மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 மா 2017

உயிர் மெய் - 2 நாள் - 1

உயிர் மெய் - 2 நாள் - 1

ஃப்ளாட் செக்ரட்டரி, ஹவுஸ் ஓனர் மற்றும் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் மூன்று பேரும் கதவுக்கு வெளியே நின்றுகொண்டிருந்ததைப் பார்த்த சந்தனுக்கு எரிச்சலிலும் ஒரு சிரிப்பு வந்தது. வாங்கடா எல்லா மேட்டரையும் இன்னிக்கு முடிச்சிடலாம்... என்று கருவிக்கொண்ட சந்தன், பொதுவாக, ‘ப்ளீஸ் கம் இன்’ என்றான்.

ஹவுஸ் ஓனரும் செக்ரட்டரியும் உள்ளே நுழைய, பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் ஆட்கள் தயங்கி வெளியிலேயே நின்று கொண்டிருந்தனர்.

‘அண்ணே, கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க. இல்லன்னா போய் டீ சாப்ட்டு வாங்க. இவங்களை பேசி அனுப்பிட்டு வந்துடறேன்’ என்று சொன்ன சந்தன் உள்ளே வந்தான்.

‘ஷமி, இவங்களுக்கு எதாச்சும் குடு’

‘சார், ஹாட் ஆர் கோல்ட்?’ என்றான்.

‘இட்ஸ் ஓ.கே.’ என்று கனைத்தார் ஹவுஸ் ஓனர். அவரைப் பார்க்கையில், செக்ரட்டரி அடித்த பாடம், மண்டையில் ஏறி பல்சுவை நடனம் ஆடிக்கொண்டிருந்தது நன்றாகத் தெரிந்தது.

கோல்டாக இரண்டு சோயா பாலும், வார்மாக இரண்டு சோயா பாலும் கொண்டு வந்து வைத்தாள் ஷமித்ரா.

அதை ஒரு சிப் சிப்பிவிட்டு, ஹவுஸ் ஓனர் கனைத்தபடி ஆரம்பித்தார். ‘தம்பீ... நான் உங்களுக்குத்தான் வீட்டை விட்டேன்…….’

உடனே மறுத்த சந்தன், ‘சார், எனக்குத்தான் விட்டீங்க, நாங்க கொஞ்ச நாள் லிவிங் டுகெதரா இருந்தோம். அதை ஃப்ராங்க்கா சொல்லவும் செஞ்சோம். யாருக்கும் எந்தத் தொந்தரவும் குடுக்கல. கல்யாணம் பண்ணிக்க கொஞ்சம் டைம் தேவைப்பட்டுது, அதான். இப்ப பிரச்னை ஆகுதுன்ன உடனே, இவ ஹாஸ்டலுக்கு போயிட்டா. நான் தனியாத்தான் இருக்கேன் இப்ப. இவளோட பொருளை எடுக்கத்தான் இப்ப பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் வந்திருக்காங்க’ என்றான்.

கொஞ்சநேரம் ஆழமாக யோசித்தார் ஹவுஸ் ஓனர். செக்ரட்டரியை ஒரு பார்வை பார்த்தார். அந்த சைக்ளிக் கேப்பில் செக்ரட்டரி என்ன கம்யூனிகேட் செய்தாரோ, ஏதோ புரிந்த மாதிரி தலையை தனக்குத்தானே ஆட்டிக் கொண்டவர் மீண்டும் சந்தனை ஏறெடுத்துப் பார்த்தார். ஷமித்ராவையும் சைடாக அளவெடுத்தவர் ,

‘அதெல்லாம் சரிதான் தம்பீ... ஆனா இங்க இருக்கறவங்க எல்லாம் ஃபேமிலீஸ். அவங்க எல்லாம் சங்கடமா ஃபீல் பண்றாங்க. குழந்தைங்க எல்லாம் இருக்காங்க. நான் ஃப்ளாட் அசோசியேஷனுக்கு கட்டுப்பட்டு ஆகணும். இப்ப இவங்க காலி பண்ணிட்டுப் போனாலும், அப்பப்ப உங்களை பாக்க வருவாங்க இல்லையா?’

‘ஏன் சார், மத்த வீட்டுக்கெல்லாம் கெஸ்ட், விசிட்டர்ஸ் வர்றது இல்லையா?’

‘ஃபேமிலி விசிட்டர்ஸ், கெஸ்ட்ஸ் எல்லாம் வரலாம் தம்பீ. இது சரி வராது இல்லையா?’

‘சார், நான் வாடகை கொடுக்கும் வரை இது என் வீடு. என்னைப் பாக்க இவ மட்டும் இல்ல, இன்னும் யார் வேணா வருவாங்க. இதையெல்லாம் வேணாம்னு சொல்றது, கண்டிஷன்ஸ் போடறது எல்லாம் டூ மச்’

‘தம்பீ, இங்க பல குடும்பங்கள் வாழறாங்க, உங்க இஷ்டத்துக்கு எல்லாம் ஆட்டம் போட முடியாது. உங்க இஷ்டத்துக்கு வாழணும்னா தனியா சொந்த வீடு வாங்கிக்கோங்க, இந்த வீட்டை காலி பண்ணிடுங்க. நோட்டீஸ் பீரியட் 2 மாசம். 2 மாசம் டைம் தர்றேன், அதுக்குள்ள காலி பண்ணிடுங்க. காலி பண்றவரைக்கும் இவங்க இங்க வராம பாத்துக்கோங்க, அதான் நம்ம ரெண்டு பேருக்கும் மரியாதை’

‘ரெண்டு மாசம்லாம் வேணாம்; இன்னும் 2 வாரத்துல காலி பண்ணிடுவாரு. நீங்க அட்வான்ஸ் பணத்தை ரெடி பண்ணி வச்சிக்கோங்க’ என்று, இடையில் புகுந்து சொன்னாள் ஷமித்ரா.

ஷமித்ராவை ஆச்சரியமாகப் பார்த்தான் சந்தன்.

*

புதன், 8 மா 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon