சாதி மத அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கமாட்டேன் : நீதிபதி ஜெயச்சந்திரன்

Published On:

| By Kavi

சாதி, மதம் அடிப்படையில் நான் உத்தரவுகளை பிறப்பிக்கமாட்டேன் என்று அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார் நீதிபதி ஜெயச்சந்திரன்.

தமிழ்நாடு நிதி நிறுவன மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ரூ.35 கோடி அளவில் முதலீட்டாளர்களை ஏமாற்றியது தொடர்பான வழக்கை ரத்து செய்ய கோரிய வழக்கு இன்று (ஜூன் 25) சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, “முதலீட்டாளர்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்தை விற்று பணத்தை திருப்பி தருவதுதான் தார்மீக பொறுப்பு. இதையெல்லாம் மறைத்து மனுக்கள் திரும்ப பெற அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது” என்று அதிருப்தி தெரிவித்தார்.

தொடர்ந்து அவர், “சில வழக்கறிஞர்கள் குற்றவாளிகளை பாதுகாக்க நீதிமன்றத்திற்கு வரும்போது, சில நீதிபதிகள் அவர்களுக்காக உத்தரவு பிறப்பிக்கிறார்கள். சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் நீதிபதியின் சமூகத்தைச் சார்ந்தவராக இல்லாவிட்டால், அந்த நீதிபதியின் சமூகத்தைச் சார்ந்த வழக்கறிஞர்களை மூத்த வழக்கறிஞராக ஆஜராக நியமிக்கிறார்கள்.

சில வழக்கறிஞர்கள் சங்கங்கள் தற்போதுள்ள நீதிபதிகளுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து தீர்மானங்களை நிறைவேற்றுகின்றனர்” என்று கண்டனம் தெரிவித்தார்.

மேலும் அவர், “ சாதி, மதம் நம்பிக்கை அடிப்படையிலும், அவர்களது உடலில் என்ன அணிந்துள்ளார்கள் என்பதை பார்த்தும் நான் உத்தரவுகளை பிறப்பிக்கமாட்டேன்” என்றும் கருத்து தெரிவித்தார் நீதிபதி ஜெயச்சந்திரன்.

யூடியூபர் சவுக்கு சங்கர் வழக்கில் மூன்றாவது நீதிபதியான ஜெயச்சந்திரன், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக அதிரடியான கருத்துகளை தெரிவித்திருந்தார்.

“வழக்கு விசாரணையின் போது மறு தரப்பையும் முறையாக விசாரணை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் ‘LATIN MAXIM AUDI ALTERAM PARTEM’தான் சட்டக் கல்லூரிகளில் முதல் பாடம், அதை கடைபிடிக்காமல் ஜி.ஆர்.சுவாமிநாதன் அவசர அவசரமாக உத்தரவு பிறப்பித்திருக்கிறார்” என்றும் கூறியிருந்தார் நீதிபதி ஜெயச்சந்திரன்.

அவர் கூறிய கருத்துகளுக்கு எதிராக சில வழக்கறிஞர்கள் தீர்மானம் வெளியிட்டனர்.

இந்த நிலையில் நீதிபதி ஜெயச்சந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கள்ளச்சாராய மரணம்: சிபிஐ விசாரணை… ஆளுநரிடம் எடப்பாடி மனு!

நாய்களை வளர்க்க ரூ.45 கோடி ஒதுக்கிய நடிகர்: யார் தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share