judge anand vengatesh question to i periyaswamy
அமைச்சர் ஐ.பெரியசாமி மீது பதிவு செய்யப்பட்ட சூமோட்டோ வழக்கில் விசாரணையைத் தொடங்கிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று (பிப்ரவரி 12) மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினார்.
முன்னாள் இன்னாள் அமைச்சர்கள் என 6 பேர் மீது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சூமோட்டோ வழக்குப்பதிவு செய்துள்ளார். இதில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மீதும் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தார்.
2008-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக இருந்தார் ஐ.பெரியசாமி. அப்போது, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வீட்டு வசதி வாரிய வீட்டை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த கணேசனுக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.
இந்த புகாரின் பேரில் ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மீது கடந்த 2012-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.
டிசம்பர் 17, 2012 அன்று, அப்போதைய சட்டப் பேரவைத் தலைவர் பி.தனபால் வழக்குத் தொடர அனுமதி அளித்தார்.
இந்நிலையில், 2016ஆம் ஆண்டு எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் தன்னை விடுவிக்க கோரி ஐ.பெரியசாமி மனு தாக்கல் செய்திருந்தார். அதில், இதுபோன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சபாநாயகரிடம் அனுமதி பெறாமல், ஆளுநரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும் உள்ளிட்ட காரணங்களை கூறியிருந்தார்.
இந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை உச்ச, உயர் நீதிமன்றங்களும் உறுதி செய்தன.
இதையடுத்து இரண்டாவது முறை, ’இதுபோன்று வழக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்க தகுதியான அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறதே தவிர சபாநாயகருக்கு அல்ல’ என்று ஐ.பெரியசாமி மனு தாக்கல் செய்தார்.
இம்மனுவை எற்று விசாரித்த சிறப்பு நீதிமன்றம், இவ்வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி 2023 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் தேதி அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் கடந்த செப்டம்பர் மாதம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தார்.
இந்த வழக்கின் இறுதி விசாரணை பிப்ரவரி 12, 13ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, “ஐ. பெரியசாமி சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதா? பி.வி நரசிம்மராவ் வழக்கின் தீர்ப்பிலிருந்து ஐ.பெரியசாமி வழக்கு எவ்வாறு மாறுபட்டது? கீழமை நீதிமன்றம் ஆவணங்களை ஏன் உரிய முறையில் ஆய்வு செய்யவில்லை?” என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்விகளை எழுப்பினார்.
இதற்கு ஐ.பெரியசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரஞ்சித் குமார், “ஐ.பெரியசாமியை வழக்கில் இருந்து விடுவித்தது சட்டவிரோதம் என்று கருதினால் மீண்டும் விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிடலாம்.
முன்னாள் முதல்வர் கலைஞரின் பாதுகாப்பு அதிகாரிக்கு வீடு ஒதுக்கியதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. முதல்வரின் பரிந்துரையின் பேரில் தான் அமைச்சர்களை நியமிக்க ஆளுநர் ஒப்புதல் வழங்குகிறார்.
அதனால் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவதற்கு அனுமதி வழங்க ஆளுநருக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது. சபாநாயகர் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக ஐ.பெரியசாமி மீது விசாரணை நடத்த அனுமதி வழங்கியிருக்கிறார். அதனால் முறையான அனுமதியில்லாமல் தொடரப்பட்ட வழக்கை விசாரிப்பது நீதிமன்ற நேரத்தையும், பொதுமக்களின் பணத்தையும் வீணடிக்கும் செயலாகும். எனவே, சிறப்பு நீதிமன்றம் ஐ.பெரியசாமியை விடுதலை செய்தது சரியானது” என வாதிட்டார்.
இதை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “தவறு செய்துவிட்டு அரசு அதிகாரி என்பதற்காக சட்டத்தில் இருந்து விலக்கு பெற முடியாது. சட்டம் அனைவருக்கும் சமம்” என தெரிவித்து அரசு தரப்பு வாதத்திற்காக வழக்கை நாளை ஒத்திவைத்தார்.
நாளை லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி வாதாடவுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
அப்பாவு கேட்ட அம்பதாயிரம் கோடி ரகசியம்: அப்டேட் குமாரு
judge anand vengatesh question to i periyaswamy