நிலுவையில் உள்ள ஊக்கத்தொகையை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஏஐடியூசி ‘ஆஷா’ பணியாளர் சங்கத்தினர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகத்தில், தமிழ்நாடு ஏஐடியூசி ‘ஆஷா’ பணியாளர் சங்கத்தைச் சேர்ந்த கிராமப்புறச் சுகாதாரச் செயற்பாட்டாளர்கள் இன்று (செப்டம்பர் 14) ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு திட்டத்தின் கீழ் மலைக் கிராமங்களில் பணியாற்றும் தங்களுக்கு ஊக்கத்தொகையாக வெறும் 600 ரூபாய் வழங்கப்படுவதாகத் தெரிவித்தனர் ‘ஆஷா’ பணியாளர்கள். நிலுவையில் உள்ள ஊக்கத்தொகையை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், 250க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
“ஊக்கத்தொகை முறையை ஒழித்து மாத ஊதியமாக ரூ.18,000 வழங்க வேண்டும். ஆயிரம் பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில், அனைத்துக் கிராமங்களிலும் ஆஷா பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். ஆஷா மேற்பார்வையாளர்களாக உள்ள செவிலியர்கள் அனைவருக்கும் நிரந்தரச் செவிலியர் பதவிகள் வழங்கிட வேண்டும். நீண்ட காலமாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ஊக்கத்தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும்” என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
,