உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பிஆர் கவாய் இன்று பதவியேற்றார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் தலைமை நீதிபதியாக பிஆர் கவாய்-க்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான சஞ்சீவ் கண்ணாவின் பதவிக்காலம் நேற்று (மே 13) முடிவடைந்தது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பிஆர் கவாய் (பூஷன் ராமகிருஷ்ண கவாய்) இன்று பதவியேற்றார்.
ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வில், பிஆர் கவாய்க்கு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதி பிஆர் கவாய்.
பிஆர் கவாய் யார்?
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் 1960-ம் ஆண்டு நவம்பர் 24-ந் தேதி பிறந்தவர் பிஆர் கவாய்.1985-ம் ஆண்டு நீதித்துறையில் பணிகளைத் தொடங்கினார். 1992-ம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வின் உதவி அரசு வழக்கறிஞர் மற்றும் கூடுதல் அரசு வழக்கறிஞராகப் பணியாற்றினார். 8 ஆண்டுகளுக்குப் பின்னர் நாக்பூர் அமர்வில் அரசு வழக்கறிஞரானார். 2003-ம் ஆண்டு மும்பை (பம்பாய்) உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியானார். 2005ல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2019-ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார் பிஆர் கவாய். உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த காலத்தில் 7 தமிழர் விடுதலை வழக்கு, வன்னியர் இடஒதுக்கீடு வழக்குகளில் தீர்ப்பளித்த அமர்வில் இடம் பெற்றிருந்தவர் பிஆர் கவாய்.
தற்போது உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுள்ள பிஆர் கவாய், இந்த ஆண்டு நவம்பர் 25-ந் தேதி ஓய்வு பெறுகிறார். உச்சநீதிமன்றத்தின் 2-வது தலித் தலைமை நீதிபதி; முதலாவது பவுத்த மத தலைமை நீதிபதி என்ற பெருமைக்குரியவர் பிஆர் கவாய்.