தூத்துக்குடி கலவரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதனை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் நேற்று (ஜூன் 29) அனுமதி வழங்கியுள்ளது.
தூத்துக்குடியில் கடந்த மாதம் 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். இதையொட்டி நடந்த கலவரத்தில் முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட மதுரை கே.கே நகரைச் சேர்ந்த சேதுராமன் மகன் வாஞ்சிநாதன் (37) என்பவரை சிப்காட் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இவர் மக்கள் அதிகாரம் அமைப்பின் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகியாக உள்ளார். கைது செய்யப்பட்ட வாஞ்சிநாதனை, கடந்த 21ஆம் தேதி தூத்துக்குடி ஜேஎம் 3 நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி தமிழ்ச்செல்வி உத்தரவிட்டார். இதையடுத்து, மருத்துவப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனை அழைத்து வரப்பட்ட அவர், பின்னர் பாளை மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அவரை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் காவல் துறையினர் அனுமதி கோரியிருந்தனர். போலீஸாரின் கோரிக்கையை ஏற்று, வாஞ்சிநாதனை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.�,