மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 10 மா 2017

அராத்து எழுதும் உயிர் மெய் தொடர் - 2 (நாள் - 3)

அராத்து எழுதும் உயிர் மெய் தொடர் - 2 (நாள் - 3)

ஓவியம்: சசி மாரீஸ்

2 வாரங்களில் காலி செய்து கொள்கிறோம் என்று சொன்னதும் ஹவுஸ் ஓனருக்கும் செக்ரட்டரிக்கும் அடிபட்டதுபோல ஆனது. ஒரு பெரிய சண்டையை எதிர்பார்த்து வந்தவர்கள், திடுமென நிலைகுலைந்து மொக்கையாகப் போனதுபோல உணர்ந்தார்கள்.

ஹவுஸ் ஓனர் செருமிக்கொண்டு, ‘அவசரம் இல்லை, டைம் எடுத்துக்கோங்க’ என்று சொன்னார்.

‘இல்ல சார், தேவையில்லாத அவமானம், டிஸ்டர்பன்ஸ் வேணாம். வேற வீடு பாத்துட்டு இன்னும் 2 வாரத்துக்குள்ள கால் பண்றோம், பேசிக்கலாம்’ என்று சொல்லியபடி, வாசல் கதவைப் பார்த்தாள்.

‘சந்தன் நமக்கு வேலை இருக்கு, நீ முதல்ல குளிக்கிறியா? நான் போகட்டுமா?’ எனக் கேட்டாள் ஷமித்ரா. புரிந்துகொண்ட ஹவுஸ் ஓனரும் செக்ரட்டரியும், தொங்கிப்போன தலையோடு வெளியேறினார்கள்.

சில நேரங்களில் இப்படித்தான். பிரச்னை அடிப்படையில் பார்த்தால், ஹவுஸ் ஓனரும் செக்ரட்டரியும்தான் ஜெயித்தார்கள். அவர்கள் நோக்கம், இவர்களை காலி செய்ய வைத்தல்தான். காலி செய்ய ஷமித்ராவும் சந்தனும் ஒத்துக்கொண்டார்கள். ஆனாலும் வெற்றி பெற்ற ருசி இருவருக்கும் இல்லை. தோல்விக் கசப்போடே இருவரும் வெளியேறினார்கள். ஷமித்ராவுக்கும் சந்தனுக்கும் தோல்விதான். ஆனாலும் ஷமித்ரா அந்த தோல்வியை வெற்றி பெற்றதுபோல ஆக்கினாள். நீ என்ன சொல்றது, நானே போறேன் என்ற அணுகுமுறை மூலம். சந்தனுக்கும் உள்ளுக்குள் மகிழ்ச்சியாக இருந்தது. ஷமித்ராவை தூக்கி சுத்தவேண்டும்போல இருந்தது.

ஷமித்ரா உடனடியாக ஒரு மெசேஜ் அனுப்பினாள். ‘வேர் ஆர் யூ? லைக் டூ ஸ்பீக் வித் யு.’ விதேஷுக்கு மெசேஜ் அனுப்பி விட்டு, தன்னுடைய உடைமைகளைப் பார்க்க ஆரம்பித்தாள். பின்னாலேயே வந்த சந்தன்,

‘என்னாடீ, ரெண்டு வாரம்னு தில்லா டைம் குடுத்துட்ட, என்ன ஐடியா?’ என்றான்.

‘யாருக்குத் தெரியும்? இனிமேதான் யோசிக்கணும்’ என்ற ஷமித்ரா சிரித்தாள். வசீகரமாக இருந்தாள். முத்தமிடத் தோன்றியதை அடக்கிக் கொண்டான் சந்தன்.

திரும்பவும் கதவு தட்டப்பட்டது. பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் நின்றிருந்தார்கள். அவர்களை உள்ளே அழைத்து வந்து தன்னுடைய பொருட்களைக் காட்டினாள் ஷமித்ரா.

‘ஏய், என்னாடி! உன் பொருளையெல்லாம் காட்டுற. எங்க கொண்டு போகச் சொல்லப் போற? நாம இப்பதான் சமாதானமா ஆயிட்டமே? ஏண்டி பிரியப்போற...’ என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினான் சந்தன்.

‘இருடா…டென்ஷன் ஆகாதே….எனக்கே எங்க போகப்போறேன்னு தெரியல. கொஞ்சம் வெயிட் பண்ணு, யோசிச்சி பேசி முடிவு பண்ணலாம்’ என்று கூறிவிட்டு வேலை செய்ய வந்திருந்த ஆட்களுக்கு ஆலோசனை சொல்ல ஆரம்பித்தாள் ஷமித்ரா.

அவளை கையைப் பிடித்து இழுந்துக்கொண்டு ரூமுக்கு வந்தான். ‘என்னாடி, எங்க போகப்போறேன்னு தெரியலைன்னு சொல்ற? இவனுங்களுக்கு பேக் பண்ண ஐடியா குடுக்குற, என்னதாண்டி நினைச்சிட்டு இருக்க?’ என்று பதமாகவே கேட்டான் சந்தன்.

‘ஏய், கொஞ்சம் யோசிக்க விடுடா. அவங்க வந்துட்டாங்க, அதனால அவங்ககிட்ட இன்ஸ்ட்ரக்‌ஷன் குடுத்துட்டு இருக்கேன். எங்க எடுத்துட்டு போறதுன்னு இனிமேதான் யோசிக்கணும். எங்க அண்ணன் வீட்டுல கொண்டுபோய் கொஞ்சநாள் போடலாம்னு ஐடியா. அவனுக்கு மெசேஜ் அனுப்பியிருக்கேன், பாக்கலாம்’ என்றாள்.

சந்தன், ஷமித்ராவை தன் அருகே இழுத்து அணைக்க முயன்றான்.

‘பேசிட்டு இருக்கும்போது, இப்ப என்னடா? ஆளுங்க வேற இருக்காங்க’ என்றாள்.

‘தனியா ரூமுக்குள்ள இழுத்து வந்துட்டேன், வந்ததுக்கு ஒரு அணைப்பு, ஒரு முத்தம்கூட இல்லன்னா எப்பிடிடீ?’ என்றவாறு, அவளை சுவரில் சாய்த்து, மேலே படர்ந்து கழுத்தில் புதைந்து காதுக்குக் கீழே முத்தமிட்டான். ‘மேடம்... மேடம்...’ ஆட்கள் கூப்பிடும் குரல் கேட்டது.

சந்தனை விலக்கி விட்டு விட்டு, உடைகளைச் சரி செய்துகொண்டு மெதுவாக, நிதானமாக நடந்து வெளியே சென்றாள் ஷமித்ரா.

யூ கேன் கால் மீ என, விதேஷ் மெசேஜ் அனுப்பி இருந்தான்.

வெள்ளி, 10 மா 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon