“கூட்டணி கட்சிகள் இல்லாமல் திமுக, அதிமுகவால் வெல்ல முடியாது” – கே.பாலகிருஷ்ணன்

Published On:

| By Selvam

தமிழகத்தில் கூட்டணி கட்சிகள் ஆதரவில்லாமல் திமுக, அதிமுகவால் வெற்றி பெற முடியாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று (நவம்பர் 24) தெரிவித்துள்ளார்.

மதுரையில் இன்று மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியபோது, “திமுக ஆட்சி பொறுப்பேற்று மூன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது. வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திரும்ப திரும்ப வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றி வருகிறோம்.

குறிப்பாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்களின் பிரச்சனைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, அவர்களது பிரச்சனைகளுக்கு அரசு தீர்வு காண வேண்டும். அதேபோல, சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சனையில் சங்கத்தை இன்று வரை பதிவு செய்யவில்லை. இது சாதாரணமாக அரசு செய்ய வேண்டிய ஒரு வேலை.

ஆனால், கார்ப்பரேட் நிறுவனத்தின் கோபத்திற்கு ஆளாகாமல் இருப்பதற்காக, சங்கத்தை பதிவு செய்யாமல் இருப்பது நல்லதல்ல. எனவே விரைவாக சங்கத்தை பதிவு செய்ய வேண்டும்.

அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள், ஆசிரியர்கள் பிரச்சனைகளை தீர்க்காமல், தமிழக அரசு சில நிவாரண திட்ட உதவிகளை மட்டும் செய்து மக்களின் ஆதரவை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று நினைப்பது மிகவும் சிரமம். திமுகவின் நிவாரண திட்டங்களை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோரின் பிரச்சனைகளை தீர்ப்பதில் அரசு அக்கறை காட்ட வேண்டும்” என்றார்.

தொடர்ந்து, கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்பது எப்போதும் இல்லை என்று அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கே.பாலகிருஷ்ணன், “தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக கட்சிகள் பெரிய கட்சிகளாக இருந்தாலும், தேர்தலில் வெற்றி பெற்றாலும் கூட்டணி இல்லாமல் அந்த கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற முடியாது.  அவர்கள் தனித்து ஆட்சியமைப்பது சாத்தியமில்லை. தேர்தல் வெற்றிக்கு கூட்டணியை பயன்படுத்துகிறார்கள். ஆனால், ஆட்சியமைக்கும் போது மட்டும் தனியாக ஆட்சியமைக்கிறார்கள்.

இப்போது புதிதாக வந்துள்ள சில கட்சிகள் நாங்கள் கூட்டணி அமைத்து ஆட்சியில் பங்கு கொடுப்போம் என்று சொல்கிறார்கள். அவர்களுடன் யார் யார் கூட்டணி அமைக்க போகிறார்கள்? அவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவார்களா என்பதையெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை சின்னம்”… ஜானகி நூற்றாண்டு விழாவில் ரஜினி

‘எமக்கு தொழில் ரொமான்ஸ்’: விமர்சனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share