சிஏஏ, என்.ஆர்.சி. உள்ளிட்ட பல விவகாரங்களில் மத்திய அரசோடு நேருக்கு நேர் மோதிக் கொண்டிருக்கும் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, விரைவில் பிரதமரை சந்திக்கும் சந்தர்ப்பம் நிகழ இருக்கிறது.
மத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி,தினந்தோறும் போராட்டங்கள் நடத்திவரும் நிலையில், விரைவில் நடக்க இருக்கும் குடியரசு தின பேரணி அணிவகுப்பில் மேற்கு வங்காள மாநிலம் இடம்பெறவில்லை என்பதும் இருவருக்கும் இடையே கசப்பை அதிகப்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 10 ஆம் தேதி கொல்கத்தா துறைமுக அறக்கட்டளையின் நிகழ்வில் கலந்துகொள்ள கொல்கத்தாவுக்கு செல்கிறார்.
மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி மீண்டும் வென்றபிறகு மேற்கு வங்காளம் செல்வது இது முதல் முறையாகும். பிரதமரின் ஒரு நாள் கொல்கத்தா பயணத்தின் போது முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் மோடிக்கும் இடையே சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ளது என்று திருணமூல் காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர். இரு தலைவர்களும் தேசிய குடிமக்கள் பதிவு (என்ஆர்சி) மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) உள்ளிட்ட பல்வேறு மாநில மைய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளது என்று அவர்கள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வருகின்றன.
முன்னதாக கடந்த செப்டம்பர் 18 அன்று மம்தா பானர்ஜி கிட்டத்தட்ட 16 மாத இடைவெளிக்குப் பிறகு பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்தார். அந்த நேரத்தில், இந்த சந்திப்பை ‘அரசியல் சாராத சந்திப்பு’ என்று குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து அவர் முதல் முறையாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்தார். சர்ச்சைக்குரிய என்.ஆர்.சி உட்பட பல பிரச்சினைகள் குறித்து அப்போதே இருவரும் விவாதித்தனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு நடந்தால் அது முக்கியத்துவம் மிகுந்த சந்திப்பாகவே இருக்கும்.
