வைஃபை ஆன் செய்ததும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடு செல்ல இருக்கிறார் என்று தொழில்துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜா பேசிய வீடியோ இன்பாக்ஸில் வந்து விழுந்தது. அதைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது. Judge Ananda Venkatesh on date Ministers in panic
“ஜனவரி 5ஆம் தேதி மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் துணை முதல்வருக்கு முன் பொறுப்பு முதல்வர் ஆகிறாரா உதயநிதி என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அந்த செய்தியில் ஜனவரி மூன்றாவது வாரம் அல்லது மாத இறுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் பத்து நாட்கள் வெளிநாட்டுப் பயணம் செல்ல திட்டமிட்டு இருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மூன்று நாட்கள் கழித்து முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை உலக முதலீட்டாளர் மாநாட்டிலேயே அமைச்சர் டி ஆர் பி ராஜா உறுதிப்படுத்தி இருக்கிறார்.
அந்த செய்தியில் மருத்துவ சிகிச்சை அல்லது ஓய்வுக்காக முதலமைச்சர் வெளிநாடு செல்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இன்று அமைச்சர் ராஜா பேசும்போது முதலீட்டாளர் மாநாட்டின் தொடர்ச்சியாக தொழில்துறை தொடர்பான விவகாரங்களுக்காக முதலமைச்சர் வெளிநாடு செல்கிறார் என்று கூறியுள்ளார்.

உலக முதலீட்டாளர் மாநாட்டில் எதிர்பார்த்ததை விட அதிக முதலீடுகள் வந்திருப்பதாக முதலமைச்சர் மகிழ்ச்சியில் இருந்த நிலையில், இன்று பிற்பகல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட ஒரு உத்தரவு முதலமைச்சர் மட்டுமல்ல பல அமைச்சர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
தமிழக அமைச்சர்கள் மீது பதிவு செய்யப்பட்ட சூமோட்டோ வழக்குகள் மீதான விசாரணை வரும் பிப்ரவரி 5ஆம் தேதி முதல் தினசரி நடைபெறும் என்பதுதான் அந்த அதிர்ச்சிக்குக் காரணம்.
சொத்துக்குவிப்பு வழக்குகளில் தற்போதைய அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, மற்றும் அமைச்சர் பதவியிழந்த பொன்முடி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோரை கீழமை நீதிமன்றங்கள் விடுவித்தன.
இந்த தீர்ப்புகளை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தார். இதை எதிர்த்து பொன்முடி உச்ச நீதிமன்றம் சென்றார். அப்போது உச்ச நீதிமன்றம், ‘ஆனந்த வெங்கடேஷ் போன்ற நீதிபதிகள் கிடைத்ததற்கு நீதித்துறை கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்’ என்று கூறி அவர் விசாரிக்க தடை விதிக்க மறுத்துவிட்டது.
இந்தசூழலில் மீண்டும் அவர் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்துவிட்டதால்… இன்று (ஜனவரி 8) 6 சூமோட்டோ வழக்குகளும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தன.

அப்போது, தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகளில் பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் தினசரி விசாரணை நடைபெறும் என்று நீதிபதி அறிவித்தார்.
அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் ப.வளர்மதி ஆகியோர் மீதான மறு ஆய்வு வழக்குகளில் பிப்ரவரி 5 முதல் 9 வரை தினசரி அடிப்படையில் விசாரணை நடைபெறும்.
ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கில் பிப்ரவரி 12,13 ஆகிய தேதிகளில் விசாரணை நடைபெறும். பொன்முடிக்கு எதிரான வழக்கில் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை விசாரணை நடைபெறும் என்று தேதி அறிவிக்கப்பட்டுள்ளன.
அனைத்து வழக்குகளிலும் பிற்பகல் 3 மணிக்கு விசாரணை தொடங்கும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் விளக்கத்தை பதில் மனுவாகவோ, எழுத்துப்பூர்வமான வாதமாகவோ ஜனவரி 30க்குள் தாக்கல் செய்யலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே திமுக அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான சட்ட நெருக்கடி குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது வீட்டில் இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது திமுக சட்டத்துறை நிர்வாகிகளை ஒற்றுமையாக இருக்கச் சொல்லி முதல்வர் வலியுறுத்தினார். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர்களின் சூமோட்டா வழக்கு விசாரணை தேதிகள் பிப்ரவரி மாதத்தில் வருவதால் அப்போது அநேகமாக நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும்.
அந்த நேரத்தில் அமைச்சர்கள் சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகும் சூழலோ, விரைவாக விசாரித்து தீர்ப்பளிக்கப்படும் நிலையில் அதை எதிர்கொள்ளும் சூழலோ நேரிடலாம். அதனால் திமுகவுக்கு அரசியல் ரீதியாகவும் பெரிய நெருக்கடி காத்திருக்கிறது.
இதை சட்ட ரீதியாக எவ்வாறு எதிர்கொள்வது, சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சர்களும் தனித்தனியாக உச்ச நீதிமன்றம் செல்லலாமா என்று திமுக மேலிடம் தீவிரமாக ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில் பன்னீர் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை மீண்டும் நடைபெறுவது எடப்பாடி தரப்புக்கு குஷியை ஏற்படுத்தியுள்ளது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கனமழை: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்த ஆட்சியர்!
ஆம்னிக்கு அச்சே தீன்: அப்டேட் குமாரு
Judge Ananda Venkatesh on date Ministers in panic
