உயர்வடைந்த உற்பத்தித் துறை!

Published On:

| By Balaji

இந்தியாவின் உற்பத்தித் துறை கடந்த மார்ச் மாதத்தில், முந்தைய ஐந்து மாதங்களில் காணாத வளர்ச்சியை அடைந்துள்ளதாக நிக்கி மார்க்கிட் அமைப்பு தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நிக்கி மார்க்கிட் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘கடந்த மார்ச் மாதம், தேவை அதிகமாக இருந்ததால் உள்நாடு மற்றும் வெளிநாட்டு ஆர்டர்கள் குவிந்தன. இதனால், உற்பத்தித் துறை நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்பட்டன. இதையடுத்து, உற்பத்தித் துறைக்கான பி.எம்.ஐ. குறியீடு 52.5 புள்ளியாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஐந்து மாதங்களில் உற்பத்தித் துறை சந்தித்த அதிகபட்ச வளர்ச்சியாகும். முந்தைய பிப்ரவரி மாதத்தில் உற்பத்தித் துறையின் பி.எம்.ஐ. குறியீடு 50.7 புள்ளியாக இருந்தது. பி.எம்.ஐ. குறியீடு 50 புள்ளிகளுக்குமேல் இருந்தால் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்றம் நிலவும் எனக் கருதப்படுகிறது.

ADVERTISEMENT

கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் வெளியான பண மதிப்பழிப்பு அறிவிப்பால், உற்பத்தித் துறை சரிவில் இருந்தது. இந்நிலையில், இந்தாண்டு தொடக்கத்தில் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பிய உற்பத்தித் துறை, தொடர்ந்து மூன்று மாதங்களாக வளர்ச்சி பெற்று வருகிறது. சில உற்பத்தி நிறுவனங்கள், உற்பத்தியை அதிகரிப்பதற்காக கூடுதல் பணியாளர்களை நியமித்துள்ளன. வெளிநாடுகளிலிருந்து அதிக ஆர்டர்கள் குவிந்ததால் ஏற்றுமதி அதிகரித்து, அதன்மூலம் வேலைவாய்ப்பும் உயர்ந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share