நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மேல்முறையீடு செய்துள்ளார்.
2006-2011ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனை கடந்த 2023-ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் விடுதலை செய்தது.
அதுபோன்று, இதே காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவியை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் 2022-ஆம் ஆண்டு விடுவித்தது.
இந்த இரு உத்தரவுகளையும் மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்தார்.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததால் கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்தார்.
“சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோரை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் விடுவித்தது ரத்து செய்யப்படுகிறது.
செப்டம்பர் 9-ஆம் தேதி கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், செப்டம்பர் 11ஆம் தேதி தங்கம் தென்னரசு ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.
இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்து சாட்சி விசாரணையை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் மீண்டும் தொடங்க வேண்டும். தினசரி அடிப்படையில் வழக்கை நியாயமாக நடத்த வேண்டும்” என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதை எதிர்த்து கடந்த சனிக்கிழமை அமைச்சர் தங்கம் தென்னரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 27) அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அதில், “இந்த வழக்கில் விரிவாக விசாரணை நடத்திய பின்னர் தான் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இதை கருத்தில் கொள்ளாமல் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார். தினசரி விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார். இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கோரியுள்ளார்.
இந்த மனுவும், அமைச்சர் தங்கம் தென்னரசு மனுவும் விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
நிதி நிறுவன மோசடி வழக்கு… தேவநாதனுக்கு 7 நாட்கள் போலீஸ் கஸ்டடி!
கடைசி வரை வாய் மூடி மவுனம்… நன்றி கூறி வெளியேறிய மோகன்லால்… இதெல்லாம் நியாயமா லாலேட்டா?