ASNA CREATIONS நிறுவனம் சார்பில் சையத் தமீன் தயாரிப்பில், சந்தோஷ் ரயான் இயக்கத்தில், இன்வெஸ்டிகேசன் திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி”.
ஒரு மருத்துவ கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட நிலையில், அவளது கொலைக்கான காரணத்தைத் தேடி அலைகிறாள் அவளது தோழி. கொலையின் பின்னணியையும், அந்த கொலைக்கான காரணத்தைக் கண்டுபிடித்தாளா? கொலையை செய்தது யார்? அதன் பின்னால் உள்ள மர்மம் என்ன?, என்பது தான் இப்படத்தின் மையம்.
தயாரிப்பாளர் சையத் தமீன் , ” வஞ்சிக்கப்பட்ட தோழிக்கு நீதி வேண்டி போராடும் பெண்ணின் கதை தான் இது. உண்மையில் நடந்த கதை. இந்த கதையில் வரும் வில்லனுக்கு, 2017 ஆம் ஆண்டு பூந்தமல்லி கோர்ட்டில் தண்டனை வழங்கப்பட்டது. குற்றவாளி ஜெயிலில் இருக்கிறார். உண்மையில் நடந்ததை வைத்து தான் படம் எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் சினிமாவில் அதை விட குற்றங்கள் நடக்கின்றன என்பது போல், தயாரிப்பாளர் என்பவர் எல்லா வியாபாரங்களையும் போல பொருளை தயாரித்து சந்தைக்கு கொண்டு வருகிறார், ஆனால் இடையில் உள்ளவர்கள் தான் சம்பாதிக்கிறார்கள், தயாரிப்பாளருக்கு இறுதியில் தான் என்ன கிடைக்கிறது என்பதே தெரிய வருகிறது. (விவசாயிக்கே அப்படித்தானே ?) இந்த நிலை மாற வேண்டும்.”என்றார் (எங்க…?)
இசையைப் பொறுத்தவரை இது கௌதம் வின்சென்ட் என்பவரின் குடும்பப்படம். மூன்று பாடல்களுக்கு அவர் இசையமைக்க, இரண்டு பாடல்களை அவர் மனைவியே பாட, அப்படி போனது விஷயம்.
பட விழாவில் கலந்து கொண்டு தயாரிப்பாளர், நடிகர் JSK சதீஷ் பேசியபோது, “இந்த விழா மிக சரியாக நடக்கிறது. படக்குழு மிகத் தெளிவாக எல்லாவற்றையும் செய்கிறார்கள். . பிசினஸ் பற்றி தெரிந்து, துணிந்து நல்ல படத்தை எடுத்துள்ளார். படம் நான் பார்த்து விட்டேன், இயக்குநர் சந்தோஷ் முதல் படம் போல் இல்லாமல் அருமையாக எடுத்துள்ளார். மியூசிக் எடிட்டிங் எல்லாம் நன்றாக உள்ளது. நடித்த அனைவருமே மிக அற்புதமான நடிப்பை தந்துள்ளார்கள். இது போன்ற புதிய படத்தின் விழாவிற்கு வருகை தந்து ஆதரவு தரும் பாக்யராஜ் சாருக்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நன்றி.”என்றார்.
இயக்குனர் பாக்யராஜ் பேசியபோது, “தயாரிப்பாளர் சதீஷ் படம் பார்த்ததாக சொன்னார். அவர் சமீபத்தில் செய்த படம் இந்திக்கு ரீமேக் ஆகிறது. இப்போதெல்லாம் மிகப்பெரிய வெற்றிப் படமாக இருந்தால் தான் ரீமேக் செய்கிறார்கள். அவர் படம் பார்த்து நன்றாக இருப்பதாக சொல்வது படத்திற்கு கிடைத்துள்ள பெரிய பாராட்டு. தயாரிப்பாளர் சையத், இயக்குநர் சந்தோஷ், மற்றும் படக்குழுவிற்கு என் வாழ்த்துக்கள். சந்தோஷ் , யாரிடமும் உதவியாளராக இல்லாமல் இருந்தாலும், மிகத் தெளிவாக கதை சொன்னார். அதிலேயே அவர் திறமை தெரிந்தது.
இங்கு தயாரிப்பாளர் கதை சொன்னது இன்னும் அருமையாக இருந்தது. க்ரைம் சப்ஜெக்ட் எனக்கு மிகவும் பிடித்த சப்ஜெக்ட், நான் அதிகம் க்ரைம் ஆக்சன் படங்கள் தான் பார்ப்பேன். முதல் படத்திலேயே சந்தோஷ் அருமையாக இதை எடுத்துள்ளார். இந்தப் படம் யார் நடித்திருக்கிறார் என்பதை விட, என்ன மாதிரி கதையை எடுத்திருக்கிறார்கள் என்பது தான் முக்கியம்.”என்றார்.
சொன்னா, யாரு சார் கேக்கறா?
— ராஜ திருமகன்
