நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கு: ஆஜரான வழக்கறிஞர்கள் பட்டாளம் – நாடாளுமன்ற செயலாளர்களுக்கு நோட்டீஸ்!

Published On:

| By Kavi

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா, தனது பணி நீக்கம் தொடர்பாக மூன்று பேர் குழுவை அமைத்த மக்களவை சபாநாயகரின் முடிவை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மா பணியாற்றிய போது, அவரது டெல்லி வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயை அணைக்கும் முயற்சியின் போது அவரது வீட்டில் இருந்து கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

ADVERTISEMENT

ஆனால் இந்த பணம் தன்னுடையது இல்லை என்று நீதிபதி யஷ்வந்த் வர்மா மறுக்க உச்ச நீதிமன்றம் உள் விசாரணைக் குழுவை அமைத்து விசாரணை மேற்கொண்டது. 

தொடர்ந்து இந்த குழு விசாரணையை முடித்து அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவிடம் அறிக்கை சமர்ப்பித்தது.

ADVERTISEMENT

அதில் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் தான் பணம் இருந்தது… அது உண்மை. அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று குடியரசு தலைவர் மற்றும் பிரதமருக்கு அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா கடிதம் எழுதினார்.

ADVERTISEMENT

தொடர்ந்து மக்களவையிலும் மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய கோரி கடிதம் கொடுத்தனர். இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ள, நீதிபதிகள் விசாரணைச் சட்டம் 1968-ன் கீழ்  உச்ச நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, கர்நாடக உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா ஆகியோர் கொண்ட குழுவை அமைத்தார் சபாநாயகர் ஓம்.பிர்லா.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நீதிபதி யஷ்வந்த் வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில், “மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலும் தனது பதவி நீக்கத்திற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. சட்டப்படி இரு அவைகளின் தலைவர்களும் கலந்துரையாடி ஒருமனதாக முடிவெடுத்த பின்னரே விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும், ஆனால் மாநிலங்களவையின் தீர்மானம் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பே, மக்களவை சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக விசாரணைக் குழுவை அமைத்தது சட்டவிரோதமானது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள், தீபங்கர் தத்தா மற்றும் ஏஜி மாசி அமர்வில் இன்று (டிசம்பர் 16) விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி யஷ்வந்த் வர்மா சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி, ராகேஷ் திவேதி, சித்தார்த் லூத்ரா, சித்தார்த் அகர்வால் மற்றும் வழக்கறிஞர்கள்  ஜெயந்த் மேத்தா   ஸ்துதி குஜ்ரால்,  வைபவ் நிதி, கேசவ், சௌஜன்யா சங்கரன், அபினவ் சேக்ரி என வழக்கறிஞர்கள் பட்டாளமே ஆஜரானது.

மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ஒரே தேதியில் நீதிபதி வர்மாவை பதவி நீக்கம் செய்ய கோரி மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே மக்களவைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவரும் இணைந்து குழுவை அமைக்க வேண்டும் என்று கூறி கடந்த ஜூலை மாதம், மக்களவையில் 145 நாடாளுமன்ற உறுப்பினர்களாலும், மாநிலங்களவையில் 63 நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் பதவி நீக்க நோட்டீஸ் வழங்கப்பட்டது என சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து நீதிபதிகள் “இத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்ட நிபுணர்களும் இருந்தும் இந்த நடைமுறை குறைபாட்டை யாரும் ஏன் சுட்டிக்காட்டவில்லையா?”  என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், இதுதொடர்பாக மக்களவைச் செயலாளர் மற்றும் மாநிலங்களவைச் செயலாளர் விளமக்களிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஜனவரி முதல் வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share