மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 22 மா 2017

அராத்து எழுதும் உயிர் மெய் 2 (நாள் - 15)

அராத்து எழுதும் உயிர் மெய் 2 (நாள் - 15)

சிண்ட்ரியா சிரித்துக்கொண்டே, “என்ன... நாங்க டான்ஸ் ஆடின கதையை சொல்றாரா?” என்றாள்.

அனைவரும் அவளைப் பார்த்ததும், “முதல் நாள் அறிமுகப்படுத்திக்கொண்டதோட போயிட்டார். அதக்கப்புறம், அடிக்கடி ரொம்ப பவ்யமா நான் போற எடத்துக்கெல்லாம் ஃபாலோ பண்ணி வந்துட்டே இருந்தார். எனக்கே ஆச்சர்யமா இருக்கும். எப்பிடி நாம போற இடத்திலெல்லாம் இந்த ஆள் வந்து நிக்கிறான்னு யோசிச்சிட்டே இருப்பேன்”. பெருமையாகச் சிரித்துக்கொண்டு இருந்தான் விதேஷ்.

“தொடர்ந்து வந்துட்டு இருப்பாரே ஒழிய தொந்தரவு கொடுக்க மாட்டார். ஜஸ்ட் ஒரு ஸ்மைல், ஹாய், அவ்ளோதான். நான் அந்த இடத்தில் இருக்கும் வரை இருப்பார். நான் போனதுக்கு அப்புறம்தான் போவார். சிட்டில நான் போகும் இடம் எல்லாம் ஐயாவுக்கு அத்துப்படி” என்று சொல்லி சிரித்தாள்.

“இண்ட்ரஸ்டிங்க்” என்றாள் ஷமித்ரா.

“அப்ப நான் அல்மோஸ்ட் பிரேக் அப்ல இருந்த நேரம். ஒரு ஸ்டார் ஹோட்டல் பார்ல, பர்மனண்ட் பிரேக் அப் சொல்லிட்டு போயிட்டான். நான் ரொம்ப கலக்கத்துல ஒக்காந்து இருந்தேன். அழக்கூடாதுன்னு கஷ்டப்பட்டு அடக்கிட்டு இருந்தேன். அப்ப என் முன்னால வந்து ஒக்காந்து, வாங்க என் கூட, ரிலாக்ஸா ஒரு டிரைவ் போலாம்னு சொன்னார்.

எனக்கு அடுத்து என்ன செய்யறதுன்னே தெரியலை. அந்த சிச்சிவேஷனுக்கு எங்காவது கண் காணா தூரத்துக்கு ஓடிடலாம்னு இருந்திச்சி. ஸ்விட்ச் போட்டா மாதிரி, எழுந்து நின்னேன். என் கையை பிடிச்சி கூட்டிட்டு போனார். கார் ஈ சீ ஆர் ரோட்ல ஓடிச்சி. ரெண்டு பேரும் பேசிக்கவே இல்லை. கார்ல ஓடிட்டு இருந்த பாட்டை கூட ஆஃப் பண்ணிட்டார்.

கார் ஒரு பீச் ரெஸார்ட்டுக்கு போய் நின்னிச்சி. கடல் பக்கத்துல ரெண்டு சேரை போட்டு ஒக்காந்தோம். மெழுகுவத்தி கொளுத்தி வச்சார். வைன் கிளாஸ்ல ஊத்தி வச்சாலும் குடிக்க மூடே வரலை. என்னை குடின்னு தொந்தரவும் பண்ணலை. நான் அப்படியே கடலை பாத்துட்டு ஒக்காந்து இருந்தேன்.

விதேஷ், 2 ரவுண்ட் போட்டுட்டு கடல்ல குளிக்க இறங்கினார்.

நான் மனக்கலக்கத்தோட நிலாவையும், அலைகளையும் பாத்துட்டே இருந்தேன். அப்பவும் என் மன இறுக்கம் கொஞ்சம் கூட குறையலை.

குளிச்சிட்டு மேல வந்த விதேஷ் என் தலையை தட்டிக்கொடுத்தார். என்னை அங்கயே விட்டுட்டு , ரூமுக்கு டிரஸ் சேஞ்ச் செஞ்சிட்டு வரேன்னு சொல்லிட்டு போயிட்டார்.

ரொம்ப நேரமா திரும்ப வரலை. எனக்கு தனியா இப்படி கடல் கூட ஒக்காந்து இருப்பது மனசுக்கு தேவையா இருந்தாலும், இவ்ளோ நேரம் சொல்லிக்காம எங்க போனார்னு ஒரு சின்ன எரிச்சல் . இவர் கூட ஏன் கிளம்பி வந்தோம்னு ஒரு குழப்பம்.

திடீர்னு கடல்ல ஒரு போட். அதுல ஒரு விளக்கு எரிஞ்சிட்டு இருக்கு. நிழலுருவமா ரெண்டு பேர். போட் கிட்டத்துல வந்ததும், விதேஷ்தான் என்னை கூப்பிட்டார்.

இறங்கி வந்து என்னை கையைப் பிடிச்சி போட்டுக்கு கூட்டிட்டு போய் ஏத்திவிட்டார். அவரும் ஏறிக்கிட்டார். இந்த ராத்திரியில மீனர்வர்கள் குடியிருப்புக்கு போய், போட்டை எடுத்து வந்திருக்கார். படகை ஓட்டி வந்தது அவரோட ஃபிரண்டாம். அடிக்கடி இப்பிடி போவாராம். போட்லயே வைன் இருந்திச்சி. இப்ப எனக்கு குடிக்கணும் போல இருந்திச்சி. லைட்டா குடிச்சேன். மீன் குழம்பு , மீன் வருவல் எல்லாம் போட்லயே இருந்திச்சி. வீட்ல செஞ்சது, நல்ல கைப்பக்குவம். நடுகடல்ல வைன் குடிச்சிகிட்டு,மீன் குழம்பு. எதிர்பாக்கவே இல்லை. ஜஸ்ட் 4 மணி நேரத்துக்கு முன்னால இதை என்னால கற்பனை கூட செஞ்சி பாத்திருக்க முடியாது. வாழ்கை ரொம்ப விசித்திரமானதுன்னு தோணிச்சி. இன்னும் என்னென்னவோ எதிர்பாராதது எல்லாம் எனக்காக வாழ்வில் இருக்குன்னு தோணிச்சி. திடீர்னு மனசு லேசாயிடிச்சி.

ஜாலியா சிரிச்சிகிட்டே , நடுக்கடலில் அமைதியாக ஆட்டம் போடும் அலைகளையும் , அசைந்தாடும் படகையும் ரசிச்சிகிட்டே இன்னொரு ரவுண்ட் வைன் குடிச்சேன்.

அப்பதான் விதேஷ் ப்ளூ டூத் ஸ்பீக்கரில் பாட்டு போட்டார். அது டேன்ஸ் ஆடுறதுக்கான பாட்டு இல்லை, மெலடி பாட்டுதான். ஆனாலும் எனக்கு ஆடணும் போல இருந்துச்சி.

போட்லயே எழுந்து ஆடினேன். விதேஷ் ரசிச்சிகிட்டுதான் இருந்தாரு. நான் தான் , வா …கூட சேந்து ஆடுன்னு சொன்னேன்.

கடல்ல போட் ஆட ஆட , நாங்களும் சேந்து ஆடியதுதான் , முதன் முதலா நாங்க சேந்து ஆடியது” என்று முடித்தாள் சிண்ட்ரியா.

விதேஷ் , நெருங்கி சிண்ட்ரியாவை மெல்ல பக்கவாட்டில் அணைத்துக்கொண்டான்.

சாந்தவி முகத்தில் எரிச்சல் அப்பட்டமாக தெரிந்தது.

நாள் 1

நாள் 2

நாள் 3

நாள் 4

நாள் 5

நாள் 6

நாள் 7

நாள் 8

நாள் 9

நாள் 10

நாள் 11

நாள் 12

நாள் 13

நாள் 14

புதன், 22 மா 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon