குடிமக்களை பாதுகாப்பது அரசனின் கடமை என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியுள்ளார். இந்த உத்தரவின் போது, “மனுஸ்மிருதி” மற்றும் “மகாபாரதம்” ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள ‘ராஜதர்மம்‘ எனப்படும் அரசனின் உயரிய கடமை குறித்து நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த ‘மாரிமுத்து’ வெளிநாட்டில் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி மலர்விழி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், “மத்திய ஆப்பிரிக்காவுக்கு 2021ல் தீப்பெட்டி தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்ற எனது கணவர், அங்கு எதிர்பாராத விதமாக உயிரிழந்தார்.அவரது இறப்புக்கு கேமரூன் நாட்டுத் தொழிற்சாலை இந்திய மதிப்பில் ரூ. 15 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்தது. இந்த இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்” என்றுகேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த மனுவை இன்று (டிசம்பர் 17) விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “ஒரு மன்னன் மக்களை மகிழ்ச்சியாகவும், வளமாகவும் வைத்திருக்க வேண்டும். மக்களை பாதுகாக்கத் தவறிய மன்னன் பாவியாகிறான் என்று மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது.
தற்போது இங்கு மன்னனாக இருக்கும் அரசுகள் மக்களை பாதுகாக்க வேண்டும். அரசாங்கம் மக்கள் நலன் சார்ந்து செயல்பட வேண்டும் என்று மனு சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இதேதான் புத்த மதத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் பண பரிமாற்றங்கள் மூலம் பெரும் அந்நியச் செலாவணியை ஈட்டும் அரசுக்கு, வெளிநாட்டு வேலைவாய்ப்பால் பிரச்சினைகள் வரும்போது அந்த தொழிலாளர்களை மீட்க விரைந்து செயல்பட்டு உரிய இழப்பீடு கொடுப்பதும் கடமையாகும்.
தற்போதைய காலத்துக்கு ஏற்ப சட்டங்களில் சில மாற்றங்களை கொண்டு வரவேண்டும்.
மக்களின் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு கொள்கை சார்ந்த சட்ட திட்டத்தை வகுக்க வேண்டும்.
அதுபோன்று மனுதாரரின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்காக மத்திய அரசு சட்டப் போராட்டத்தை நடத்த தயாராக இருக்க வேண்டும்.
மனுதாரருக்கு இழப்பீடு வழங்க அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய தூதரகம் எடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்
