திருப்பரங்குன்றம் விவகாரம் : தலைமை செயலாளர் ஆஜராக நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!

Published On:

| By Kavi

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான வழக்கில் தலைமைச் செயலாளரும், ஏடிஜிபியும் ஆஜராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருந்தார். 

ADVERTISEMENT

இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்த நிலையிலும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணமாகவும் பாஜகவினர் மற்றும் இந்து முன்னணியினர் மலை மீது உள்ள தீப தூணில் தீபம் ஏற்ற போலீசார் அனுமதிக்கவில்லை. 

எனவே தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. 

ADVERTISEMENT

இந்த வழக்கு இன்று (டிசம்பர் 9) நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. 

இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில், ‘ திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக மேல்முறையீட்டு வழக்கு முடியும் வரை காத்திருக்க வேண்டும்.

ADVERTISEMENT

சட்டம் ஒழுங்கை கருத்தில் கொள்ள வேண்டும். மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வர உள்ளதால் அதன் பிறகு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பட்டியலிட வேண்டும். 

கோயில்களில் இதைத்தான் செய்ய வேண்டும் இதை செய்யக்கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. நீதிமன்றம் கூட சொல்ல முடியாது. தேவஸ்தானம்தான் முடிவு செய்ய வேண்டும். இது தொடர்பாக விரிவான உத்தரவுகள் உள்ளன.

 பிரச்சனை ஏதேனும் வந்தால் நீதிமன்றத்தை காரணம் காட்ட முடியாது, அரசே பொறுப்பேற்க வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

அப்போது, ‘இந்த வழக்கு தீபம் மற்றும் உரிமை சார்ந்தது மட்டுமல்ல சொத்துரிமை தொடர்பானது. மலையில் உள்ள தீபத் தூணில் தீபத்தை ஏற்ற போதிய முன்னேற்பாடுகளை செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி இந்த அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

தொடர்ந்து அரசின் வாதத்தை ஏற்ற நீதிபதி, ‘ நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வரும் டிசம்பர் 17ஆம் தேதி தலைமைச் செயலாளர் மற்றும் ஏடிஜிபி ஆகியோர் காணொளி காட்சி வாயிலாக ஆஜராக வேண்டும். இந்த வழக்கில் எதிர்மனுதாரராக உள்ள மதுரை காவல் இணை ஆணையர் (தெற்கு) நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இந்த வழக்கில் மத்திய உள்துறை செயலாளரும் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய கோரி திமுக உள்ளிட்ட இந்திய கூட்டணி கட்சி எம்பிக்கள் நோட்டீஸ் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share