திருவண்ணாமலையில் மகா தீபம்!

Published On:

| By Balaji

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் இன்று (டிசம்பர் 2) மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் தீபத்திருவிழா நவம்பர் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று அதிகாலை 3.20 மணிக்கு அண்ணாமலையார் கருவறை முன்பாக சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது. பிறகு, பஞ்ச பூதங்களைக் குறிக்கும் வகையில் பரணி தீபம் மூலம் 5 விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது. இது ஒவ்வொரு சன்னதியாகக் கொண்டு செல்லப்பட்டு அனைத்துச் சன்னதிகளிலும் தீபம் ஏற்றப்பட்டது.

ADVERTISEMENT

அதிகாலை 3 மணி முதல் பகல் 11 மணிவரை கிழக்கு ராஜகோபுரம் வழியாக பக்தர்கள் கிளி கோபுரத்தின் உட்புறம் வந்து பரணி தீபத்தை தரிசனம் செய்தனர். மாலை 6 மணிக்கு, கோயிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் 3.5 டன் நெய் மற்றும் ஒரு டன் எடை கொண்ட திரியால் மகா தீபம் ஏற்றப்பட்டது. அதற்கான நெருப்பு கோயிலில் ஏற்றப்பட்ட பரணி தீபத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டது. இதை லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்தனர்.

மகா தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, மதுரை, திருச்சி, பழனி உள்ளிட்ட கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. மலை உச்சியில் ஏற்றப்பட்டுள்ள மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் எரியும்.

ADVERTISEMENT

தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர். அங்கு அவர்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணிகளுக்காக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மலை மீது ஏற நீதிமன்ற உத்தரவின்படி 2 ஆயிரத்து 500 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share