விஜய்க்கு அமைச்சர் அட்வைஸ்!

Published On:

| By Balaji

நடிகர் விஜய் நடிக்க வந்தால் நடிப்பை மட்டும் பார்க்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.

சர்கார் திரைப்படத்தின் பாடல் வெளியிட்டு விழா நேற்று (அக்டோபர் 2) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விஜய், “சர்கார் படத்தில் முதல்வராக நடிக்கவில்லை. நிஜத்தில் முதல்வரானால் நடிக்கமாட்டேன், தலைவன் இருப்பவர்கள் சரியா இருந்தால், கீழே உள்ளவர்களும் சரியாக இருப்பார்கள்” என பேசியிருந்தார்.

ADVERTISEMENT

மேலும், சில அரசியல் கருத்துகளையும் கூறியிருந்தார். விஜயின் பேச்சு தொடர்பாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.

மதுரையில் இன்று (அக்டோபர் 3) செய்தியாளர்களை சந்தித்த அவர், “அரசியலில் எப்போது குதிக்கலாம் என்று விஜய் பார்க்கிறார். அவரது அப்பாவும் வலையெல்லாம் போட்டு வைத்து, குதிப்பா நான் பார்த்துக்கிறேன்னு சொல்கிறார். ஆனால் விஜய் குதிப்பதற்குப் பயப்படுகிறார்.

ADVERTISEMENT

இப்போது அவருக்குத் தைரியம் இருந்தால் குதிக்கட்டும். அடிபடாமல் இருந்தால் அவரது சமத்து. அரசியல் பற்றி விஜய்க்கு தெரியவில்லை. ஏதோ சில ரசிகர்கள் வந்தால் அவர் தன்னை எம்ஜிஆர்போல் நினைத்துக் கொள்கிறார்.

தமிழ்நாட்டில் ஒரு அரசியல் ட்ரெண்ட் உருவாகியுள்ளது. யார் வந்தாலும் அதிமுக அரசைக் குறை சொன்னால் அவர்கள் ஹீரோ ஆகிவிடுகிறார்கள்.

ADVERTISEMENT

அப்படித் திட்டுவது எங்களை அல்ல இந்த தமிழ்நாட்டு மக்களை. அதனால் அது எங்களைச் சேராது, அதெல்லாம் அவர்களையே சேரும். என்ன, என்ன வசனம் எழுதிக் கொடுக்கிறார்களோ அந்த வேடத்துக்கு ஏற்றார்போல் வசனத்தைப் பேசுவது உங்கள் வேலை.

அதைச் சரியாகப் பாருங்கள், நாங்கதான் நாட்டைச் சரியா பார்த்துக் கொள்கிறோமே, உங்களுக்கு என்ன கவலை. மக்கள் உங்களிடம் சொன்னார்களா? இந்த நாட்டில், எதுவுமே சரியில்ல, நீங்க ஏன் நடிக்கப் போகிறீர்கள், வாங்க அரசியலுக்கு விஜய் சார் என்று யாராவது கூப்பிட்டார்களா” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜய் முதல்வராக வேஷம் கட்டலாம், அதை மக்கள் பார்த்து ரசிப்பார்கள். ஆனால் முதல்வராகச் செயல்படுவது சாதாரண காரியமல்ல என்று கூறியுள்ள உதயகுமார், “ நீங்கள் ஒரு மணி நேரம் வசனம் பேசிவிட்டு மூன்று மணி நேரம் கேரவனில் ரெஸ்ட் எடுப்பவர்கள்.

திருவிழாவுக்கு வருவோரெல்லாம் சாமி ஆகமுடியாது. கடவுள் கொடுத்த சினிமா தொழிலை ஒழுங்காகப் பாருங்கள்.

ஆகவே தம்பி விஜய் சர்க்கஸ் காட்டுவதைத் தொடர்ந்து காட்டட்டும் அதில் ஒன்றும் மாற்றுக்கருத்தில்லை” என்று கூறியுள்ளார்.

**ஆதரவு**

இதற்கிடையே, திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன், “விஜய் நல்லதைதான் கூறியுள்ளார். ரொம்ப கேஷுவலாக டயலாக் விட்டிருக்கிறார். உண்மையில் அப்படித்தான் இருக்கணும். நடிக்காமல் மக்களுக்கு சேவை செய்யணும். எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியை வைத்துக் கொண்டு நடிச்சுட்டு இருக்கார் என்பதை அழகாக கூறியுள்ளார். அவருக்கு என பாராட்டுக்கள்” என விஜயின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share