திருப்பரங்குன்றம் தீபத்தூணில் மாலை 6.30 மணிக்குள் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இன்று (டிசம்பர் 4) மாலை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும்.
ஆனால் இந்த ஆண்டு சிக்கந்தர் தர்கா அருகே இருக்கும் தீபத் தூணில் தீபமேற்ற உத்தரவிட வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை ஏற்ற நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவு காரணமாக , இந்து முன்னணியினரும் பாஜகவினரும் நேற்று திருப்பரங்குன்றம் மலையில் இருக்கும் தீபத் தூணில் தீபமேற்ற சென்றனர்.
அப்போது போலீசாருக்கும் இந்து முன்னணியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
எனினும் சிஐஎஸ்எப் படை வீரர்களுடன் சென்று தீபம் ஏற்ற மனுதாரருக்கு நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி மனுதாரர் திருப்பரங்குன்றம் செல்ல தயாரான போது தமிழக அரசு சார்பில், நீதிமன்றத்தில் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிராக முறையிடப்பட்டது. மதுரை ஆட்சியர் பிரவீன் குமார் மற்றும் மதுரை காவல் ஆணையர் லோகநாதன் ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவை கோயில் நிர்வாகம் பின்பற்றாததால் பக்தர்கள் விளக்கேற்ற அனுமதிக்கப்பட்டனர் என்று தெரிவித்த நீதிபதிகள் அரசின் மனுவை தள்ளுபடி செய்தனர்.
தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனே விசாரிப்பார் என்றும் தெரிவித்தனர்.
இந்தநிலையில் திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற போதிய நடவடிக்கை எடுக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீண்டும் மாலை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, “மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், மாநகர காவல் ஆணையர் லோகநாதன், கோயில் நிர்வாக அதிகாரி நாராயணன் ஆகியோர் காணொளி வாயிலாக 5.30 மணிக்கு ஆஜராக வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு பிறப்பிக்கும் போது 5.20 மணி.
எனவே அரசு தரப்பில் 5, 10 நிமிடத்தில் ஒரு ஆட்சியரையும், ஆணையரையும் அவசர அவசரமாக எப்படி ஆஜராக உத்தரவிட முடியும். அவர்களுக்கு பல்வேறு பணிகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கு நீதிபதி, ஆட்சியர், காவல் ஆணையர் ஆகியோர் எங்கிருப்பார்கள் என்று எங்களுக்குத் தெரியும் என்று கூறினார்.
இதையடுத்து ஆட்சியரும், காவல் ஆணையரும் ஆஜரானார்கள்.
அப்போது , நேற்று பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு ஆணையை உடனடியாக பின்பற்ற வேண்டும். மாலை 6.30 மணிக்கு தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும். மேலும், உத்தரவு நிறைவேற்றப்பட்ட நகலை நாளை காலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்.
திருப்பரங்குன்றத்தில் அமலில் இருக்கும் 144 தடை உத்தரவையும் ரத்து செய்தார்.
