>டெல்லியில் இன்று, பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் மோடி கலந்துகொண்டார்.தற்போது நிகழ்ச்சிக்கு பிறகு மோடியை, ரஜினி சந்தித்துப் பேசுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி, ரஜினிகாந்த் வீட்டுக்கு வந்தார். அதனால் ரஜினி, நேரடியாக பாஜக-வுக்காக ஆதரவு ஏதும் அளிக்கவில்லை என்றாலும், ‘ரஜினியின் ஆதரவு மோடிக்குதான்’ என்பதுபோன்ற தோற்றம் உருவாக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் ரஜினியை ‘வாய்ஸ்’ கொடுக்கவைக்கலாம் என்ற திட்டம் பாஜக-வுக்கு இருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே இந்த முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால், பாஜக-வுக்கு ரஜினி இதுவரை பிடிகொடுக்கவில்லை. அதன்பின்னர் நடிகர் விஜய்யிடம் ஆதரவு கேட்டு நிர்பந்தம் செய்ததாகவும், அதன் காரணமாகவே ‘புலி’ படம் வெளியான சமயத்தில் ‘ரைடு’ நடத்தப்பட்டதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் விஜய், ‘யாருக்கும் ஆதரவு இல்லை’ என்று வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார்.
இதைத்தொடர்ந்து ரஜினியை அணுகிய பாஜக தரப்பிடம், ‘நான் இப்படியே இருந்துடறேனே… இனிமே எதுக்கு அரசியல்?’ என்று ரஜினி சொன்னதாகச் செய்திகள் வெளியானது. இந்நிலையில் ரஜினி, மோடியை சந்திக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மோடி, ரஜினியிடம் ஆதரவு கொடுக்குமாறு கேட்கும்பட்சத்தில் ரஜினிக்கு நிர்பந்தம் ஏற்படலாம். இதற்கிடையில், நாளை அமித்ஷா பிரச்சாரத்துக்காகத் திருச்சி வரவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
