மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 மா 2017

அராத்து எழுதும் உயிர் மெய் தொடர் - 2 (நாள் - 6)

அராத்து எழுதும் உயிர் மெய் தொடர் - 2 (நாள் - 6)

ஓவியம் : சசி மாரீஸ்

ஷமித்ராவும் விதேஷும் பேசிக்கொண்டே வீட்டினுள் நடந்து கொண்டிருக்கையில் ,கொஞ்சம் இடைவெளி விட்டு பின்னால் மெது மெதுவாக பாதம் வைத்து வீட்டை ஆராய்ந்தபடியே பின் தொடர்ந்தான் சந்தன்.

இருவரும் பேசிக்கொள்வது என்ன விஷயம்? என்று தெரிந்து இருந்தது. சொற்களும் பாதி பாதியாக பிய்ந்து காதில் விழுந்து கொண்டு இருந்தது. பிறகு ஷமித்ராவிடம் கேட்டுக்கொள்ளலாம் , அவள் தெளிவாக முன்கதை, நடு கதை, கிளைக் கதை, இப்போது என்னவாயிற்று , இவற்றில் இவன் சொல்வதில் எவ்வளவு உண்மை , உண்மையான உண்மை என்ன? என எல்லாவற்றையும் பகுத்து சொல்லி விடுவாள் என்பதால் , இப்போது அவர்களின் கான்வர்சேஷனில் அக்கறை காட்ட வில்லை சந்தன்.

ஷமித்ரா போன் அடித்தது. எடுத்து பேசியதும் , பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் லாரி வந்து இருப்பது தெரியவர, அண்ணனிடம் சொல்லிக்கொண்டு கேட்டை நோக்கி விரைந்தாள்.

விதேஷ் கேட்டைத் திறக்க சுவிட்ச் ஆன் செய்து விட்டு , ஷமித்ராவை பின் தொடர்ந்தான். சந்தனும் கூடவே சென்றான்.

அந்த ஆட்களிடம் ஷமித்ராவின் பொருட்களை எங்கு வைக்க வேண்டும் என்று இடம் காட்டினான் விதேஷ்.அவன் காட்டிய இடம், மெயின் வீட்டில் இல்லை. லான், லானைத் தாண்டி சென்றால் மெயின் வீடு . மெயின் வீட்டை ஒட்டி பக்கத்தில் நீச்சல் குளம், நீச்சல் குளத்தை தாண்டி சென்றால் மெயின் வீட்டுக்கு பின்புறம் ஒரு அவுட் ஹவுஸ் போல இருந்தது. அங்கே வைக்கச் சொன்னான் விதேஷ்.

அந்த அவுட் ஹவுஸை ரெடியாக திறந்து வைத்திருந்தான் விதேஷ். ஷமித்ராவுக்கு லேசாக முகம் சுருங்கி விட்டது. சந்தனுக்கும் மகிழ்ச்சி குறைந்தது.

பேக்கர்ஸ் ஆட்கள் நிமிடங்கள் கரைவதை விட வேகமாக அடுக்கிச்சென்று விட்டார்கள்.

மீண்டும் வீட்டுக்கள் வந்தனர் மூவரும்.

'சந்தன் , ஹேவ் ஏ பியர்' என்றான் விதேஷ், ஃப்ரிட்ஜை திறந்தபடி.அது ஒரு பெரிய இண்டஸ்டரியல் ஃபிரிட்ஜ். பிரம்மாண்டமாக இருந்தது. மேலே இரண்டு கதவு. கீழே இரண்டு கதவு. அதுமட்டமல்லாமல் ஐஸ் கியூப்ஸ் வருவதற்கு தனி வெண்டிங்க். குளிர் நீர் வருவதற்கு தனி குழாய் என அமர்க்களமாக இருந்தது அந்த ஃப்ரிட்ஜ்.

விதேஷ் ஃப்ரிட்ஜை திறந்ததும் , பியர்கள் ராணுவ ஒழுங்கோடு அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிந்தது. கரோனா ,ஹெனிக்கன் ,ஆசாஹீ , பட் வைஸர் என வெளிநாட்டு பியர்களோடு,போனால் போகட்டும் என உள்நாட்டு கிங்க் ஃபிஷர் பியரும் இருந்தது.

பக்கத்திலேயே ட்ரோப்பிகானா ஜூஸ் வகைகள் வரிசை கட்டி இருந்தன. இளநீரும் பேக்குகளில் அடைக்கப்பட்டு இருந்தன. அமுல் லஸி , பட்டர் மில்க் என வரிசையாக அடுக்கப்பட்டு இருந்தன.

மொத்தத்தில் பழைய சாம்பார் , ரசம் , பொறியல் போன்ற நான்சென்ஸ்கள் ஃப்ரிட்ஜில் இல்லை. ஃப்ரிட்ஜில் கிளம்பிக்கொண்டு இருந்த பனிப்புகை வசீகரமாக இருந்தது.

ஆசாஹீ ஜப்பான் பியரை எடுத்துக்கொண்டான் சந்தன். விதேஷும் கர்டஸிக்காக ஆசாஹீ பியரையே எடுத்துக்கொண்டான்.

ஷமி , எதாவது டிரிங்க் எடுத்துக்கறியா ? வைன் இருக்கு என்று இன்னொரு கதவை திறந்தான் விதேஷ். இம்போர்டட் வைன்களோடு , சூலாவும் போட்டி போட்டுக்கொண்டு இருந்தது.

வேணாம் அண்ணா , என்றபடி புட்டியில் அடைத்து இருந்த ஆலு வேரா ஜூஸ்+ லிட்சியை எடுத்துக்கொண்டாள் ஷமித்ரா.

மூவரும் லிவிங்க் ரூமில் இருந்த பிரம்மாண்டமான சோஃபாவில் அமர்ந்தனர்.

லேசாக பியரை சிப்ப ஆரம்பித்தனர்.

சோ , என்ன பிளான் ? எங்க தங்க போற ஷமி? என்றான் விதேஷ்.

இருந்த வீட்டை காலி பண்ணிட்டேன் , இப்போதைக்கு ஹாஸ்டல் . இன்னொரு வீடு பாக்கணும் அண்ணா என்றாள் ஷமித்ரா. இன்னொரு வீடு பாத்ததும் என் திங்க்ஸையெல்லாம் எடுத்துக்கறேன் என்றும் சொன்னாள்.

நோ இஷ்யூஸ். எவ்ளோ நாள் வேணா இந்த ரூம்லயே இருக்கட்டும் என்று பெருந்தன்மையாக சொன்னான் விதேஷ்.மேலும் சந்தனிடம் , நீங்க எங்க வேலை பாக்கறீங்க ? எங்க தங்கி இருக்கீங்க என்று ஃபார்மலாக சில வார்த்தைகள் பேசினான். பியர் முடிந்ததும் , லஞ்சுக்கு போலாமா ? என்று கேட்டபடி எழுந்து கொண்டான் விதேஷ்.

விதேஷின் காரிலேயே மூவரும் ஏறிக்கொண்டார்கள்.

வாட் ஃபுட் யூ பீப்புல் லைக் ? தாய் , சைனீஸ் , இண்டியன் ஆர் வெஸ்டர்ன் என்று கேட்டான் விதேஷ்.

எதா இருந்தாலும் ஓக்கே என்றான் சந்தன். தாய் என்றாள் ஷமித்ரா.

ஓக்கே என்ற விதேஷ் , சந்தன் , உனக்கு ஷமித்ராவை எப்பிடி தெரியும் என்றான்.

இதில் உனக்கு என்ற பிரயோகத்தை சந்தன் ரசிக்கவில்லை. ஷமித்ராவுக்கும் பிடிக்கவில்லை.

ஏன் கேக்கற? என்றான் சந்தன்.

திங்கள், 13 மா 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon