உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையின் போது இளைஞர் ஹேமச்சந்திரன் உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவமனையின் உரிமத்தை தமிழக அரசு தற்காலிகமாக ரத்து செய்தது.
தமிழக அரசின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இன்று (மே 27) ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரியை சேர்ந்த ஹேமச்சந்திரன் செங்கல்பட்டு மாவட்டம் பம்மலில் உள்ள பி.பி.ஜெயின் மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்துகொண்டார். மறுநாள் ஹேமச்சந்திரன் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மருத்துவமனையை ஆய்வு செய்த செங்கல்பட்டு சுகாதார பணிகள் துறை இணை இயக்குனர் மருத்துவமனையின் பதிவை தற்காலிகமாக ரத்து செய்து மே 4-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து பி.பி.ஜெயின் மருத்துவமனை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “நோயாளியிடம் முன் அனுமதி பெற்ற பிறகே, அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கடந்த 23 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் பி.பி.ஜெயின் மருத்துவமனையிடம் இந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்கவில்லை. மாறாக, மருத்துவமனையின் உரிமத்தை தமிழக அரசு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
மருத்துவ வசதி என்பது கார்ப்பரேட் மயமாகிவிட்ட நிலையில், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அதிக கட்டணம் வசூலிக்காத தனியார் மருத்துவமனைகள் அவசியமாகின்றன. இந்த மருத்துவமனைகளின் பங்களிப்பை அங்கீகரிக்க வேண்டும்.
இதனால் பி.பி.ஜெயின் மருத்துவமனையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்ட தமிழக அரசின் உத்தரவானது ரத்து செய்யப்படுகிறது” என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Comments are closed.