ஜாமீன் பெற்று புழல் சிறையில் இருந்து வெளி வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை இன்று (செப்டம்பர் 27) நேரில் சந்தித்த கரூர் எம்பி ஜோதிமணி மிகவும் எமோசனலாக நலம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தார்.
2011 -2016 ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது வேலை வாங்கித் தருவதாக கூறி சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கில் செந்தில்பாலாஜியை கடந்த ஆண்டு அமலாக்க துறை கைது செய்தது.
தொடர்ந்து அவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றமும், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன.
இந்த நிலையில் உச்சநீதிமன்றம் நேற்று அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட முறை காவல் நீட்டிப்பு செய்து வந்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும் ஜாமீன் வழங்கியது.
இதனையடுத்து 471 நாட்களுக்கு பிறகு புழல் சிறையில் இருந்து நேற்று இரவு வெளியே வந்த செந்தில்பாலாஜிக்கு திமுகவினரும், அவரது ஆதரவாளர்களும் உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து கலைஞர் நினைவிடத்தில் செந்தில் பாலாஜி, அமைச்சர் பொன்முடியுடன் சென்று மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து நேற்று இரவு தனியார் ஹோட்டலில் தங்கி ஓய்வெடுத்த செந்தில் பாலாஜி, இன்று காலை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.
அமைச்சர்கள் சந்திப்பு!
பின்னர் மீண்டும் தனியார் ஹோட்டலுக்கு வந்த அவரை திமுக அமைச்சர்களான கே.என்.நேரு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், மா சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு, முத்துசாமி உள்ளிட்டோரும், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் நேரில் சந்தித்து வரவேற்றதோடு வாழ்த்துக்களும் தெரிவித்தனர்.
இந்நிலையில் செந்தில் பாலாஜியை பார்ப்பதற்காக கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வந்திருந்தார். முதலில் செந்தில் பாலாஜியை பார்த்ததும் பேச வார்த்தைகள் இன்றி மிகவும் எமோஷனலாக காணப்பட்டார் ஜோதிமணி.
பின்னர் சிறிது நேரம் அவரது கையைப் பிடித்து ஆறுதலும் வாழ்த்துக்களும் தெரிவித்து அவர் உரையாடினார்.
மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்!
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் அளித்த பேட்டியில், “15 மாதம் என்பது சாதாரணமானது அல்ல. அவருக்கு ஏற்பட்ட தனிமை துயரமானது. பாஜகவின் கைப்பாவையாக இருக்கும் அமலாக்கத்துறை அவரை சட்டவிரோதமாக கைது செய்து காவலில் வைத்தனர். சட்டத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத அமலாக்கத்துறையின் நிலைபாட்டை உச்சநீதிமன்றமும் விமர்சித்துள்ளது.
அவர் தனக்கு இதயம் வலிக்கிறது சொன்ன பிறகும் அமலாக்கத்துறை அவரை நடத்திய விதத்தையும், அவர் எப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதையும் நாம் அனைவரும் அறிவோம்.
எந்தவித சமரசமும் இன்றி சட்டப் போராட்டம் நடத்தி சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அவர் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும். அச்சுறுத்தல் மற்றும் அராஜகத்தால் யாரையும் பணிய வைக்க முடியாது என செந்தில் பாலாஜி நிரூபித்துள்ளார். இந்தியா கூட்டணி இதே ஒற்றுமையுடன் உறுதியாக இருந்து தொடர்ந்து வெற்றிகளை பெறுவோம்” என ஜோதிமணி கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
“45 நிமிஷம்” ஸ்டாலின்-மோடி மீட்டிங்… பேசியது என்ன?
சென்னை – சொத்து வரி மீண்டும் உயர்வு : தீர்மானம் நிறைவேற்றம்!