திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனி நீதிபதியின் விசாரணைக்கு எந்த தடையும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்ற இந்த மாத தொடக்கத்தில் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார்.
சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி இந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை.
இதை எதிர்த்து அறநிலையத்துறை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகம், சிக்கந்தர் பாதுஷா தர்கா நிர்வாகம் ஆகிய மூன்று தரப்பினரும் மேல்முறையீட்டு மனு தாக்கல் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை நீதிபதிகள் ஜி.சுவாமிநாதன் மற்றும் ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்து வருகிறது.
மூன்றாவது நாளாக இன்று (டிசம்பர் 16) வாதங்கள் நடைபெற்றது.
வக்பு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முபின், ‘தர்காவுக்கு சொந்தமான இடத்தில்தான் தீபத் தூண் அமைந்துள்ளது. கடந்த கால உத்தரவுகளில் தீபத்தூண் என்று குறிப்பிடப்படவில்லை. இந்த விவகாரத்தில் சமரச தீர்வுக்கு தயார்’ என்று வாதங்களை முன் வைத்தார்.
அரசு சார்பில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் விகாஸ் சிங் ஆஜராகி, ‘திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்றுதான் மனுதாரர் ராம ரவிக்குமார் கேட்டுள்ளார். ஆனால் அந்த நிவாரணத்தை தாண்டி தனி நீதிபதி தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்’ என்று கூறினார்.
இந்த நிலையில் கோயில் – தர்கா தரப்பு இடையே பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிடலாமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு மனுதாரர் சார்பில், பேச்சுவார்த்தை தீர்வு கிடைப்பதை தாமதப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதிகள். கார்த்திகை மாதம் முடிந்து மார்கழி பிறந்து விட்டது. அடுத்த கார்த்திகைக்கு இன்னும் 360 நாட்களுக்கும் மேல் உள்ளது என குறிப்பிட்டனர்.
இன்று நடந்த வாதங்களைத் தொடர்ந்து வழக்கை நாளை ஒத்திவைத்த நீதிபதிகள், திருப்பரங்குன்றம் தீபத் தூண் சர்ச்சை வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான தனி நீதிபதியின் விசாரணைக்கு தடை இல்லை. தற்போதைய நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று கூறினர்.
டிசம்பர் 17ஆம் தேதி ஏடிஜிபி நேரில் ஆஜராக வேண்டும் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு விலக்கு அளிக்கவும் மறுப்பு தெரிவித்த நீதிபதிகள் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு வேண்டும் என்றால் தமிழ்நாடு அரசு தனி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனை அணுகலாம் என்றும் கூறினர்.
