வைஃபை ஆன் செய்ததும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இரு அமைச்சர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விடுதலையை கேள்விக்குள்ளாக்கிய உத்தரவு நகல் இன்பாக்சில் வந்து விழுந்தது.
அதைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது. “சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பை கடுமையாக விமர்சித்து, ஆகஸ்டு 9 ஆம் தேதி தாமாகவே முன் வந்து மறு விசாரணை செய்ய முடிவெடுத்தார் உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். இது தொடர்பாக பதிலளிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் பொன்முடிக்கும் உத்தரவிட்டு செப்டம்பர் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி.

தமிழ்நாட்டில் நீதித்துறை வரலாற்றில் கீழமை நீதிமன்றத் தீர்ப்பை கடுமையாக விமர்சித்து அதை உயர் நீதிமன்றம் தானாக முன் வந்து விசாரித்து மறு ஆய்வு செய்வது அரிதினும் அரிதாகவே பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் ஆகஸ்டு 11 ஆம் தேதி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, இந்த விவகாரத்துக்காக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷுக்கு பாராட்டு தெரிவித்துவிட்டு, ‘இதேபோல அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ஆர்., தங்கம் தென்னரசு, கீதாஜீவன் ஆகியோரும் சொத்துக் குவிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தீர்ப்பிலும் இதேபோல மறுஆய்வு செய்யப்பட வேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில் ஆகஸ்டு 22 ஆம் தேதி அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு என விருது நகர் மாவட்டத்தைச் சேர்ந்த இரு அமைச்சர்கள் சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பை கடுமையாக விமர்சித்து இதையும் தாமாகவே முன் வந்து மறு விசாரணைக்கு உட்படுத்த முடிவு செய்திருக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
இந்த இரு உத்தரவுகளையும் எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் மேல்முறையீடு செய்யப்படாததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.பி எல்.எல்.ஏ-க்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தார். இந்த வழக்கின் விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக இன்று (ஆகஸ்டு 23) விசாரணைக்கு வந்தது.
அப்போது அட்வகேட் ஜெனரல் சண்முக சுந்தரம், ‘அமைச்சர்களுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்குகளின் விசாரணை நடைமுறையில் எந்த தவறும் இல்லை. இந்த வழக்குகளில் லஞ்ச ஒழிப்புத்துறையின் விளக்கங்களை கேட்காமல் உத்தரவு பிறப்பித்தால் அது அந்த அதிகாரிகளை களங்கப்படுத்தியதாகி விடும். உச்ச நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றியே இந்த உத்தரவுகளை கீழமை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. கீழமை நீதிமன்ற தீர்ப்புகளை எதிர்த்து தாமாக முன்வந்து எடுக்கப்படும் இதுபோன்ற வழக்குகள் தவறான முன்னுதாரணமாகி விடும். பொதுவாக இதுபோல தாமாக முன்வந்து எடுக்கப்படும் வழக்குகள் வேறு நீதிபதிகளின் முன்பாகவே விசாரணைக்கு பட்டியலிடப்படும்’ என்று கூறினார்.

அதைக் கேட்ட நீதிபதி, “அமைச்சர்கள் இருவரையும் ஒரே நடைமுறையை பின்பற்றி தேதியை மட்டும் மாற்றம் செய்து விடுதலை செய்துள்ளார்கள். கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை படித்துவிட்டு மூன்று நாட்களாக தூங்கவில்லை. இந்த தீர்ப்பு மனதை உறுத்தியது. இதனை கண்டும் காணாமல் இருந்துவிட்டால் கடமையை செய்ய தவறியதாக இருந்துவிடும்’ என்றதோடு ஷேக்ஸ்பியர் தனது ஹேம்லட் நாடகத்தில் குறிப்பிட்ட, ‘Something is rotten in the state of Denmark’ என்ற சொற்றொடரை பயன்படுத்தியிருக்கிறார்.
மேலும், ‘நீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது. அதனால் தான் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளேன். நீதிமன்றம் என்பது குறிப்பிட்ட கட்சியினருக்கோ, அரசு தரப்புக்கோ உரித்தானது கிடையாது. சாதாரண ஏழை எளிய மக்களுக்கு சொந்தமானது. அவர்களுக்கு தேவையான தீர்ப்பை வழங்க வேண்டும். லஞ்ச ஒழிப்புத்துறை இந்த வழக்கில் 2021-ஆம் ஆண்டுக்கு பிறகு யூடர்ன் அடித்து தங்கள் நிலைப்பாட்டை மாற்றியுள்ளனர். ஆட்சியாளர்களுக்கு தகுந்தாற்போல அதிகாரிகள் மாறுகிறார்கள். அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, லஞ்ச ஒழிப்புத்துறை ஆகியோர் சூமோட்டோ வழக்கில் பதிலளிக்க வேண்டும். வழக்கின் விசாரணை செப்டம்பர் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது’ என்றும் தெரிவித்துள்ளார்.
பொன்முடியின் விடுதலைத் தீர்ப்பு கேள்விக்கு உட்படுத்தப்பட்டபோதே முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் மற்றும் திமுக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்தார். அப்போது, ’நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பை மட்டுமல்ல விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து வேலூர் மாவட்ட நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது பற்றியும் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே இது நீதித் துறை நிர்வாகவியல் ரீதியான பிரச்சினையாகவும் உள்ளது. அதனால் இதை எதிர்த்து அப்பீல் செய்யலாமா என்பதில் மாறுபட்ட கருத்துகள்’ முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டன.
இரு வாரங்களில் மீண்டும் இரு அமைச்சர்களின் விடுதலை நீதிபதியால் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. இது முதல்வர் ஸ்டாலினுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மீண்டும் இது தொடர்பாக அட்வகேட் ஜெனரல் மற்றும் திமுகவின் சட்ட வல்லுநர்களோடு ஆலோசனை நடத்தினார் முதல்வர். உயர் நீதிமன்ற நீதிபதியின் இந்த தாமாக முன் வந்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று முதல்வரிடம் ஆலோசனை முன் வைக்கப்பட்டிருக்கிறது.
இதையடுத்து ஆனந்த் வெங்கடேஷின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்ற பெஞ்ச்சில், அல்லது உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வது குறித்து அரசுத் தரப்பில் ஆலோசனைகள் தீவிரமாகியுள்ளன” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

Comments are closed.