ஜெயக்குமாருக்கும் அண்ணாமலைக்கும் போட்டி: நேரு

politics

யார் விமர்சனம் செய்தாலும், தமிழக மக்கள் திமுகவின் பக்கமும், முதல்வர் பக்கமும்தான் உள்ளனர் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளர்.

திருச்சி தில்லைநகர் மக்கள் மன்றத்தில் 75 ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் புகைப்படக் கண்காட்சி மற்றும் பல்துறை பணி விளக்கக் கண்காட்சியினை இன்று(மார்ச் 26) நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் திறந்து வைத்து, ரூபாய் ஒரு கோடியே 70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

இதையடுத்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, முதல்வர் துபாய் போனது எதற்கு என்று ஆண்டவனுக்குத் தான் தெரியும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சொல்லியிருக்கிறாரே? என்ற கேள்விக்கு, “ஆண்டவனுக்கு தெரிஞ்சி தானே அவரே திருச்சிக்கு கையெழுத்து போட வந்தாரு. முதலீட்டாளர்களை கவர்வதற்கும், தமிழகத்தில் வேலை வாய்ப்பை உருவாக்குவதற்காகவும், மற்ற மாநிலங்களைக் காட்டிலும் முதல் மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதற்காகவும் தான் தமிழக முதல்வர் துபாய் சென்றுள்ளார். அதை கொச்சைப்படுத்துவதுதான் இவர்களுடைய வேலை. இவருக்கு முன்னாடியே அண்ணாமலை பேச ஆரம்பித்துவிட்டார். அவர்கள் பேசுவதற்கு வேறு பொருளே கிடைப்பதில்லை. யார் அதிகம் திமுகவை திட்டுவது? என்பதில் அதிமுகவினருக்கும், அண்ணாமலைக்கும் இடையே போட்டி நடக்கிறது. அண்ணாமலை எங்களை வாழ்க என்றா சொல்வாரு? பிறகு எப்படி கட்சி நடத்துறது. அவர் பாட்டுக்கு ஏதாவது சொல்லிட்டு போகட்டும். யார் என்ன பேசினாலும் ஜனங்கள்தான் முடிவு செய்யணும். மக்கள் திமுக, பக்கமும், முதல்வர் பக்கமும் இருக்கிறார்கள். அவர்கள் எங்கள் இடத்துக்கு வருவதற்கு முயற்சி செய்கிறார்கள். அதற்கு இப்படி ஏதாவது பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதுதான் விஷயம்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுவதற்கான விரிவான திட்ட இறுதி வடிவம் தயாரிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வார காலத்திற்குள்ளாகவே டெண்டர் பணிகள் தொடங்கப்படும். புதிய காவிரி பாலம் கட்டுவதற்கு ஏற்கனவே 90 கோடி என்று நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது 130 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காவிரி ஆற்றிலிருந்து நேரடியாக ஜங்ஷன் வரை நெடுஞ்சாலைத்துறை சார்பில் உயர்மட்ட பாலம் அமைப்பதற்கும் திட்ட மதிப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சியை விரிவுபடுத்த கூடிய காரணத்தினால் புதிய கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். திருச்சி மாவட்டத்தில் ஒரு முன்மாதிரி மாவட்டமாக கொண்டுவருவதற்கான பணிகள் அனைத்தும் நடைபெறும்” என்று கூறினார்.

பால் விலை மற்றும் மின் கட்டண உயர்வு வரும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சொல்லியிருக்கிறாரே? என்று கேள்வி கேட்டதற்கு, “அவர்கள் ஆட்சியில் எதற்கும் விலை ஏற்றவில்லையா. ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு காலத்திலும் பொருளாதார ரீதியாக ஏற்றம் பெறுகின்ற போது மக்கள் அதை சந்திக்க வேண்டியிருக்கும். விலை உயர்வு என்பது வேண்டுமென்றே திணிப்பதில்லை. தனியார் கொள்முதல் செய்யும்போது கட்டுப்படியாகவில்லை, விலையேற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள். அதிகாரிகள் சம்பளம் அதிகமாக வேண்டுமென்று கேட்கிறார்கள். எவ்வளவு தான் அரசு மானியம் கொடுத்தாலும் சிறு அளவாவது மாறுதல் வரும். அது முதல்வர் முடிவெடுக்க வேண்டியது” என்று கூறினார்.
**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.