மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 23 டிச 2016

ஆர்யாவின் ‘ஜல்லிக்கட்டு’ விளையாட்டு வினையில் முடிந்தது!

ஆர்யாவின் ‘ஜல்லிக்கட்டு’ விளையாட்டு வினையில் முடிந்தது!

இன்று விஷாலின் ‘கத்தி சண்டை’ வெளியாவதை முன்னிட்டு, நேற்று அவர் டிவிட்டர் லைவ்-இல் ரசிகர்களுடன் அரட்டையில் ஈடுபட்டார். இதுபோன்று நடிகர்கள் லைவ்-இல் தோன்றுவதும் ரசிகர்கள் அவர்களை கேள்வி கேட்பதும் சமீபத்திய ட்ரெண்ட். விஷாலிடம் பலரும் பல்வேறு கேள்விகளை கேட்டபோது, அவரும் பதில் கூறிய வண்ணம் இருந்தார். அப்போது ஒருவர், ஜல்லிக்கட்டு பற்றி உங்களுடைய கருத்து என்ன என்ற கேள்வியை எழுப்பினார்.

விஷால் PETA இயக்கத்துக்கு ஆதரவாக ஜல்லிக்கட்டு எதிர்ப்பு நிலையை ஏற்கனவே தெரிவித்திருந்தார். தன் படம் வெளிவரும் வேளையில் இந்த கேள்விக்கு பதில் சொல்லி சிக்கலில் மாட்ட விரும்பாததால் அதற்கு பதிலளிக்கவில்லை. விஷால் அந்தக் கேள்வியைத் தவிர்க்காமல் பதில் சொல்லுங்கள் என ஒரு பெண் ரீ-ட்விட் செய்தார். அந்த பெண்ணின் ட்விட்டுக்கு, அதற்கு பதில் சொன்னால் விஷாலுக்கு யார் ஆதரவு தெரிவிப்பார்கள் டார்லிங் என ஆர்யா பதில் அளித்திருந்தார். அப்போது விஷால் லைவ்-இல் ஆர்யா நுழைந்திருந்தார். சரி அவரை விடுங்க நீங்க பதில் சொல்லுங்க? என ஆர்யாவுக்கு ஒருவர் ட்விட் செய்ய அதற்கு ஆர்யா, ஜல்லிக்கட்டு என்றால் என்ன?.. என்று நக்கல் ஸ்மைலி போட்டு மறுகேள்வி கேட்டது தான் பிரச்சனையின் ஆரம்பப்புள்ளி. ஆர்யாவின் நக்கல் ஸ்மைலியினால் தற்போது ட்விட்டரில் ஆர்யா பற்றிய மீம்கள் வலம்வரத் தொடங்கியிருக்கின்றன.

தொடர்ந்து ஆர்யாவைக் கலாய்த்தும், ஆபாச வார்த்தைகளால் வசை பாடியும் ட்வீட்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஜல்லிக்கட்டு என்றால் என்ன? என்று ஆர்யா கேட்ட கேள்வி இங்கே பிரச்சனை இல்லை. வேண்டுமென்றே பதிவிட்ட அந்த நக்கல் ஸ்மைலி பலரது தமிழ்ப்பற்றை சீண்டியிருக்கிறது. இவர்கள் ஒருபுறமிருக்க ஆர்யா ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக ‘கடம்பன்’ படத்தில் ஆர்யா ஜல்லிக்கட்டு விளையாடும் புகைப்படத்தை வெளியிட்டு, அவருக்கு ஜல்லிக்கட்டு பற்றி தெரியும் என்று தெரிவித்துள்ளனர். இது ஆர்யா விளையாட்டுக்காக செய்த விஷயம் இப்போது அவருக்கு வினையாகி நிற்கிறது.

வெள்ளி, 23 டிச 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon