மத்திய மாநில அரசுகளின் உறவுகள் குறித்து ஆராய்வதற்காக தமிழக அரசிடம் இருந்து ஊதியம் பெற மாட்டேன் என்று ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தெரிவித்துள்ளார். Justice Kurian Joseph remuneration
சட்டமன்றத்தில் நேற்று (ஏப்ரல் 16) மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்திடவும், அதற்குரிய கொள்கைகளை வகுத்திட நடைமுறையில் உள்ள சட்டங்கள், ஆணைகளை ஆராய்ந்து மறு மதிப்பீடு செய்ய ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்மட்ட அளவிலான குழு ஒன்றினை முதல்வர் ஸ்டாலின் அமைத்தார்.
இந்தக் குழுவில், இந்திய கடல்சார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான அசோக் வர்தன் ஷெட்டி , தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் முன்னாள் துணைத்தலைவர் பேராசிரியர் மு.நாகநாதன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதுதொடர்பாக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தி இந்து ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில்,
“சரியான நேரத்தில் மிகவும் ஆக்கப்பூர்வமான முயற்சியை எடுத்த முதல்வர் ஸ்டாலினை இந்த நேரத்தில் நான் பாராட்டுகிறேன். மத்திய – மாநில அரசுகளின் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பது அவ்வப்போது ஆராயப்பட வேண்டிய ஒன்று.
மத்திய – மாநில அரசுகளின் நிதி, நிர்வாகம், சட்டமன்றம் ஆகிய அனைத்து உறவுகளும் ஆராயப்பட வேண்டும். எனவே, மத்திய – மாநில உறவுகளுக்கு வெளிப்படைத்தன்மை தேவையா என்பதையும், காலத்தின் தேவைக்கேற்ப மறுசீரமைப்பு தேவையா என்பதையும் இந்தக் குழு ஆராயும்.
இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம். அது உண்மையிலேயே மாநிலங்களின் ஒன்றியம் என்றால், இந்த ஒற்றுமையை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பதற்கு இந்த ஆய்வு உதவும் என்றும் நம்புகிறேன்.
இந்த பணியை நான் ஒரு கௌரவமாக பார்க்கிறேன். அதனால் எந்தவிதமான ஊதியத்தையும் ஏற்க மாட்டேன். எனக்கான ஊதியம் என்பது இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பது தான். இதை ஸ்டாலின் மனதார ஏற்றுக்கொண்டார்” என்று தெரிவித்தார். Justice Kurian Joseph remuneration