மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 15 மா 2017

அராத்து எழுதும் உயிர் மெய் - 2 (நாள் - 8)

அராத்து எழுதும்  உயிர் மெய் - 2 (நாள் - 8)

ஓவியம் : சசி மாரீஸ்

சந்தன் வந்து அமர்ந்ததும், விதேஷ் ஒரு மெனுகார்டை சந்தனிடம் தள்ளிவிட்டான். சந்தன் மெனுவை எடுத்து சும்மா புரட்டிக் கொண்டிருந்தான். ‘நீ என்னா ஆர்டர் பண்றியோ, எனக்கும் அதுவே ஓக்கே’ என்று ஷமித்ராவிடம் சொன்னான்.

‘நீயே ஆர்டர் பண்ணிடுண்ணா’ என்று, ஷமித்ராவும் விதேஷிடமே பொறுப்பைத் தள்ளிவிட்டாள்.

விதேஷ், டோம்யாம் சூப், பப்பாயா சாலட், கிரீன் கறி, ரெட் கறி, பைனாப்பிள் ஃபிரட் ரைஸ், ஸ்டீம்ட் ஃபிஷ் என கலந்து கட்டி ஆர்டர் செய்தான்.

சாப்பிட ஆரம்பித்ததும், விதேஷ் ஷமித்ராவைப் பார்த்து, ‘அப்புறம்? என்ன பிளான், சந்தன் ஜஸ்ட் ஃபிரண்டா? இல்லை வாட்ஸ் தி ரிலேஷன்ஷிப்’ என நேரடியாக கேட்டுவிட்டான். கேட்டுவிட்டு, ஒரு மீன் பீஸை எடுத்து மும்முரமாக முள்ளை எடுத்து சாப்பிட ஆரம்பித்தான்.

சந்தன் எச்சிலை முழுங்கிக்கொண்டு ரெடி ஆனான். ஷமித்ராவை ஒரு பார்வை பார்த்தான்.

ஷமித்ரா, தான் சொல்வதாக கண்களாலும் சின்ன உதட்டசைவாலும் சந்தனிடம் சைகை காட்டியவள், விதேஷைப் பார்த்து, ‘ரெண்டு பேரும் லவ் பண்றோம்ணா’ என்றாள்.

‘லவ்வுன்னா...’ என்றான் விதேஷ். மீன் முள்ளைத் துப்பினான். ஸ்டீம்டு ஃபிஷ்ஷை சந்தன் பக்கம் நகர்த்தினான்.

தேங்க்ஸ் என்ற சந்தன், ‘லவ்வுன்னா லவ், காதலிக்கிறோம்’ என்று சொல்லி இழுத்து வழிந்தான்.

‘அவ்ளோதானா? சோ, சும்மா லவ் பண்றீங்க?’ என்று ஷமித்ராவைப் பார்த்தான் விதேஷ்.

‘அவ்ளோதானான்னா? வாட் டூ யூ மீன்’ என்றான் சந்தன்.

‘ஜஸ்ட் லவ் பண்றீங்களா? இல்ல சீரியஸா எதாவது பிளான் இருக்கா? ஐ மீன் கல்யாணம் கில்யாணம் அதுபோல எதாச்சும் ஐடியா வச்சிருக்கீங்களா? வட்ஸ் தி டெப்த் ஆஃப் யூர் ரிலேஷன்ஷிப்’ என்றான் விதேஷ்.

‘கல்யாணம் எல்லாம் பிளான் பண்ணலைண்ணா, கொஞ்ச நாள் லிவிங் டுகதரா இருந்தோம்’ என்று சொல்லிவிட்டு, ‘அந்த கிரீன் கறியை இப்படி கொஞ்சம் நகத்துண்ணா’ என்றாள் ஷமித்ரா.

கிரீன் கறியை ஷமித்ராவிடம் நகர்த்திய விதேஷ், ‘கிரேட், கிரேட். லிவிங் டுகதரா இருந்தீங்களா? குட். தட்ஸ் குட். உடனே உணர்ச்சி வசப்பட்டு கல்யாணம் அது இதுன்னு போயி லைஃபை ஸ்பாயில் பண்ணிக்காம இருந்தீங்களே, குட் கைய்ஸ்’ என்றான் விதேஷ்.

சந்தனுக்கு விநோதமாக இருந்தது. என்ன ரியாக்ட் செய்வது என்று தெரியவில்லை. ஷமித்ரா, ‘தேங்க்ஸ் அண்ணா, அப்பா அம்மாவுக்குத் தெரியாது, பாத்துக்கோ’ என்றாள்.

‘ஷ்யூர், ஷ்யூர், இதெல்லாம் ஏன் ஓல்ட் பீப்புல்ஸுக்கு சொல்லிக்கிட்டு? அவங்களுக்குத் தெரியவும் வேணாம், தேவையும் இல்லை என்றவன் ஆமா, ஏன் இப்ப வீட்டைக் காலி பண்ணிட்டு வந்துட்ட? இனிமே நீ எங்க தங்கப் போற? வாட் அபவுட் சந்தன்’ என்றான் விதேஷ்.

‘ஒரு ஃப்ளாட்ல தங்கி இருந்தோம் அண்ணா…..’

‘ஹவுஸ் ஓனர் பிரச்னை பண்ணிட்டானா? புவர் கைஸ் …ஓக்கே , ஐ அண்டர்ஸ்டுட் ….டைம் பீயிங் நீங்க ரெண்டுபேரும் என் வீட்லயே தங்கிக்கோங்க. அப்புறமா பிளான் பண்ணி மாறிக்கலாம். எனக்கு நோ இஷ்யூஸ். நீங்க என்ன சொல்றீங்க?’

அதெல்லாம் வேணாங்க என்று சொல்ல வந்தான் சந்தன்… அதற்குள், மலர்ச்சியடைந்த முகத்துடன் ‘ஓக்கேண்ணா, தேங்க்யூ’ என்று சொல்லிய ஷமித்ரா, எழுந்து சென்று விதேஷை பின்புறமாக நாற்காலியோடு சேர்த்து அணைத்து மென்மையாக முத்தமிட்டாள்.

நாள் 1

நாள் 2

நாள் 3

நாள் 4

நாள் 5

நாள் 6

நாள் 7

புதன், 15 மா 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon