டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார்.
முன்னதாக, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புப் படையினர் சென்று தீயை அணைத்தபோது, வீட்டின் ஒரு அறையில் பாதி எரிந்த நிலையில் மூட்டை மூட்டையாக 500 ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இது குறித்த செய்திகள் வெளியாகி நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. நீதிபதியின் வீட்டில் பணம் சிக்கிய விவகாரம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை அமைத்தது. குழுவின் விசாரணையில் பணம் இருந்தது உறுதியானது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, டெல்லியில் இருந்து யஷ்வந்த் வர்மா அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். இதற்கிடையில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை மக்களவை உறுப்பினா்கள் 146 போ் மற்றும் மாநிலங்களவையைச் சோ்ந்த 62 உறுப்பினா்கள் என மொத்தம் 208 எம்.பி.க்கள் சாா்பில் நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் சமா்ப்பிக்கப்பட்டது.
மக்களவையில் நீதிபதியின் பதவிநீக்க தீா்மானம் ஏற்கப்பட்டதைத் தொடா்ந்து, அதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமா்ப்பிக்க கடந்த ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமாா், சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவாஸ்தவா, கா்நாடக உயா்நீதிமன்ற மூத்த வழக்குரைஞா் பி.வி.ஆச்சாா்யா ஆகியோா் அடங்கிய மூவா் குழுவை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா அமைத்தாா்.
இந்த குழு விசாரணை நடத்தி வரும் நிலையில், நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். அவரது ராஜினாமா கடிதம் குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விரைவில் முடிவெடுப்பார் என கூறப்படுகிறது.











