என் உத்தரவை ஏன் நிறைவேற்றவில்லை? பதில் சொல்லியே ஆக வேண்டும் : நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்

Published On:

| By Kavi

 நீதிமன்ற உத்தரவுகளை மீண்டும் மீண்டும் மீறுவது “அறிவுறுத்தல்களின் கீழ்” நடக்கிறதா என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் இந்த உத்தரவு நிறைவேற்றப்படாததால் மனுதாரர் ராம ரவிக்குமார் அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.

ADVERTISEMENT

இந்த வழக்கு, திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் இன்று (டிசம்பர் 17) விசாரணைக்கு வந்தது.

அப்போது, மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், மாநகர் காவல் ஆணையர் லோகநாதன், துணை காவல் ஆணையர் இனிகோதிவ்யன், திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் நாராயணன் ஆகியோர் நேரில் ஆஜராகினர்.

ADVERTISEMENT

தமிழக தலைமைச் செயலர் முருகானந்தம், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் ஆகியோர் காணொலி வழியாக ஆஜராகினர்.

அப்போது  நீதிமன்ற உத்தரவுகளை மீண்டும் மீண்டும் மீறுவது “அறிவுறுத்தல்களின் கீழ்” நடக்கிறதா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

ADVERTISEMENT

 தொடர்ந்து நீதிபதி, இன்று கூட தலைமை செயலாளர் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட உரையை படித்துக்கொண்டிருந்த போது, நீதித்துறை மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தாலும், நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்தும்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார். இது ஏற்றுக்கொள்ள முடியாதது. நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தால், அது உயர் நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்படாவிட்டால் அல்லது ரத்து செய்யப்படாவிட்டால், அந்த உத்தரவை நிச்சயமாக நிறைவேற்ற வேண்டும்.

நீதிமன்ற உத்தரவை மீறுவதற்கு சட்டம் ஒழுங்கு ஒரு காரணமாக இருக்க முடியாது. அது மன்னிக்க முடியாதது. அது சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதற்குச் சமம். அது அரசியலமைப்பு இயந்திரத்தை முடக்குவதற்கு வழிவகுக்கும்.

இந்த நீதிமன்றத்தின் உத்தரவுகளை அதிகாரிகள் மீறியுள்ளனர், அவமதித்துள்ளனர். இதற்கு அதிகாரிகள் பதில் சொல்லியாக வேண்டும். 

உத்தரவை நிறைவேற்றாமல் எப்படி 144 தடை உத்தரவு பிறப்பித்தனர்” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு தலைமை செயலாளர், எந்த உள்நோக்கத்துடனும் 144 தடையாணை பிறப்பிக்கப்படவில்லை. ஏற்கெனவே உள்ள உத்தரவுகளின் அடிப்படையில் தான் 144 தடையாணை பிறப்பிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததற்கு அதிகாரிகள் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று மீண்டும் குறிப்பிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், நான் தேர்தலில் போட்டியிடபோவதாக தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விகாஷ் சிங் வாதம் செய்தது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.

இந்த வழக்கு தொடர்பாக விரிவான பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்ய தலைமை செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஜனவரி 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share