நாட்டில் உள்ள ஒட்டுமொத்த வாக்காளர்களில் 4 முதல் 5 விழுக்காடு வாக்காளர்கள் சமூக வலைதளங்களில் இருப்பதாக தகவல் தொழில்நுட்பத் துறை நிபுணர் டி.வி.மோகன்தாஸ் பாய் கூறியுள்ளார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் குறித்து சூடான விவாதங்கள் நடக்கும் களமாக சமூக வலைதளங்கள் மாறியுள்ளன. குறிப்பாக இளைஞர்களின் அரசியல் களமாகவே சமூக வலைதளங்கள் உள்ளன. இந்த சூழலில் தேர்தலில் சமூக ஊடகங்கள் எத்தகைய தாக்கத்தை உண்டாக்கும் என்பது குறித்து இன்ஃபோசீஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதியியல் அதிகாரி டி.வி.மோகன்தாஸ் பாய் *பிடிஐ* செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், ‘நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் வாக்குகளில் சமூக ஊடகங்களில் இருப்பவர்களின் வாக்கும் முக்கியப் பங்கு வகிக்கும். சமூக ஊடகங்களில் செயல்படுவோரின் வாக்குகள் 4 முதல் 5 விழுக்காடு உள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள். 40 முதல் 50 விழுக்காடு இளைஞர்கள் சமூக வலைதளங்களில் உள்ளனர். பலர் முதல் முறை வாக்காளர்கள். இவர்கள் தகவலை அறிந்து கொள்வதற்கான முதன்மை ஊடகங்களாக சமூக வலைதளங்களே உள்ளன.
இளைஞர்கள் தொலைக்காட்சி பார்ப்பதில்லை. செய்தித்தாள்கள் படிப்பதில்லை. யூடியூப் மற்றும் சமூக ஊடகங்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். அதில் காணொலிகளைப் பார்க்கிறார்கள். இளம் வாக்காளர்களின் வாக்குகளைப் பெற, அவர்களை ஊக்குவிப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். அவர்களின் உணர்ச்சிகள் என்ன, எதை விரும்புகிறார்கள், எதைநோக்கி செல்ல விரும்புகிறார்கள் என்பதையெல்லாம் அறிய வேண்டும்” என்றார்.
சமூக வலைதளங்களில் இயங்குகிற இளைஞர்களை எந்தக் கட்சி அதிகம் கவரும் என்ற கேள்விக்கு, “சமூக வலைதளங்களில் இயங்கும் இளைஞர்களை அதிகம் கவரும் கட்சியாக பாஜகதான் உள்ளது. மோடியின் பிம்பம் இளைய தலைமுறையிடம் மிக வலுவாக உள்ளது. ராகுல் காந்தி 1990களின் மொழிகளில் பேசிக் கொண்டிருக்கிறார். அதனால் பெரிதும் ஈர்க்கப்படவில்லை” என்றார்.
