எஸ்.ஐ.ஆர் பணியில் நீதிபதிகள் : மேற்கு வங்க வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி!

Published On:

| By Kavi

மேற்கு வங்க அரசுக்கும், இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும் இடையே நிலவும் “நம்பிக்கை இல்லாமை” காரணமாக உச்ச நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 20) முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. 

தேர்தலை எதிர்கொள்ளும் தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் ஆணையம் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளை மேற்கொண்டது.  இதில் மேற்கு வங்கத்திலிருந்து 57 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். 

ADVERTISEMENT

இதை எதிர்த்து மேற்கு வங்க அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. தேர்தல் ஆணையத்துக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியே நேரில் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். 

இந்தநிலையில் இவ்வழக்கு மீண்டும் இன்று  தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

ADVERTISEMENT

அப்போது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,   “ஆவணங்களின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்வதிலும், அதன் அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பது அல்லது நீக்குவது போன்ற முடிவுகளை எடுப்பதிலும் நியாயமானத் தன்மையை உறுதி செய்வதற்காக, இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டபடி, வேறுவழியில்லாமல் கொல்கத்தா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் ஒரு கோரிக்கையை நாங்கள்  வைக்கிறோம். 

அதாவது பணியில் இருக்கும் அல்லது ஓய்வுபெற்ற கூடுதல் மாவட்ட நீதிபதி அல்லது மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள நீதித்துறை அதிகாரிகளை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் நீக்கம் தொடர்பான புகார்களை விசாரிப்பதற்காக நியமிக்க வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தனர். 

ADVERTISEMENT

மேற்கு வங்க அரசுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் இடையே நம்பிக்கை இன்மை காரணமாக உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி இந்த உத்தரவை  நீதிபதிகள் பிறப்பித்தனர்.  

இதுவரை சரிபார்க்கப்பட்ட வாக்காளர் பட்டியலை பிப்ரவரி 28 அன்று வெளியிட வேண்டும். விடுபட்டவர்கள், நியமிக்கப்பட்ட நீதிபதிகளால் விசாரிக்கப்பட்ட பின்னர் துணைப் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share