எடுக்க நாம் நேரத்தை கொன்று க்யூக்களில் நிற்கவேண்டி இருக்கிறது. நிற்கும் மனிதர்களிடம் கோபம் இல்லை. அது மிகப்பெரிய ஆச்சர்யத்தை எனக்குத் தருகிறது.

என்ன செய்யலாம் நான் என்று முடிகிறது அந்தக் கடிதம்.

சாதி என்னும் வாளெடுத்து காயப்படுத்துவது மிருகச் செயல். ஆனால் நம் சமூகத்தில் அதுவே மிகப் பரவலாக இருக்கிறது. வேறு வேறு முகமூடிகளில். நகரத்தில் மண்ணுள் நெளியும் பாம்புபோல் சாதி தாண்டவமாடுகிறது. அரசியல் சாதியை வைத்தும் அதை முன்னிறுத்தியுமே நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

இளைஞர்களின் கைகளில் அரசியல் என்னும் கண்ணாடிப் பந்து வசப்பட வேண்டும். அப்படி நடந்தால், இங்குள்ள மத வாத அரசியல்வாதிகளையும் சாதியத் தலைவர்களையும் ஐந்து வருடத்துக்கு நாடு கடத்த வேண்டும்.

நிச்சயமாக, அப்போது அரசியல் உங்களைப் போன்ற இளைஞர்களின் வசப்படும். சமூக உணர்வுகள்மூலம் சாதியைக் கடக்கும் வாய்ப்புகள் நிகழலாம்.

ஒன்று நிச்சயம்!

இப்போது இருப்பது போன்ற அரசியல்வாதிகள் இனியும் உருவாகமாட்டார்கள்.

*

உங்களுக்குப் பகிர இயலாத, தயக்கம் நிறைந்த பிரச்னைகள் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் என்னிடம் பகிரலாம் நீங்கள் மின்னஞ்சலில்.

[email protected]

உரையாடுவோம்...

கரையேறுவோம்...

கட்டுரையாளர் குறிப்பு : எழுத்தாளர் தமயந்தி

ஒடுக்கப்பட்ட பெண்களின் சார்பில் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர். இவரது 'அக்கக்கா குருவிகள்', ' சாம்பல் கிண்ணம்' சிறுகதைத் தொகுப்புகள் வாசகர்களிடையே பரவலான கவனத்தைப் பெற்றவை. இவரது முக்கிய கட்டுரைத் தொகுப்பு 'இந்த நதி நனைவதற்கல்ல'. திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார். இயக்குநர் மீரா கதிரவனின் 'விழித்திரு' திரைப்படத்தில் வசனமும், பாடலும் எழுதியுள்ளார்.

வல்லமை தாராயோ - 1 -தமயந்தி

புதன், 22 மா 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon